13ம் திருத்தத்தின் கீழ் அதிகாரப் பகிர்வு ஏற்கனவே இடம்பெற்றுள்ளது என்றும், மாகாண மட்ட பொருளாதார கட்டுமானத்துக்கு இதுபோதுமானது என்றும் வடக்கில் நின்று பொய்யுரைத்துள்ள ரணில், ஜப்பானின் வளர்ச்சியை சமஷ்டிக்கு எதிரானதாக உதாரணம் காட்டியிருப்பது தமிழரின் தலையில் மீண்டும் எண்ணெய் தடவும் முயற்சிகள் ஆகும்.
இலங்கையில் தேர்தல் கால காய்ச்சல் ஆரம்பமாகிவிட்டது. அல்லது தேர்தல் காய்ச்சல் பரவத் தொடங்கிவிட்டது என்றும் சொல்லலாம்.
வழக்கமாக கண்டி தலதா மாளிகையில் ஆசி நூல் கட்டுவதுடன் அல்லது அநுராதபுரத்தில் வெள்ளரச மரத்தின் கீழ் வழிபாட்டுடன் இது தொடங்கும். ஆனால் இம்முறை ஏதோ ஒரு எதிர்பார்ப்புடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனை வடக்குக்கு கொண்டு சென்றுள்ளார்.
2024ம் ஆண்டு பிறந்து நான்காம் நாள் தமது ஜனாதிபதி தேர்தலுக்கான பயணத்தை வடக்கின் பொருளாதார அபிவிருத்திக்கான நிகழ்வுகள் என்ற பெயரில் கட்டியம் கூறி ஆரம்பித்து வைத்துள்ளார் இவர்.
தமிழர் பிரச்சனைகளுக்கு கடந்த வருட பெப்ரவரி மாத நான்காம் திகதியை இலங்கையின் 75வது சுதந்திர தினத்துக்கு முன்னர் தீர்வு காணப்படுமென ஒரு வருடத்துக்கு முன்னர் வழங்கிய உறுதிமொழிகளை காற்றில் பறக்க விட்டவர். இந்த வருட முதல் வாரத்தில் தமிழர் தாயகம் சென்று நிறைவேற்ற முடியாத தமது அடுத்த உறுதிமொழிகளை அங்கிருந்து வீசியுள்ளார்.
இவரது தாய் மாமனாரான றஞ்சித் விஜேவர்த்தனவின் பத்திரிகைகள் ரணிலின் புதிய உறுதிமொழிகளை வரிக்கு வரி பிரசுரித்து பிரபல்யப்படுத்தின. இதுவொன்றும் எதிர்பாராத அல்லது தற்செயலானவை அல்ல.
அடுத்த ஐந்து வருடங்களில் வடக்கில் முழுமையான அபிவிருத்தி என்று ரணில் கூறி வருவது, அடுத்த ஜனாதிபதித் தேர்தலின் பின்னரான ஆட்சிக் காலத்தை குறிப்பிடுகிறது என்பதைப் புரிந்து கொண்டால், வரப்போகின்ற ஜனாதிபதித் தேர்தலின் முடிவை இவர் தமக்குரியதாக கணித்துள்ளார் என்பதை அறிவதற்கு நேரம் எடுக்காது.
கடந்த வருடம் கோதபாயவினால் ஜனாதிபதியாக நியமனம் செய்யப்பட்டவர். பின்னர் நாடாளுமன்றத்தால் அந்தப் பதவியை ஊர்ஜிதம் செய்தவர். அன்றிலிருந்து இன்றுவரை பதின்மூன்றாம் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவேன் என்று வாய்க்கு வாய் கூறி வருபவர். பதின்மூன்றாம் திருத்தத்தின் மூலம் வழங்கப்பட்ட அதிகாரங்கள் மாகாண மட்டத்தில் வலுவான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப போதுமானவையென்று வடக்கிலிருந்தவாறு கடந்த வாரம் கூறி அனைவருக்கும் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளார்.
பதின்மூன்றாம் திருத்தத்தின் கீழ் வழங்கப்பட வேண்டிய காணி மற்றும் காவல்துறை அதிகாரங்கள் இதுவரை மத்திய அரசிடமே உள்ளன. மாகாணங்களைப் பொறுத்தளவில் இவை இரண்டும் ஏட்டுச் சுரைக்காய்கள். எக்காரணம் கொண்டும் இவ்விரு அதிகாரங்களும் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட மாட்டாது என்று இதுவரை ஆட்சிக்கு வந்த ஒவ்வொரு அரசுகளும் ஏட்டிக்குப் போட்டியாகக் கூறி அதனை செயலிலும் நிரூபித்து வந்துள்ளன.
காணி அதிகாரத்தை வழங்க முடியும் ஆனால் காவல்துறை அதிகாரங்கள் கிடையாது என்று சில வாரங்களுக்கு முன்னர் தமிழர் பிரதிநிதிகளிடம் ரணில் தெரிவித்திருந்தார். ஆனால், சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை மீற முடியாத இவர் பின்னர் அமைதியாக அதனை மறந்தவராகி விட்டார்.
மாகாண பொருளாதார வளர்ச்சிக்கு பதின்மூன்றாம் திருத்தத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரம் போதுமானதென்று இப்போது இவர் கூறுவதானது, காணி மற்றும் காவல்துறை அதிகாரம் இல்லாமலே மாகாண பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியுமென்ற அவரது கொள்கை விளக்கமாக அமைந்துள்ளது. அப்படியெனில் இவ்விரு அதிகாரங்களும் மாகாண சபைகளுக்கு தேவையில்லை என்பதை முடிவாக ஏற்றுக் கொள்ள வேண்டுமென தமிழ் மக்களுக்கு அவர்கள் மண்ணிலிருந்து அவர் நேரடியாகக் கூறியதாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
தமிழர் பிரச்சனைக்கு அரசியல் ரீதியான தீர்வை விரும்பாத இவர், பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதே தீர்வு என்பதை மறைமுகமாகவும் நேரடியாகவும் கூறியுள்ளார். இதனாற்தான் போலும், தமிழர் உரிமைகளை முன்னிறுத்தி அரசியல் செய்யும் தமிழ்த் தேசிய கட்சிகளின் தலைவர்களும் பிரதிநிதிகளும் இவரது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை தவிர்க்க நேர்ந்துள்ளது.
தமது வடபகுதி விஜயத்தின்போது இவர்களின் சமூகமின்மையை ரணில் பெரிதாகக் காட்டிக்கொள்ளவில்லை. வடக்கை அபிவிருத்தி செய்து பொருளாதார மீட்சி ஏற்படுத்த அனைவருக்கும் விடுத்த அழைப்பை தமிழ்த் தேசியவாதிகள் புறக்கணித்து விட்டனர் என்று ஜனாதிபதி தேர்தல் பரப்புரை காலத்தில் கூறுவதற்கு இது அவருக்கு ஒரு வாய்ப்பாகவும் அமையக்கூடும்.
இதற்கு முன்னோட்டமாகவே வடக்கு மாகாணத்தை தனித்துவமான பொருளாதார மையமாக கட்டியெழுப்ப முடியுமென்றும், வடக்கை புதுப்பிக்கத் தக்க வலுசக்தி மையமாக்க முடியுமென்றும் அறைகூவியுள்ள ரணில், இதற்குத் தேவையான அனைத்து வளங்களும் இங்கு உள்ளனவென்றும் தெரிவித்து அதற்குப் போதுமான அதிகாரப் பகிர்வு, ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதாகக் கூறியிருக்கும் அப்பட்டமான பொய்யை எவ்வகையிலும் ஜீரணிக்க முடியாது.
அதிகாரப் பகிர்வு வழங்க வேண்டியதை அடிப்படையாகக் கொண்டு நல்லாட்சிக் காலத்தில் தாம் பிரதமராக இருந்தபோது மேற்கொள்ளப்பட்ட புதிய அரசியலமைப்பு வரைபுக்கு என்ன நிகழ்ந்தது என்பதை இவரைத் தவிர எவராலும் கூற முடியாது.
இனி வரப்போகும் புதிய அரசாட்சி அமைப்பில் அதிகாரப் பகிர்வை உள்ளடக்கிய விடயங்களுக்கு தீர்வு காணப்படுமென அண்மையில் தமிழர் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற சிறப்புச் சந்திப்பில் எடுத்துக் கூறியவரும் இவரே.
இதனை மறந்து, போதுமான அதிகாரப் பகிர்வு ஏற்கனவே இடம்பெற்றுள்ளது என்று இப்போது கூறியுள்ளாரென்றால், அதிகாரப் பகிர்வு என்பது இனிமேல் இடம்பெறப் போவதில்லையென்றே அர்த்தம் கொள்ள வேண்டியுள்ளது.
இவரது உரையின் இன்னொரு பகுதி ஆழமான புரிதலுக்கானது. அந்தப் பகுதி பின்வருமாறு: ‘நாம் ஜப்பான் தொடர்பில் கவனம் செலுத்தினால், ஜப்பான் சமஷ்டி ஆட்சியுள்ள ஒரு நாடு அல்ல. ஆனால் அதன் அனைத்து மாகாணங்களும் அபிவிருத்தி அடைந்துள்ளன. கொரியா, ஐக்கிய இராச்சியம், ஸ்கொட்லாந்து ஆகிய நாடுகளும் அந்த வளர்ச்சியை எட்டியுள்ளன. அப்படியானால் ஏன் ஒரு நாடாக எமக்குரிய பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது?” என்று கேள்வி எழுப்பியுள்ளார் ரணில்.
இந்தச் சொல்லாட்சி வழியாக சமஷ்டி முறையிலான தீர்வைக் கோரும் தமிழர் தரப்புக்கு அவர் கூறியிருக்கும் பதில், அது கிடையாது என்பது. அதாவது, கனடாவையும், சுவிற்சர்லாந்தையும் (சமஷ்டி ஆட்சி நாடுகள்) உதாரணத்துக்கு கொண்டு வராதீர்கள், ஒரே நாடாக வளர்ச்சியடைந்த ஜப்பான் போன்ற நாடுகளைப் பாருங்கள் என்பதுதான்.
மாகாண சபை நிர்வாகத்தையே இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் கீழான 13ம் திருத்தம் உள்ளடக்கியது. இதற்கு காணி மற்றும் காவல்துறை அதிகாரம் வழங்கப்பட வேண்டுமென இது தெரிவிக்கிறது. இவை இரண்டுமே இல்லாத மாகாண நிர்வாகம் இன்று மக்களால் தெரிவானவர்களது கைகளில் இல்லை. அரசாங்கத்தின் ஏஜன்டுகளாக இயங்கும் ஆளுனர்களே இதனைப் பரிபாலிக்கின்றனர்.
நடைமுறையில் இல்லாத அதிகாரப் பகிர்வு ஏற்கனவே இடம்பெற்றுள்ளது என்று பொய்யுரைக்கும் ஜனாதிபதி ரணில், சமஷ்டி முறைத் தீர்வு சாத்தியப்படாது என்றும் வரையறுத்துள்ளார். சிங்களத் தரப்புக்கு மகிழ்வூட்டும் கருத்துகளை தமிழர் தாயகத்தில் நின்றவாறு கூறி பௌத்த மேலாதிக்கத்தின் வாக்குகளை கொள்முதல் செய்யும் நோக்கத்துடனேயே தமது தேர்தல் பரப்புரையை இவர் ஆரம்பித்துள்ளார் போலத் தெரிகிறது.
ஜனாதிபதித் தேர்தலில் ஏற்கனவே ஒரு தடவை சூடு கண்ட இந்தப் பூனை அடுத்த இரண்டு தடவைகள் அந்த அடுப்புக்கு முன்னால் செல்லாது தவிர்த்துக் கொண்டது. கடந்த வருடம் அறகலய கோதபாயவுக்கு வழங்கிய தண்டனையால் கிடைத்த வாய்ப்பு ரணிலுக்கான ஜனாதிபதிப் பதவி. அந்தக் கதிரையை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு தம் வசமாக்க ரணில் திட்டமிடுவது புரிகிறது.
வடக்கிலிருந்து புறப்பட்டிருக்கும் ரணிலின் ஜனாதிபதித் தேர்தல் ரயில், கிழக்கு – மேற்கு என்று ஓடி தெற்கை அடைவதற்கு முன்னர், தமிழர் தாயகம் தனது மௌனத்தைக் கலைத்து தமிழரின் அரசியல் அடையாளத்தை பலப்படுத்தி வலுப்படுத்த வேண்டும். இது சிங்கள மேலாண்மையைப் பலவீனப்படுத்துவதாக இருக்க வேண்டியது காலத்தின் அவசியம்.