இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்களுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக மாக்னிட்ஸ்கி தடைகளை விதிக்குமாறு தற்போதைய சிறிலங்கா அரசாங்கத்திடம் பிரித்தானியாவின் தொழிற்கட்சி கோரியுள்ளது.
அதேநேரம், இலங்கையில் உள்ள தமிழ் மக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எதிராக தொடரும் மனித உரிமை மீறல் நடவடிக்கைகள், முற்றாக நிறுத்தப்பட வேண்டுமெனவும் அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் சுகாதார மற்றும் சமூக விவகாரங்களுக்கான நிழல் செயலாளர் வெஸ் ஸ்ட்ரீடிங் வலியுறுத்தியுள்ளார்.
தைத்திருநாள் வாழ்த்து
தைத்திருநாளை முன்னிட்டு வெஸ் ஸ்ட்ரீடிங் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் இதனை தெரிவித்துள்ளார். இது குறித்து அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, பிரித்தானியா மற்றும் உலகெங்கும் உள்ள தமிழர்களுக்கு எனது தைத்திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். இந்த அறுவடை திருநாளில், குடும்பங்கள் ஒன்றிணைந்து தமிழ் கலாச்சாரத்தின்படி கொண்டாட்டங்களை முன்னெடுப்பார்கள்.
இந்த நிலையில், எமது பொருளாதார வளர்ச்சியில் தமிழர்களின் பங்களிப்பை நினைவு கூற விரும்புவதோடு, நன்றி தெரிவிக்கவும் கடமைப்பட்டுள்ளேன். இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான போரினால் பாதிக்கப்பட்ட பலர் பிரித்தானியாவுக்கு குடிபெயர்ந்தார்கள்.
தமிழ் மக்களுக்கான ஆதரவு
இலங்கையில் மனித உரிமைகளை மீறும் வகையில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் கடந்த காலத்துடன் மட்டுப்படுத்தப்படவில்லை. இதனால் நான் தமிழ் மக்களுக்காக தொடர்ந்தும் குரல் கொடுத்து வருகிறேன்.
உண்மை, பொறுப்புக்கூறல் மற்றும் நீதிக்காக தொடர்ந்தும் குரல் கொடுப்பேன். அத்துடன், தமிழ் மக்களுக்கான சமாதானம் மற்றும் நல்லிணக்கத்துக்காகவும் பணியாற்றுவேன். எமது நாடாளுமன்றத்திலும் ஜெனிவாவிலும் இந்த விடயம் தொடர்பில் நான் குரல் கொடுப்பேன்.
உலக தமிழ் மக்கள் அனைவரும் தைத்திருநாள் கொண்டாட்டங்களை முன்னெடுக்கும் இந்த தருணத்தில், நாம் தொடர்ந்தும் உங்களுடன் இருப்போம் என்பதை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.