பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மாவீரர் பணிமனையின் ஏற்பாட்டில் பிரான்சு மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வு 22.11.2015 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு கிளிச்சிப் பகுதியில் மிகவும் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.
இந்நிகழ்வில், மாவீரர் திருஉருவப்படத்துக்கான ஈகைச்சுடரினை 1995 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் வீரச்சாவடைந்த லெப்ரினன்ட் நாதன் அவர்களின் பெற்றோர் ஏற்றிவைக்க, மலர்வணக்கத்தை 2000 ஆம் ஆண்டு பருத்தித்துறையில் வீரச்சாவடைந்த லெப்ரினன்ட் தமிழ்முதல்வனின் தாயார் செலுத்தினார்.
பொதுச்சுடரினை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு செயற்பாட்டாளர் மகேஸ் ஏற்றிவைத்தார்.
தொடர்ந்து மாவீரர்கள், படுகொலை செய்யப்பட்ட மக்கள்நினைவாக கிளிச்சியில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபி முன்பாகவும் மலர்வணக்கம், சுடர்வணக்கம் என்பன இடம்பெற்றன.
தொடர்ந்து அரங்க நிகழ்வுகள் ஆரம்பமாகின. அரங்க நிகழ்வுகளாக எழுச்சி நடனங்கள், பேச்சு, தனிநடிப்பு என்பன இடம்பெற்றன.
மதியபோசனத்தைத் தொடர்ந்து, மாவீரர் பெற்றோர் மற்றும் உரித்துடையோர் மேடையில் மதிப்பளிக்கப்பட்டனர்.
நிகழ்வின் நிறைவாக நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடல் ஒலிக்க அனைவரும் கைகளைத் தட்டி நின்றனர்.
தமிழரின்தாகம் தமிழீழத் தாயகம் என்னும் தாரகமந்திரத்துடன் நிகழ்வுகள் யாவும் நிறைவுகண்டன.