பாரிஸ் நகரை முற்றுகையிடுவது உறுதி என்று அந்த பிராந்திய விவசாயிகள் தலைவர்கள் உறுதியளித்துள்ளனர். இதனூடாக ஊதியம், வரி மற்றும் விதிமுறைகள் மீதான அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க முடியும் என அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
திங்கட்கிழமை பிற்பகல், FNSEA விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த பாரிஸைச் சுற்றியுள்ள அனைத்துப் பகுதிகளிலிருந்தும் விவசாயிகள் ஒன்று திரண்டு இந்த முடிவுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது. அடுத்த வாரத்தில் முன்னெடுக்கப்படும் இந்த முற்றுகையானது தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரையில் தொடரும் என்றும் இளம் விவசாயிகள் சங்கம் மற்றும் FNSEA தெரிவித்துள்ளது.
பிரான்ஸ் முழுவதும் உள்ள பெரும்பாலான விவசாயிகளை இந்த இரு சங்கங்களுமே பிரதிநிதித்துவம் செய்கின்றன. பாரிஸ் நகரம் நோக்கி நீளும் அனைத்து சாலைகளும் வேளாண் மக்களால் நிரப்பபடும் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதனிடையே இந்த போராட்டம் தொடங்கப்பட்ட Lot-et-Garonne பகுதி விவசாயிகள் பாரிஸ் முற்றுகை உறுதி என குறிப்பிட்டுள்ளனர். அத்துடன் Rungis பகுதியில் அமைந்துள்ள சர்வதேச மொத்த உணவு சந்தையை முற்றுகையிடவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பிரான்ஸில் பல்பொருள் அங்காடிகள் மற்றும் தொழில்முறை கொள்முதல் செய்பவர்களால் உற்பத்திக்கான கொள்முதல் விலைகள் நசுக்கப்படுவதாக வேளாண் மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
அத்துடன் சிக்கலான சுற்றுச்சூழல் விதிமுறைகளும் விவசாயத்திற்கு எதிராக உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளனர். மட்டுமின்றி, பல விவசாய உபகரணங்களுக்கான டீசல் மீதான வரி விலக்கு படிப்படியாக நீக்கப்பட்டதும் தங்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
இதனிடையே, சனிக்கிழமை அதிகாலை, சில சாலைத் தடைகள் நீக்கப்பட்டு, பிரதானசாலைகளில் போக்குவரத்து வழக்கம் போல் இயங்கத் தொடங்கியது. ஆனால் பாரிஸ் முற்றுகை என சமீபத்திய தொழிற்சங்க அறிவிப்பு பிரதமர் கேப்ரியல் அட்டலுக்கு மீண்டும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது என்றே கூறப்படுகிறது.