ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான செக் குடியரசின் தலைநகர் ப்ராக்கில் அமைந்துள்ள சார்லஸ் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 14 பேர் கொல்லப்பட்டதுடன் மேலும் 24 பேர் காயமடைந்தனர். துப்பாக்கி தாரி 24 வயதுடைய டேவிட் கோசாக் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
செக் நாட்டின் தலைநகரின் மையப்பகுதியில் உள்ள சார்லஸ் பல்கலைக்கழகத்தின் கலைப் பீடத்தில் கல்வி கற்றுக்கொண்டிருந்த 24 வயது இளைஞனே துப்பாக்கிச் சூடு நடத்தினார். அவர் இன்று வெள்ளிக்கிழமை குற்றவாளி தன்னைத்தானே சுட்டுக் கொன்றுவிட்டு தற்கொலை செய்துகொண்டதாகக் காவல்துறை கூறியது. நேற்று பிற்பகல் 15 மணியளவில் நடைபெற்ற தாக்குதல் தொடர்பில் செக் காவல்துறையினர் இன்று வெள்ளிக்கிழமை சில தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
காயமடைந்தவர்களில் மூன்று வெளிநாட்டவர்கள் என்றும் இதில் நெதர்லாந்தைச் சேர்ந்த ஒருவர் மற்றும் மத்திய கிழக்கைச் சேர்ந்த இருவர் என காவல்துறையினர் தொிவித்தனர். துப்பாக்கிச் சூடு நடந்த இடத்திற்கு எவரும் செல்லமுடியாத வகையில் மூடப்பட்டுள்ளது. தாக்குதல் தொடர்பான விசாரணையை காவல்துறையினர் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
இது ஒரு சர்வதேச பயங்கரவாத செயலுடன் தொடர்பு அற்றது என்றும் இத்தாக்குதல் குறித்த இளைஞனின் தனிப்பட்ட தாக்குதல் என்று உள்துறை அமைச்சு கூறியுள்ளது. உயிரிழந்தவர்களுக்கு நினைவேந்தல் நடத்தப்பட்டது வெள்ளிக்கிழமை காலை பல்கலைக்கழக தலைமையகத்தில் மக்கள் மெழுகுவர்த்தி ஏற்றி, பாதிக்கப்பட்டவர்களுக்காக அஞ்சலி செலுத்தப்பட்டது.