அன்பான பிரான்சு வாழ் தமிழீழ மக்களே ! புரட்சிகரமான வணக்கம்.!
2024 ஆங்கிலப் புத்தாண்டை புரட்சிகரமாக வரவேற்றுக் கொள்கின்றோம். தாயைக் காப்பாற்றுவதும் நாட்டைக்காப்பதும் ஒன்றுதான் என்ற தேச உணர்வோடு மொழியாலும் கலையாலும், விளையாட்டாலும், அரசியல் மனிதநேயப் பணிகளாலும், பொருண்மிய வர்த்தகப்பணியாலும், ஆன்மீகத்தாலும் அர்ப்பணிப்போடு தம்மை ஈடுபடுத்திவரும் அனைத்து தமிழ் மக்களின் கரங்களை அன்போடும், நன்றியோடும் 2024 ஆங்கிலத் தமிழ்ப்புத்தாண்டில் இறுகவே பற்றிக்கொள்கின்றோம்.
இலங்கைத்தீவு ஆங்கிலேயர்களிடம் விடுதலை பெற்று 75 ஆண்டுகளைத் தொட்டு நிற்கின்றது. சிங்கள ஆட்சியாளர்களின் உச்சகட்டத் தமிழின அழிப்புப் போர் நிறைவடைந்து 15 ஆண்டுகளாகி விட்டன. அறத்துடன் கூடிய ஈழவிடுதலைப் போராட்டத்தை வன்முறை எனச்சாக்குச் சொல்லி தமிழர்களின் விடுதலையை தட்டிக்கழித்து வந்த பன்னாட்டுக் குமுகம் ஆயுதப் போராட்டம் மௌனித்த பின்பும் அரசியல் மௌனத்தில் இருக்கிறது. மறுபக்கத்தில் தமிழர் நிலங்களில் தொல்லியல் கண்டுபிடிப்பு என்ற ரீதியில் பௌத்த மதத்தைப் பரப்புவதிலும், நிலவல்வளைப்பிலும் செயற்கை உணவுப்பஞ்சத்தை ஏற்படுத்தி பட்டினியையும், இளைஞர்கள் , யுவதிகளிடையே வன்முறைக் கலாசாரங்களையும், போதைப் பொருட்களையும் பரப்பி ஆரோக்கியமற்ற குமுகாயமாகவும், எதற்குமே சிங்களத்திடம் அடிபணியும் கலாசாரத்தை தொடர்ந்து செய்துவருகின்றது. இதுவரை தமிழரின் நீதியான கோரிக்கைகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. மாறாக எத்தனையோ கனவுகளையும், சந்தோசங்களையும் புதைத்துவிட்டு பன்னாட்டுக் குமுகத்திடம் நீதிகிடைக்குமென காத்திருந்த தமிழர்களுக்கு 75 வருடங்களாக சாவும், அழிவும், பட்டனியும் தான் பரிசாகக் கிடைக்கின்றன. மொத்தத்தில் போருக்கு பின்னான கடந்த 15 ஆண்டுகள் தமிழர் வரலாற்றில் அரசியல் ஏமாற்றுச் சதிகள் கொண்ட வன்மமும், வசைகள் பாடும் காலமாகவே மாறிப்போயுள்ளது. தமிழினத்தை உயிர் அழிவிலிருந்து காத்த ஆயுதப் போராட்டத்தை, சிங்களத்தின் பொய்யான பரப்புரையை நம்பி துணைபோய் அழித்த பன்னாட்டுக் குமுகம் இன்றுவரை அமைதிக்குள் தமது மனச்சாட்சியை புதைத்துவிட்டு கண்மூடிக் கொண்டு நிற்கின்றது. அதற்கு உடந்தையாகவும் உந்துதலாகவும் எம்மவர்கள் சிலர் தாயகத்திலும், புலத்திலும் இருப்பது வேதனைக்குரியது. அவர்களில் சிலர் அண்மையில் தாங்ககள்தான் தமிழ்மக்களின் தலைவிதியை தீர்மானிப்பவர்களா, பொதுவெளியில் தோன்றத்தொடங்கியுள்ளனர்.
இலங்கைத்தீவை கடனில் இருந்தும், பொருண்மியச் சிக்கலிருந்தும் மீட்கப்போகின்றேன் என்று அரசுக் கதிரையில் இருக்கும் அதிபர் ரணில் விக்கிரமசிங்கா அவர்கள் கடந்த 50 ஆண்டுகால சிங்கள ஆட்சியின் அனைத்துக் கூறுகளையும் கடந்து வந்தவரே. இலங்கைத்தீவில் தமிழர்கள், சிங்களவர்களுடன் இணக்கப்பாட்டுடன் இணைந்து வாழ வேண்டும் என்று இன்று சிலர் கூறிவருகின்றனர். இது கடந்த 75 ஆண்டுகளில் பல வாய்ப்புகளைக் காலம் உருவாக்கியிருந்து. ஆனால் சிங்கள பௌத்த பேரினவாதமும், அதற்கு துணைபோன தமிழ் அரசியல்வாதிகளும் அந்த வாய்ப்புகளை குழப்பும் அரசியலையே செய்து வந்தனர். தாயகத்திலும் புலம்பெயர் தேசத்திலும் தமிழினத்தின் லட்சோப லட்சத்தின் உயிர்களின் ஈகத்தையும், அர்ப்பணிப்பையும் நீத்துப் போகாது வைத்திருக்கும் தமிழர் கட்டமைப்புகளும் அதன் செய்ற்பாட்டார்களும் இருக்க இவ்வாறான அரசியல்வாதி இடைநடுவில் நுழைந்து அரசியல் குழப்பங்களை ஏற்படுத்த முனைகின்றனர். 2009 இற்கு முற்பட்ட காலத்திலும் இவ்வாறன அரசியல் வாதிகளின் சித்தாந்தம், தமிழர்களுக்கு ஒரு தேசமோ தனிநாடோ அமையக்கூடாது என்பதே. இன்று புறப்பட்டிருக்கும் திடீர் அரசியல்வாதிகளும் இப்படிப்பட்டவர்களே. இந்த விடயத்தில் தமிழர்கள் நாம் விழிப்புடன் இருக்க வேண்டும். நாம் சுமக்கும் நம்பிக்கை நாம் கீழே விழும்போது எம்மைச் சுமக்கும். அந்த நம்பிக்கை எமது இளையோர்களுக்கும் பொருந்தும். இந்த விடுதலை நெருப்பின் வெளிச்சத்திற்கு அரைநூற்றாண்டுகளுக்கு மேலாக எரிகொள்ளிகளாய் இருந்தவர்களும், வெளிச்சம் தந்தவர்களின் பிள்ளைகள், பற்றாளர்கள் தங்கள்கைகளில் அனைத்தையும் தாங்கி இன்று நிற்கின்றார்கள்.
அவர்களின் நேர்த்தியான , உண்மையான, சத்தியமிக்க அர்ப்பணிப்பான பயணம் அப்பழுக்கற்றும், விமர்சனமுமின்றி விவேகமாகவும், வீரியமாகவும் செல்ல வேண்டும். இவர்களால் எமதினத்தின் தேவையை சுதந்திரமானதாக கொண்டு செல்ல முடியும். அதனைத்தான் தமிழீழ தேசியத்தலைவர் தனது மாவீரர்நாள் கொள்கைப்பிரகடன உரையிலும் சொல்லியிருக்கின்றார். எனவே நாம் ஓர் உண்மையை சந்திக்க பல நிழல்களை நிதானமாக கடந்தே செல்ல வேண்டியிருக்கின்றது. தமிழர்தாயகத்தில் ஓர் நேர்த்தியான அரசியல் தலைமையை கொண்டு வர தமிழர்களின் நம்பிக்கையாக இருந்து கொண்டுவந்த கட்சியே இன்று ஆட்டம் கண்டுநிற்கின்றது.
அன்பான தமிழீழ மக்களே!
எமது மக்களின் நியாமான உரிமை 75 வருடங்களில் அகிம்சையில் போராடி முடியாத நிலையில் ஆயுதப்போராட்டத்திற்கு தள்ளப்பட்டு அதுவும் அமைதியாக்கப்பட்டு அரசியல் சனநாயக வழியில் பன்னாட்டுக் குமுகத்தின் துணையுடன் அடைவோம் என்ற என்ற நம்பிக்கையுடன் பயணிக்கின்ற வேளை அதற்கான அரசியல் செயற்பாடுகள் அனைத்து நாடுகளிலும் பல்வேறு தளங்களில் செயற்படுத்தப்பட்டு வருகின்றது. இதனை பார்த்து அச்சமடைந்து நிற்கும் சிங்கள பௌத்த பேரினவாத அரசு தமக்கு துணையாக புலத்தில் உள்ள புத்திஜீவிகள் என்று சொல்லிக் கொள்பவர்களை பயன்படுத்தி, இனத்தின் விடுதலையே குறிக்கோளாகக் கொண்டு தாயகத்திலும், புலம்பெயர் தேசத்திலும் பணியாற்றி வருபவர்களையும் உயிர் அச்சுறுத்தலுக்குள் ஏற்படுத்துவதும், காரணமின்றி கைதுசெய்தல், காணாமல் போகச்செய்தல், உயிர்வதைசெய்தல், மனஅழுத்தம் கொடுத்தல் போன்றவற்றை ஒருபுறமும், புலத்தில் மனிதநேய பணியாளர்களை அகற்றுவதற்கு பணங்களைப் பெற்றுக் கொண்டு அரசியல் ஆய்வுகள், அவதூறல்கள், அபாண்டமான பழிசுமத்தல் போன்றவிடயங்களை கட்சிதமாகவே பொதுவெளியிலும், ஊடகங்களிலும், பெயர் தெரியாது எழுதி எதிரிக்கு பாதையமைத்துக் கொடுப்பவர்களாகவே இருந்து வருகின்றனர். இவர்கள் புலித்தோல் போர்த்திய நரிகளாக இருப்பதும், இவர்களின் பொறுப்பற்ற செயற்பாடுகள் எத்தனை தமிழர்களின் மனங்களிலும், கொதிப்பையும் , வேதனையையும் ஏற்படுத்தியிருக்கின்றது. சிங்களத்தின் உளவியல் யுத்தத்திற்கு துணைபோகும் இவர்களின் செயற்பாடு மீது சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்ற உணர்வாளர்களின் ஆலோசனைக்கமைய செயற்பட்டாலும் அதுவும் இனத்திற்கு ஏற்படுகின்ற அபயகீர்தியாகும். விடுதலையை நேசிப்பவர்களும், நேசித்தவர்களும், தாயகத்திலும், புலத்திலும் பணியாற்றியவர்களும் எமது தேசவிடுதலையில் இடைவெளியற்ற இறுக்கமான நேர்த்தியான செயற்பாட்டில் பயணிக்க வேண்டும் என்பதையே காட்டிநிற்கின்றது. ஒவ்வொரு நாடுகளிலும் வாழும் எமது ஆளுமைமிக்க இளையதலைமுறை தமது திறன்களோடு தனது தாய்மண்ணுக்கும் அதன் விடுதலையின் செயற்பாட்டிற்கும் அனைத்துத் தளங்களிலும் பயணிக்க வேண்டும். அதற்கு ஏதுவாக தமது தேர்தல் காலங்களில் தமது வாக்குகளை சரியான தளத்தில் பயன்படுத்த வேண்டும். இவர்களின் வழிகாட்டல்களாக பெற்றோர்களும், கற்றோர்களும், கற்பிக்கின்றோர்களும் மண்விடுதலை பற்றாளர்களும், விடுதலை உணர்வாளர்களும், களத்தில் நின்று பயணித்தவர்களும் பலமாக இருக்க வேண்டும். எங்கள் பலம் என்றும் வீழ்ந்துவிடாத வீரமாக 2024 ஆம் ஆண்டிலும் கொண்ட இலட்சியப்பயணத்தில் கிஞ்சித்தும் துஞ்சிடாது நாம் தொடர்ந்து பயணிக்க வேண்டும். அதற்கான பலத்தை எமது மக்களுக்கு மாண்புடன் மண்ணை முத்தமிட்ட மாவீரர்கள் என்றும் துணைநிற்பார்கள்.
‘ தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம் ‘
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு-பிரான்சு