தமிழின விடுதலைப்பற்றாளர், ஏழைகளின் இதயம், ஈழவிடுதலைக்காக தன் இறுதிக்காலம் வரை குரல்கொடுத்தவர், நல்ல மனிதநேயன் தனது திரைப்படங்களாலும், நடிப்பாலும் கோடான கோடி மக்களின் மனதில் தனக்கெனவொரு இடத்தை பிடித்துக்கொண்டவர். கறுப்புத்தங்கம் என்று எல்லோராலும் அழைக்கப்பட்ட புரட்சிக்கலைஞர், தேசிய முற்போக்கு திராவிடக்கழக நிறுவனத்தலைவர், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், திருமிகு. விஜயகாந் அவர்களின் மறைவுக்கு எமது புகழ் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
தமிழீழ தேசம் செந்நீரிலும், கண்ணீரிலும், கதறலோடும், நின்ற போது கரம் கொடுத்தவர். தமிழீழ விடுதலையை அறியாமலும், தெரியாமலும், ஆதரிக்காமலும், ஆர்வம் கொள்ளாது இருந்தவேளை வெளிப்படையாகவே வந்து அதனை திரையுலகத்தினருக்கு தெரியப்படுத்தி நடிகர்களையும் அரசியல்வாதிகளையும் இணைத்து முதன் முதலில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்தை நடாத்தியவர். தனது இனவிடுதலை உணர்வை தமிழீழத் தேசியத்தலைவர் மீது வைத்திருக்கும் அன்பையும், மதிப்பையும், நம்பிக்கையும் வெளிகாட்டும் முகமாக தனது மகனுக்கு தேசியத்தலைவர் பெயரைவைத்தும், தமிழன் தமிழன் இவன்தான் தமிழன், தலைவன் தலைவன் இவன்தான் தலைவன் என்று தேசியத்தலைவன் பெயரைத் தினம் அழைத்து அழகுபார்த்தவர். மண்பற்றோடும், விடுதலை உணர்வோடும், ஏழைமக்கள் மீது உதவும் மனதோடு உழைத்த நல்லதொரு மனிதரையும், தலைமையையும் தமிழகம் மட்டுமல்ல தமிழினமே இழந்து நிற்கின்றது.
இவரின் எண்ணங்களையும், செயற்பாடுகளையும் அவரின் வழியில் நின்று மக்களிடம் கொண்டு சென்று பலம் சேர்க்க வேண்டிய பாரிய பொறுப்பை 2023 இறுதிநாட்களில் இவரின் உயிர்பிரிவு அவரைநேசித்த தொண்டர்கள், சொந்த உறவுகளுக்கும் தமிழக மக்களுக்கும் கொடுத்துள்ளது. பிறக்கப்போகும் 2024 ஆம் ஆண்டில் தமிழ் இனமான உணர்வுடன் அனைவரும் பயணிப்போம்.
அன்னாரின் மறைவால் துயருற்று நிற்கும் துணைவி, பிள்ளைகள், மற்றும் உற்றார் , உறவினர்கள், நண்பர்கள் தாய்த்தமிழக மக்கள் தொண்டர்கள், ஆதரவாளர்கள் அனைவருடன் பிரான்சு வாழ் தமிழீழ மக்கள் எமது துயரினை பகிர்ந்து கொள்வதோடு எமது புகழ் வணக்கத்தையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – பிரான்சு