ஆண்டு என்னும் அறிவியல் தமிழின் வாழ்த்துகள்
நன்றியுணர்வு சார்ந்த உலகின் ஒரேயொரு பண்டிகை தைப்பொங்கலே. தமிழர்களின் அறவுணர்வை மட்டுமல்லாது அறிவியல் மீதான ஆழ அகலங்களையும் இப்பண்டிகை எடுத்தியம்புகிறது.
கதிரவனைப் பற்றிய சரியான புரிதலின்றி மேற்குலகம் இருந்த காலத்தில், உலகின் இயக்கத்திற்கும் இருப்பிற்கும் கதிரவனே முதன்மையானவன் என்ற கருத்துண்மையை அறிந்து, நன்றி தெரிவித்து, பண்டிகை கொண்டாடியவர்கள் தமிழர்கள்.
வானியல் முறைமையிலும் உச்சந்தொட்ட தமிழர்கள், மேச (ஆடு) உடுத்தொகுதிக்குள் கதிரவன் உட்புகுதலை ஆண்டின் தொடக்கமாகக் கொண்டார்கள். ஆடு பிறத்தலின் நீட்சியே ஆண்டுப் பிறப்பாகியது. ஆடு உடுத்தொகுதிக்குள் தைமாதமே கதிரவன் உட்புகுகிறான்.
திண்ணிலை மருப்பின் ஆடுதலை யாக
விண்ணூர்பு திரிதரும் வீங்குசெலல் மண்டிலத்து…
கி.பி 285 இல் பாடப்பட்ட நெடுநல்வாடை என்னும் சங்க இலக்கியம் இதற்குச் சான்று பகிர்கிறது.
தொன்மை வரலாறும் திண்மைச் சான்றுகளும் கொண்ட இந்தத் தைத்திருநாள் தமிழர்களின் அறிவியற் பெருமைகளுள் ஒன்று.
இப்பெருமைமிகுத் திருநாளில் தமிழ்சார்ந்து இயங்கும் அனைத்து உள்ளங்களையும் வாழ்த்துவதில் பேருவகையடைகிறது தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம்.
பிறந்திருக்கும் இப்புதிய தமிழாண்டு, தமிழ்மொழியின் அடியொற்றி விடுதலைக்கான பெரும்பாய்ச்சலுக்கான நல்லாண்டாய் அமைய வாழ்த்துகள்.
பொங்குக இன்பம் இப்புத்தாண்டில்!
சா. நாகயோதீஸ்வரன்
பொறுப்பாளர்
தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் – பிரான்சு