தற்போது நாம் இருக்கும் காலம் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் காலம்.
கடந்த வாரம், இதுவரை நடந்திராத வகையில், இரான் தனது அண்டை நாடான பாகிஸ்தானின் எல்லையில் உள்ள சில பகுதிகளில் திடீரென ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தியது.
இதற்கு, பாகிஸ்தானும் பதிலடி கொடுத்தது. அப்போது, அது ஏற்கெனவே பதற்றமாக உள்ள எல்லை வழியாக இரான் மீது தாக்குதல் நடத்தியது. இந்தச் சம்பவம், இஸ்ரேல்-ஹமாஸ் மோதலால் ஏற்கெனவே பதற்றத்தால் சூழப்பட்டுள்ள மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மேலும் பிரச்னையை அதிகரித்தது.
இதில், இரானின் நோக்கம் மிகவும் தெளிவாக இருந்தது. அது, இதன் மூலம் நாட்டிற்குள் உள்ள தனது மக்களுக்கும் மற்ற நாடுகளுக்கும் ஒரு செய்தியைச் சொல்ல வேண்டும் என்பதுதான்.
ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக் கழகத்தின் சர்வதேச மற்றும் மத்திய கிழக்கு விவகாரங்களின் பேராசிரியரான வாலி நாஸ்ர் பேசுகையில், “இரான் தனது ராணுவத்தில் ஏவுகணைகள் இருப்பதை மட்டுமல்ல, அவற்றைப் பயன்படுத்தத் தயாராக இருப்பதையும் இந்தத் தாக்குதல்கள் மூலம் காட்டியுள்ளது,” என்றார்.
“காஸா பகுதியில் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே நடந்து வரும் மோதலுக்கு மத்தியில், இரானின் இந்தச் செயல்பாடு, இஸ்ரேலுக்கும் அமெரிக்காவிற்கும் ஒரு செய்தியாக இருக்கலாம்.”
மற்ற ஆய்வாளர்களைப் போலவே, வாலி நாஸ்ரும், “இந்த நேரத்தில் இரான் மேலும் பதற்றத்தை அதிகரிக்க விரும்பாது,” என நம்புகிறார்.
கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேலின் தெற்குப் பகுதியில் ஹமாஸ் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் 1,200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் காஸா மீது பதில் தாக்குதல்களை நடத்தியது. இந்த மோதல், மூன்று மாதங்கள் ஆகியும் நிற்கவில்லை. இதற்கிடையில், இந்தப் பதற்றம் இஸ்ரேல் மற்றும் காஸாவை தாண்டி அப்பகுதி முழுவதும் பரவக்கூடும் என்ற கவலைகள் எழுப்பப்பட்டன.
இதற்கிடையில், லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது தாக்குதல்கள் நடந்தன. ஏமனில் இருந்து ஹூத்தி ஆயுதக்குழுவினர் இஸ்ரேலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் செங்கடல் வழியாகச் செல்லும் கப்பல்களைத் தாக்கத் தொடங்கினர்.
ஆனால் இரானோ, அதன் முக்கிய நட்பு சக்தியான ஹிஸ்புல்லாவோ, இஸ்ரேலை ஆதரிக்கும் அமெரிக்காவோ இந்த விஷயத்தை அதிகரிக்க விரும்பவில்லை. மத்திய கிழக்கில் உள்ள இரான், அதன் நட்பு சக்திகளைக் கொண்டு, ஒரு பினாமி யுத்தமாக இந்த மோதலை நடத்தி வருகிறது. மத்திய கிழக்கில், இரானின் நிலைப்பாடு மி முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.
அந்தப் பிராந்தியத்தில், பல்வேறு நாடுகளில் உள்ள ஆயுதக் குழுக்கள் இரானின் ஆதரவுடன் செயல்படுகின்றன. காஸாவில் ஹமாஸ், லெபனானில் ஹிஸ்புல்லா, ஏமனில் ஹூத்தி குழுக்கள், இராக் மற்றும் சிரியாவில் உள்ள ஆயுதக்குழுக்கள் ஆகியவை அனைத்தும் இரானின் ஆதரவுடன் இயங்கி வருகின்றன.
இந்தக் குழுக்களில் பெரும்பாலானவை மேற்கத்திய நாடுகளால் பயங்கரவாத அமைப்புகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தக் குழுக்களின் ராணுவ பலமே இரான் வழங்கும் ஆயுதங்களும், பயிற்சிகளும்தான்.
இருந்தபோதிலும், இந்த ஒவ்வொரு குழுக்களுக்கும் தங்களுக்கென தனியான குறிக்கோள்களும், நோக்கமும் உள்ளன. சமீப காலமாக, இந்தக் குழுக்குள் அனைத்தும் தீவிரமாகச் செயல்படுகின்றன. இவை சில நேரங்களில், அந்தப் பிராந்தியத்தில் உள்ள பதற்றத்தை மேலும் அதிகரிக்கிறது.
அதனால், இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் பழிவாங்கும் நடவடிக்கையை அவர்கள் எதிர்கொள்ளாமல் இருக்க, இந்த அச்சுறுத்தல்களைக் குறைக்கவும் அவர்கள் தொடர் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையினர் பாகிஸ்தானின் எல்லையை முதலில் தாக்கிய பின், அண்டை நாடுகளான இரானுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதற்றம் தொடங்கியது.
இதில், இரான், பாகிஸ்தான் மீது மட்டும் ஏவுகணை கொண்டு தாக்குதல் நடத்தவில்லை. அது தனது நட்பு நாடுகளான இராக் மற்றும் சிரியா மீதும் தாக்குதல் நடத்தியது. இரான் அதைச் சுற்றியுள்ள நாடுகள்தான் எதிர்ப்பில் இருந்து காக்கும் நாடுகள் என்பதைப் புரிந்திருக்க வேண்டும்.
இரானின் இந்த அதிநவீன, அதி தீவிர படை, இராக்கின் வடக்கில் உள்ள சூர்திஸ்தான் பகுதியில் பல ஏவுகணைகளை ஏவியும், ட்ரோன்களை ஏவியும் தாக்குதல் நடத்தியது. இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட்டின் புலனாய்வு மையத்தைக் குறிவைத்துதான் இந்தத் தாக்குதல்களைள் நடத்தியதாக இரான் தெரிவித்துள்ளது.
அதைத் தவிர, ஐஸ்(இஸ்லாமிய அரசு) உட்பட சிரியாவில் உள்ள கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில், இரான் எதிர்ப்பு பயங்கரவாத குழுக்களைக் குறிவைத்ததாகவும் இரான் தெரிவித்தது. இரானின் கூற்றுப்படி, அதன் ஒவ்வொரு நடவடிக்கைக்குப் பின்னாலும், ஒரு எதிர்வினை காரணமாக இருந்தது.
பாகிஸ்தான் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு விளக்கமளித்த இரான், தென்மேற்கு பாகிஸ்தானில் உள்ள இரான் வம்சாவளியைச் சேர்ந்த பலூச் கிளரச்சியாளர்களைக் குறிவைத்ததாக இரான் கூறியது.
“தாக்குதல் தவிர்க்க முடியாதது” என்று தெஹ்ரான் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான செயத் முகமது மராண்டி கூறுகிறார். கடந்த மாதம் இரானின் சிஸ்தான்-பலூசிஸ்தானில் நடந்த தாக்குதலில் 22 இரான் போலீஸ் அதிகாரிகள் கொல்லப்பட்டதாக அவர்கள் கூறுகிறார்கள்.
இரானின் தெற்குப் பகுதியில் பலூச் தேசியவாதிகளின் தளங்கள் இருப்பதாக இரு தினங்களுக்கு முன்பு பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. அவற்றை ‘பயங்கரவாதிகளின் மறைவிடங்கள்’ என பாகிஸ்தான் கூறியது. பல தசாப்தங்களாக எல்லையின் இருபுறமும் பதற்றம் நீடித்தது, ஆனால் இப்போது அது அதன் மோசமான கட்டத்தை எட்டியுள்ளது.
இராக் மற்றும் சிரியா, காஸாவிற்கு அருகில் உள்ளது. ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் இடையே தற்போது மோதல் நிலவி வருகிறது. பேராசிரியர் மராண்டி பேசுகையில், “இராக் மற்றும் சிரியாவில் நடந்த தாக்குதல்கள், கெர்மானில் நடக்கும் சம்பவங்களுக்கான பதில்” என்றார்.
கடந்த மாதம் அங்கு நடந்த ஒரு அரசியல் படுகொலையை அவர் குறிப்பிடுகிறார். இங்கே, இரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படையின் மூத்த நபரான சையத் ராசி மொசாவி படுகொலை செய்யப்பட்டார்.
இந்த மாதத் தொடக்கத்தில் காசிம் சுலைமானியின் கல்லறை மீது இரட்டைத் தாக்குதல் நடத்தப்பட்டது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இராக்கில் ட்ரோன் தாக்குதலில் அமெரிக்காவால் கொல்லப்பட்ட இரானின் உயர்மட்ட தளபதி சுலைமானி.
இந்தத் தாக்குதலுக்கு இஸ்லாமிய அரசு பொறுப்பேற்றது. 1979இல் இரானில் நடந்த இஸ்லாமிய புரட்சிக்குப் பிறகு நடந்த மிக ஆபத்தான தாக்குதல் இது. இந்தப் பிராந்தியத்தைப் பற்றி விரிவான பகுப்பாய்வு செய்த அம்வாஸ் மீடியாவின் ஆசிரியர் முகமது அலி ஷபானி, “இந்தத் தாக்குதலுக்குக் கூடுதலாக, ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா தளபதிகள் கொல்லப்பட்டதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க இரான் மீது அழுத்தம் இருந்தது,” என்றார்.
மேலும், இனிவரும் காலங்களில் மேலும் பதற்றமான சூழலை காண்போம், என்றார். இரானில் அதிகாரத்தில் இருக்கும் உச்ச மதத் தலைவர்களுக்கு இது கடினமான நேரம். ஏனெனில் நாட்டில் பெண்கள் அதிக சுதந்திரம் கோரி பெரிய இயக்கங்களை நடத்தினர்.
சர்வதேச தடைகளால் இரானின் பொருளாதாரமும் அழுத்தத்தில் உள்ளது. ஊழல் வழக்குகள் மற்றும் தவறான நிர்வாகத்தால் பொருளாதாரம் மந்தமடைந்துள்ளது. இந்த மோதலில் பல முரண்பாடுகள் உள்ளன. அண்டை நாடுகளான இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தானுடன் பாகிஸ்தான் பதற்றம் கொண்டுள்ளது. இருவரும் நிலைமையை உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர்.
எதிரிப் படைகளுக்கு அடைக்கலம் கொடுப்பதாக இரு தரப்பிலும் நீண்ட நாட்களாக குற்றச்சாட்டுகள் இருந்து வருகின்றன.
கடந்த வாரம் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே போர் அச்சுறுத்தல் அதிகரித்து வருவது தெரிகிறது. அத்தகைய சூழ்நிலையில், ஒன்றுக்கு மேற்பட்ட முனைகளில் பதற்றம் ஏற்பட்டால், பிராந்தியத்தில் நீண்ட கால மோதல் ஏற்படலாம்.
இராக்கில் உள்ள இரான் தளங்கள் மீது அமெரிக்காவின் தாக்குதல்களால் இரானின் முக்கியமான உள்கட்டமைப்பு அழிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
செங்கடலில் முக்கியமான கடல் வழித்தடங்கள் மீதான தாக்குதல்களுக்கு பதிலடியாக ஏமனில் ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதல்களை நடத்தியதாக அமெரிக்க பாதுகாப்புத் துறை பென்டகன் தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதல்களில் ஹூத்தி கிளர்ச்சியாளர்களின் ஆயுதக் கையிருப்பில் நான்கில் ஒரு பங்கு அழிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இருந்தபோதிலும், இரானும் அதன் நட்பு நாடுகளும் தோல்விகளைவிட வெற்றிகளைப் பெறுவதாக நம்புகின்றன. காஸாவில் பாலத்தீனர்களுடன் நிற்பது வளைகுடா நாடுகளில் இரானின் புகழை அதிகப்படுத்தியுள்ளது. ஏமனின் ஹூத்தி கிளர்ச்சியாளர்களை தற்போது உலகமே பார்த்துக்கொண்டிருக்கிறது.
சர்வதேச விவகாரங்கள் தொடர்பான சிந்தனைக் களமாகச் செயல்படும் சத்தம் ஹவுஸில் மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்காவுக்கான திட்ட இயக்குநராக இருக்கிறார் சனம் வகில், “இரான் ஒரு பரந்த விளையாட்டை விளையாடுகிறது. காஸாவை கைப்பற்றிய பிறகு இஸ்ரேல் இன்னும் ஆக்ரோஷமாக மாறக்கூடும் என்று உணர்கிறது. எனவே அதுவொரு நீண்ட போரை எதிர்பார்க்கிறது, தயாராகிக் கொண்டிருக்கிறது,” என்றார்.
இரானின் நீண்ட கால இலக்குகளில் ஒன்று அமெரிக்காவை அதன் கொல்லைப்புறத்தில் இருந்து விலக்கி வைப்பது. மேலும், அது இஸ்ரேல், அமெரிக்காவுடன் நேரடி மோதலைத் தவிர்க்க வேண்டும்.