மன்னார் படகுத்துறைப் படுகொலை –
வட தமிழீழம் , மன்னார் மாவட்டத்தின் மன்னார் நகருக்கு வடகிழக்கே சுமார் 20மைல்களுக்கு அப்பாலுள்ளது படகுத்துறைக் கிராமம். 1995ம் ஆண்டு யாழ்ப்பாணம் மீது சிங்கள இராணுவம் மேற்கொண்ட படை நடவடிக்கை காரணமாக யாழ். நவாந்துறைப் பகுதியிலிருந்து இடம்பெயர்ந்துவந்து 35வரையான குடும்பங்கள் இக்கிராமத்தில் குடியேறி வாழ்ந்துவந்தனர். இவர்கள் கடற்றொழிலையே தமது வாழ்வாதாரமாகக் கொண்டமையால் இக்கரையோரக் கிராமம் இவர்களது தொழில் நடவடிக்கைக்கு ஏற்புடையதாக இருந்தது. இங்கு வாழ்ந்த மக்கள் அனைவரும் கத்தோலிக்க மதத்தினைச் சேர்த்தவர்கள். இக்கிராமத்தில் கத்தோலிக்க தேவாலயம் ஒன்று உள்ளது. தேவாலயச் சுற்றாடல் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கின்றது. இம்மக்கள் மிகவும் சந்தோசமாகவும், ஒற்றுமையாகவும் வாழ்ந்துவந்தனர்.
2007 ஐனவரி இரண்டாம் நாள் காலை இக்கிராமத்திற்கு மேலாக இலங்கை வான்படையின் வேவு பார்க்கும் விமானம் ஒன்று பறந்துகொண்டிருந்தது. சரியாக 9.30 மணியளவில் இவ்வான்பரப்பில் நுழைந்த இலங்கை வான்படையின் மூன்று கிபீர் விமானங்கள் குண்டுத் தாக்குதலை மேற்கொண்டன. கிராம மக்கள் மிகவும் நெருக்கமாக வாழ்ந்ததனாலும் விமானங்களிலிருந்து ஏவப்பட்ட குண்டுகள் அனைத்தும் குடியிருப்பு பகுதி மீதே வீழ்ந்து வெடித்ததால் அவர்களது வீடுகள் மற்றும் சொத்துக்கள் அனைத்தும் முழுமையாக அழிவடைந்தன. பெண்கள் சிறுவர்கள் உட்பட 15 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர். மேலும் 37 பொதுமக்கள் படுகாயமடைந்தனர்.
இத்தாக்குதலின் மொத்தப் பாதிப்பும் பொதுமக்களுக்கே ஏற்பட்டுள்ளது என்பதை மதத் தலைவர்களும் அப்பகுதி மக்களும் உறுதிப்படுத்தியுள்ளனர். பாதிப்படைந்த மக்களை இலங்கை போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவும் சென்று பார்வையிட்டுள்ளது. இலங்கை விமானப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட இப்படுகொலை நடவடிக்கையானது அப்பாவிப் பொதுமக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட மனித நேயமற்ற ஒரு கொடூரத்தையே வெளிப்படுத்துகின்றது.
இச்சம்வத்தின் போது படுகொலை செய்யப்பட்டவர்கள்:
01. அ.ஆனந்தி (வயது 32)
02. அ. விதுசன் (வயது 04)
03. அ.இராஜகுமாரி (வயது 57)
04. அ.சத்தியப்பிள்ளை (வயது 26)
06. கு.தயாழன் (வயது 02)
07. கு.வலஸ்தீனா (வயது 30)
08. ப.ஜமேசன் (வயது 12)
09. ச.மதுசன் (வயது 01)
10. உதயகுமார் (வயது 55)
11. உ.மாலினி (வயது 27)
12. உ.தர்சிகா (வயது 01)
13. வி.வினோயன் (வயது 04)
14. வி.தர்சினி (வயது 08)
15. வி.விஜிதா (வயது 35)
– தமிழினப் படுகொலைகள் 2002 – 2008 நூல்.