இலங்கையில் உண்மைக்கும், ஒற்றுமைக்கும், நல்லிணக்கத்துக்குமான ஆணைக்குழு சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டிருப்பதுடன், 1983 – 2009 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் அல்லது அதன் பின்னர் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்ற மோதலின்போது அல்லது அதனுடன் தொடர்புபட்ட வகையில் இலங்கையில் எங்கேனும் நபருக்கோ அல்லது சொத்துக்கோ ஏற்படுத்தப்பட்ட சேதம், உயிரிழப்பு, மனித உரிமை மீறல் தொடர்பான முறைப்பாடுகள் அல்லது அறிக்கைகள் தொடர்பில் புலனாய்வு செய்து, விசாரணை செய்து, பரிந்துரைகளைச் சமர்ப்பித்தல் என்பன உள்ளடங்கலாகப் பல்வேறு அதிகாரங்களும், பணிகளும் அந்த ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளன.
வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியின் பணிப்புரைக்கு அமைவாக இலங்கையில் உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழு சட்டமூலம் திங்கட்கிழமை (1) வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி இலங்கையில் உண்மைக்கும், ஒற்றுமைக்கும், நல்லிணக்கத்துக்குமான ஆணைக்குழுவைத் தாபிப்பதற்கு ஏற்பாடு செய்தல், அந்த ஆணைக்குழுவின் தத்துவங்கள் மற்றும் பணிகளை எடுத்துக்கூறல், அந்த ஆணைக்குழுவின் விதப்புரைகளின் அமுலாக்கத்தைக் கண்காணித்தல், அதனுடன் தொடர்புடைய சகல நடவடிக்கைகளுக்கும் ஒழுங்குசெய்தல் ஆகியவற்றை இச்சட்டமூலம் உள்ளடக்கியிருக்கின்றது.
இச்சட்டமூலத்தின் பிரகாரம் இலங்கையில் உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழு என அழைக்கப்படும் ஆணைக்குழுவொன்று ஸ்தாபிக்கப்படும். அந்த ஆணைக்குழு கொழும்பில் அமைந்திருப்பதுடன், அதன் அமர்வுகளை நாட்டின் எந்தவொரு பாகத்திலும் நடத்தலாம். அதேபோன்று அவசியமேற்படின் பிராந்திய அலுவலகங்களையும் ஸ்தாபிக்கலாம். ஆணைக்குழு 7 பேருக்குக் குறையாத, 21 பேருக்கு மேற்படாத உறுப்பினர்களைக் கொண்டிருப்பதுடன், அவர்கள் அனைவரும் இலங்கைப் பிரஜைகளாக இருக்கவேண்டும்.
ஐந்து ஆண்டுகள் பதவிக்காலத்தைக்கொண்ட ஆணைக்குழுவானது பால்நிலை உள்ளடங்கலாக நாட்டின் பன்மைத்துவ இயல்பைப் பிரதிபலிக்கக்கூடியவகையில் அமைவதுடன், உறுப்பினர்கள் அனைவரும் சட்டம், மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமானச்சட்டம், வரலாறு, சமூக விஞ்ஞானம், உளவியல், புலனாய்வு, மோதலுக்குப் பின்னரான கற்கை மற்றும் நல்லிணக்கம் போன்ற துறைகளில் கொண்டிருக்கும் அறிவு மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் அரசியலமைப்புப்பேரவையின் பரிந்துரையின் பிரகாரம் ஜனாதிபதியினால் நியமிக்கப்படவேண்டும். ஆணைக்குழு உறுப்பினர்களிலிருந்து அரசியலமைப்புப்பேரவையினால் பரிந்துரைக்கப்படும் மூவரில் ஒருவரை ஆணைக்குழுவின் தவிசாளராக ஜனாதிபதி நியமிக்கவேண்டும்.
ஆணைக்குழுவின் அனைத்து அமர்வுகளும் பகிரங்கமாக நடாத்தப்படவேண்டும் என்பதுடன், அவ்வமர்வுகளில் எல்லோரும் கலந்துகொள்ளமுடியும். இருப்பினும் பாலியல்சார் வழக்குகள், தேசிய பாதுகாப்பு அல்லது பொதுமக்கள் நலனுடன் தொடர்புடைய விவகாரங்கள், தனிநபரின் பாதுகாப்பு முன்னிலைப்படுத்தப்படல், உண்மையைக் கூறுவதற்கு ஏதுவான சூழலை உருவாக்கல் போன்ற சில காரணங்களுக்காக ஆணைக்குழு விரும்பும் பட்சத்தில் அவ்வமர்வில் அதனுடன் தொடர்புபடாத வேறு நபர்கள் பங்கேற்பதைத் தவிர்க்கலாம். ஆணைக்குழுவின் நடவடிக்கைகள் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் நடாத்தப்படவேண்டும்.
மேலும் இந்த ஆணைக்குழுவானது 1983 – 2009 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் அல்லது அதன் பின்னர் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்ற மோதலின்போது அல்லது அதனுடன் தொடர்புபட்ட வகையில் இலங்கையில் எங்கேனும் நபருக்கோ அல்லது சொத்துக்கோ ஏற்படுத்தப்பட்ட சேதம், உயிரிழப்பு, மனித உரிமை மீறல் தொடர்பான முறைப்பாடுகள் அல்லது அறிக்கைகள் தொடர்பில் புலனாய்வு செய்து, விசாரணை செய்து, பரிந்துரைகளை சமர்ப்பிக்கவேண்டும். விசாரணைகளின் பின்னர் பொருத்தமான நபர்களை இழப்பீட்டுக்கான அலுவலகத்துக்கு ஆற்றுப்படுத்துவதுடன், பாதிக்கப்பட்டோருக்கான இழப்பீடுகள் தொடர்பில் பரிந்துரைகளை முன்வைக்கவேண்டும்.
மனித உரிமை எதேச்சையாகப் பறித்தல், சட்டவிரோத கொலைகள், சித்திரவதைகள் மற்றும் மனிதாபிமானமற்ற நடாத்துகைக்கு உட்படுத்தல், பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் சுரண்டல்கள், ஆட்கடத்தல் மற்றும் வலிந்து காணாமலாக்கப்படல், சட்டவிரோத தடுத்துவைப்புக்கள், சட்டவிரோத சொத்துப்பறிப்பு, இனம், மதம், மொழி, இடம், அரசியல் நிலைப்பாடு, சாதி போன்றவற்றின் அடிப்படையில் தனிப்பட்ட உரிமைகளில் பாரபட்சம் காண்பித்தல் என்பன உள்ளடங்கலாகப் பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்து, அவை மீளநிகழாதிருப்பதை உறுதிப்படுத்துவதற்கு அவசியமான பரிந்துரைகளை வழங்கவேண்டும். அதேபோன்று மனிதப்புதைகுழிகளாக சந்தேகிக்கப்படும் பகுதிகளை அகழ்வதற்கு நியாயாதிக்கமுள்ள நீதிவானொருவருக்கு விண்ணப்பம் செய்வதுடன், அச்செயன்முறையில் அவதானிப்பாளராக செயற்படமுடியும்