இந்தியப் பெருங்கடலில் பரஸ்பர ஒத்துழைப்பை அதிகரிக்க, அந்தப் பகுதியின் அனைத்து நாடுகளையும் இணைத்து, கோஷ்டி பூசல்களுக்கு முடிவு கட்ட வேண்டும் என்று மாலத்தீவில் அதிபர் முகமது முய்சு தலைமையில் பொறுப்பேற்றுள்ள புதிய அரசு கூறியுள்ளது.
மாலத்தீவு அதிபர் முகமது முய்சுவின் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சீனாவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தியப் பெருங்கடல் பிராந்திய கூட்டமைப்பில் (Indian Ocean Region Forum) மாலத்தீவின் துணை அதிபர் ஹுசைன் முகமது லத்தீப் இதனைத் தெரிவித்தார்.
இந்தியப் பெருங்கடலில் இந்தியாவின் செல்வாக்கைக் குறைக்கும் நோக்கத்தில் சீனா இந்த கூட்டமைப்பை உருவாக்கியதாக நம்பப்படுகிறது.
கடந்த ஆண்டு, மாலத்தீவு இந்த கூட்டத்தில் பங்கேற்க மறுத்துவிட்டது. அப்போது, மாலத்தீவு அதிபராக இந்தியாவுக்கு நெருக்கமானவராகக் கருதப்படும் இப்ராகிம் முகமது சோலி இருந்தார்.
இந்தியப் பெருங்கடலில் வலுவான உறவுகளைக் கட்டியெழுப்புவதற்கும், நிபுணத்துவத்தைப் பகிர்ந்து கொள்வதற்கும், தாராளமயமான மற்றும் வளமான பிராந்தியமாக அதனை மாற்றுவதற்கும் தோளோடு தோள் நின்று பணியாற்ற மாலத்தீவு தயாராக இருப்பதாக ஹுசைன் முகமது லத்தீப் கூறினார்.
அவர் கூறுகையில், “2011ம் ஆண்டில் இருந்து இந்தியப் பெருங்கடல் மற்றும் பிற பிராந்தியங்களில் மற்ற நாடுகள் உடனான உறவை வலுப்படுத்தி, அமைதியான ஒத்துழைப்பிற்காகவும் வளர்ச்சிக்காகவும் மாலத்தீவு முயற்சிகள் எடுக்கிறது.” என அவர் தெரிவித்தார்.
அவர் தனது உரையில் கூறுகையில், “இந்தியப் பெருங்கடலில் ஒத்துழைப்பு என்பது அனைவரையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். யாரும் பாரபட்சம் காட்டக்கூடாது, பிராந்தியத்தில் உள்ள அனைத்து நாடுகளும் இதில் ஈடுபட வேண்டும்” என அவர் கூறினார்.
இது இந்தப் பகுதியில் உள்ள நாடுகளுக்கு இடையேயான பிரிவுவாதத்தை முடிவுக்குக் கொண்டு வந்து வளர்ச்சி மற்றும் ஒத்துழைப்பை விரைவுபடுத்த உதவும் என்றும் முகமது லத்தீஃப் கூறினார்.
மாலத்தீவு துணை அதிபர் பேசியதன் முக்கியத்துவம் என்ன?
மாலத்தீவு துணை ஜனாதிபதி ஹுசைன் முகமது லத்தீப்பின் அறிக்கை முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. ஏனெனில், முகமது முய்சுவின் அரசாங்கம் சார்பாக சீனாவிற்கு சென்றுள்ள முதல் மூத்த அரசியல் தலைவராக முகமது லத்தீப் பார்க்கப்படுகிறார்.
மாலத்தீவில் சீனா அதிக அளவில் முதலீடு செய்துள்ளது. மாலத்தீவு முன்னாள் அதிபர் அப்துல்லா யாமீன் ஆட்சிக் காலத்தில் இந்த அதிக அளவில் முதலீடு செய்யும் நடைமுறை தொடங்கியது.
புதிய அதிபர் முகமது முய்சு, முன்னாள் அதிபர் அப்துல்லா யாமீனுக்கு நெருக்கமானவர். சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் இந்தியாவுக்கு நெருக்கமானவராக கருதப்படும் முன்னாள் அதிபர் இப்ராஹிம் முகமது சோலியை முய்சு தோற்கடித்திருந்தார்.
முகமது முய்சு தேர்தல் பிரசாரத்தில் இருந்தே அங்குள்ள இந்திய ராணுவ வீரர்களை திருப்பி அனுப்புவது குறித்து பேசி வருகிறார். ‘இந்தியாவே வெளியேறு’ என்ற முழக்கம் அவரது தேர்தல் பரப்புரையில் முக்கியப் பங்கு வகித்தது. இந்தியா தனது படைகளை வாபஸ் பெற ஒப்புக்கொண்டதாக சில நாட்களுக்கு முன்பு முகமது முய்சு கூறியிருந்தார்.
முய்சுவின் அரசாங்கம் பொறுப்பேற்ற பிறகு, மாலத்தீவில் சீனாவின் செல்வாக்கு மீண்டும் அதிகரிக்கக் கூடும் என்றும், அப்துல்லா யாமீனின் அரசாங்கம் அகற்றப்பட்ட பின்னர் மாலத்தீவில் குறைந்திருந்த முதலீடுகள் மீண்டும் அதிகரிக்கலாம் என்றும் இந்தியா கவலைப்படுகிறது.
மாலத்தீவு நீண்ட காலமாக இந்தியாவின் செல்வாக்கின் கீழ் இருந்து வந்தது. இந்தியப் பெருங்கடலின் பெரும் பகுதியைக் கண்காணிக்கும் வாய்ப்பை இந்தியாவிற்கு மாலத்தீவு வழங்குகிறது.
ஆனால், அதே நேரம் இந்தியாவின் போட்டியாளரான சீனாவும் இந்தியாவுக்கு நெருக்கமான இந்தப் பகுதியில் தனது செல்வாக்கை அதிகரிக்க தொடர்ந்து முயற்சித்து வருகிறது.
இந்திய பெருங்கடலில் என்ன நடக்கிறது?
கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறியதால், இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனா கைப்பற்றியுள்ளது. மேலும், தனது இராணுவத் தளத்தை கிழக்கு ஆப்பிரிக்க நாடான ஜிபூட்டியில் (Djibouti) சீனா அமைத்துள்ளது.
கடந்த வெள்ளியன்று, சீனாவின் தென்மேற்கு யுனான் மாகாணத்தின் தலைநகரான குன்மிங்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தியப் பெருங்கடல் பிராந்திய கூட்டமைப்பில், மாலத்தீவு துணை அதிபர் ஹுசைன் முகமது லத்தீஃப், கடந்த பத்தாண்டுகளில் மாலத்தீவின் வளர்ச்சிக்கு சீனா முக்கிய பங்களிப்பைச் செய்து வருகிறது என்று கூறினார்.
அவர் கூறுகையில், “அதிபர் முய்சு சீனாவுடன் உறவுகளை உருவாக்குவதற்கும் பொதுவான நலன்களை அடைவதற்கும் ஆதரவாக இருக்கிறார். சீனாவுடன் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான புதிய வாய்ப்புகளை நாங்கள் ஆராய்ந்து வருகிறோம்.” என அவர் தெரிவித்தார்.
செய்தி நிறுவனமான பி.டி.ஐ. வெளியிட்ட செய்தியின்படி, முகமது லத்தீப்பின் உரையின் சிறப்பு அம்சம் என்னவென்றால், அவர் சீனாவிற்கும் மாலத்தீவிற்கும் இடையிலான இருதரப்பு உறவுகளைப் பற்றி பேசினார் என்பதுதான். ஆனால் சீனாவின் பெல்ட் மற்றும் ரோடு திட்டம் பற்றி குறிப்பிடவில்லை. இந்த திட்டத்தின் கீழ் பல வளர்ச்சி திட்டங்கள் மாலத்தீவில் நடந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியப் பெருங்கடல் பிராந்திய கூட்டமைப்பு என்பது என்ன?
மாலத்தீவு துணை அதிபர் இந்தக் கூட்டத்தில் கூறுகையில், இவை அனைத்தும் ‘சீனா சர்வதேச வளர்ச்சி ஒத்துழைப்பு நிறுவனம்’ (China International Development Cooperation Agency) எனப்படும் CIDCA மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார். இது சீன கம்யூனிஸ்ட் கட்சியின் ஒரு அங்கமாகும்.
சீனாவின் முன்னாள் துணை வெளியுறவு அமைச்சரும், இந்தியாவுக்கான தூதருமான லுவோ சாவ்ஹுய், இந்த அமைப்பின் தலைவராக உள்ளார். இந்த ஆண்டு கூடியுள்ளது இந்த மன்றத்தின் இரண்டாவது கூட்டமாகும்.
பிடிஐ செய்தியின்படி, கடந்த ஆண்டு 19 நாடுகள் இந்த மன்றத்தில் பங்கேற்றதாக லுவோ கூறியிருந்தார்.
பாகிஸ்தான், நேபாளம், இலங்கை, பங்களாதேஷ், மாலத்தீவுகள், இந்தோனேசியா, மியான்மர், ஆப்கானிஸ்தான், ஈரான், ஓமன், தென்னாப்பிரிக்கா, கென்யா, மொசாம்பிக், தான்சானியா, சீஷெல்ஸ், மடகாஸ்கர், மொரிஷியஸ், ஜிபூட்டி மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் கடந்த வருடம் நடந்த கூட்டத்தில் பங்கேற்றதாக லுவோ கூறினார்.
இருப்பினும், பின்னர் ஆஸ்திரேலியா மற்றும் மாலத்தீவுகள் இதில் பங்கேற்க மறுத்துவிட்டன. அந்த கூட்டத்திற்கு இந்தியா அழைக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த கூட்டத்தில் தனது பிரதிநிதிகள் யாரும் பங்கேற்கவில்லை என்று ஆஸ்திரேலியா கூறியிருந்தது. அதேநேரம், இதில் பங்கேற்க முடியாதது குறித்து ஏற்கனவே தெரிவித்துவிட்டதாக மாலத்தீவு கூறியிருந்தது. இந்த ஆண்டு சீனா, 20 நாடுகள் மற்றும் பல நிறுவனங்களில் இருந்து சுமார் 300 விருந்தினர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டதாக அந்த அமைப்பு கூறுகிறது. இந்தியப் பெருங்கடலில் இந்தியாவின் செல்வாக்கைக் குறைக்கவே சீனா இந்த கூட்டமைப்பை தொடங்கியுள்ளதாக நம்பப்படுகிறது.
இந்தத் கூட்டமைப்பில் இந்தியாவிற்கு ஆதரவான பல அமைப்புகள் உள்ளன. அவை நீண்ட காலமாக செயல்பட்டு வருகின்றன. உதாரணமாக 23 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட ‘இந்தியப் பெருங்கடல் ரிம் குழு’ (IORA) போன்றவை. 1997 இல் உருவாக்கப்பட்ட இந்த குழுவில் சீனாவும் ஒரு உறுப்பினராகும்.
IORAவைத் தவிர, 2015ல் மோடி அரசாங்கம் ‘பிராந்தியத்தில் உள்ள அனைவருக்கும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி எனும் சாகர் (SAGAR) திட்டத்தை அறிமுகப்படுத்தியது. கூடுதலாக, இந்தியக் கடற்படை ‘இந்தியப் பெருங்கடல் கடற்படை கருத்தரங்கையும்’ (IONS) உருவாக்கியுள்ளது. இது அந்தப் பிராந்தியத்தின் கடற்படைகளுக்கு இடையே கடல்சார் ஒத்துழைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
மாலத்தீவு – இந்தியா உறவு எப்படி உள்ளது?
இந்திய இராணுவ வீரர்களை தங்கள் நாட்டிலிருந்து திரும்பப் பெறுவதற்கான கோரிக்கையை இந்திய அரசு ஏற்றுக்கொண்டதாக மாலத்தீவு அரசு சமீபத்தில் தெரிவித்திருந்தது.
ஐ.நாவின் காலநிலை மாற்றத்திற்கான கருத்தரங்கான சிஓபி-28 மாநாட்டின் போது பிரதமர் மோடியும், அதிபர் முய்சுவும் சந்தித்தனர். இந்தியா 2010 மற்றும் 2013-இல் இரண்டு ஹெலிகாப்டர்களையும், 2020-இல் ஒரு சிறிய விமானத்தையும் மாலத்தீவுக்கு பரிசாக வழங்கியது. இந்த விமானங்கள் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகள் மற்றும் மருத்துவ அவசர நிலைகளில் பயன்படுத்தப்படும் என்று இந்தியா கூறியிருந்தது.
2021-ஆம் ஆண்டில், இந்த ஹெலிகாப்டர்கள் மற்றும் விமானங்களை இயக்க சுமார் 75 இந்திய வீரர்கள் மாலத்தீவில் இருப்பதாக மாலத்தீவு பாதுகாப்புப் படையினர் தெரிவித்தனர். மாலத்தீவுக்கு இந்தியா ராணுவ தளவாடங்களையும் வழங்குகிறது. மேலும், மாலத்தீவு கடற்படைக்கு கப்பல் கட்டும் தளம் அமைக்க இந்தியாவும் உதவி வருகிறது.
இந்தியாவும் சீனாவும் மாலத்தீவில் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்ட முயற்சிக்கின்றன. இந்த தேர்தலில் வெற்றி பெற்றுள்ள அதிபர் முய்சு தலைமையிலான கூட்டணி சீனாவின் பக்கம் சாய்ந்துள்ளதாக நம்பப்படுகிறது. இந்தியா மற்றும் மாலத்தீவுகள் 60 ஆண்டுகளுக்கும் மேலாக வெளியுறவு, இராணுவ, பொருளாதார மற்றும் கலாச்சார உறவுகளைக் கொண்டுள்ளன.
மாலத்தீவுகள் இந்தியப் பெருங்கடலில் சுமார் 1,200 தீவுகளைக் கொண்ட ஒரு நாடாகும். அதன் மக்கள் தொகையில் 98 சதவீதம் பேர் சுன்னி முஸ்லிம்கள். மாலத்தீவு குடியுரிமையை யாராவது விரும்பினால், அவர் முஸ்லிமாக இருப்பது அவசியம்.
மாலத்தீவு ஐந்து லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட ஒரு குடியரசாகும். இந்தியா மற்றும் சீனாவின் பார்வையில் இந்தியப் பெருங்கடலில் புவியியல் ரீதியாக முக்கியமான இடத்தில் மாலத்தீவு இருப்பதாக பார்க்கப்படுகிறது. மாலத்தீவுகள் நீண்ட காலமாக இந்தியாவிடமிருந்து பொருளாதார மற்றும் இராணுவ உதவிகளைப் பெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.