ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள் தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் – பிரான்சு!

0
82

ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!

காலம் தன்னைப் புதுப்பித்துக்கொள்ளும். வரலாறு தன்னை பதிப்பித்துக்கொள்ளும். தமிழினம் இந்தக் காலப்பெருவெளியில் புதுப்பிக்கத்தக்க வரலாறுகளை படைத்து தனித்த இனமாக உலகில் தன்னை நிலைநிறுத்தியுள்ளது. அதற்கான அடித்தளங்களில் முதன்மையானது எமது தாய்மொழி. தாய்மொழிக்குத் தம்மை ஈவுசெய்த அனைவரும் புதுப்பிக்கத்தக்க இவ்வாண்டில் வாழ்த்துதலுக்குரியவர்களே!

நிற்க!

கால் நூற்றாண்டை நிறைவு செய்த எமது செயலறிவு போதுமென்ற நினைப்பு எமக்கு  மனநிறைவைத் தந்துவிடலாம். ஆனால் அந்தப் படிப்பனைகள்  எமது எதிர்காலச் செயற்பாடுகளுக்கு  போதுமானதன்று என்பதே உண்மை. உலகின் கடுகதியான ஓட்டத்திற்கும் அரசியல் ஒழுங்கிற்கும் ஈடுகொடுக்கும் வல்லமையை நாம் கொண்டுள்ளோமா என்பதை சுயமதிப்பீடு செய்து கொள்ள வேண்டிய காலமிது.

தொழில்நுட்ப வளர்ச்சியூடும், செயற்கை நுண்ணறிவினூடும் தமிழ் மொழியை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த வேண்டிய அதிமுதன்மைப் பொறுப்பிற்குள் காலம் எம்மை சிக்க வைத்துள்ளது. புதியன புகுத்தி பழையனவை களைந்து களமாடவேண்டிய காலக்கட்டாயம் எதிரே விரிந்து நிற்கிறது.

மூன்றாந்தலைமுறையினர் தமிழ்மொழியை கற்கத் தொடங்கியுள்ள நிலையில் நாமும் எம்மை புதுப்பித்து செழுமைப்படுத்த வேண்டிய நிலையில் உள்ளதை உணர்ந்து கொள்ளல் வேண்டும்.

காலமாற்றத்தை ஏற்றுக்கொள்ளாமல் அழிந்து போன மொழிகள் பற்றி நாம் பாடமெடுப்பதை விடுத்து காலத்துக்குப் பொருத்தமாகத் தமிழைக் கொண்டு செல்லுதல் பற்றி சிந்தித்துச் செயற்பட்டு தமிழைக் காப்போம். இதற்கு அனைத்து தமிழ்ச்சங்களும், தமிழ்ச்சோலைகளும், பெற்றோர், மாணவர்களும் இப்புதிய ஆண்டில் மனவுறுதி பூண்டுகொள்ள வேண்டும்.

இப்புதிய கிரகெறி ஆண்டை, எமது விடுதலைக்கான பாதையில் – தமிழ்மொழியின் துணைகொண்டு-  மிக அழுத்தமான காலடிகளை எடுத்து வைக்கும் ஆண்டாக அமையும் என்ற நம்பிக்கையுடன் தொடங்குவோம்.

அனைவருக்கும்  தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தின் 2024 ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்.

சா. நாகயோதீஸ்வரன் 

பொறுப்பாளர் 

தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் – பிரான்சு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here