தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியத்தின் வெள்ளி விழா 16.12.2023 அன்று பாரிசின் புறநகர்ப் பகுதியான ஒல்னே சூ புவாவில் உள்ள PIERRE SCOCHY மண்டபத்தில் பெருந்திரளான தமிழார்வலர்களின் முன்னிலையில் கொண்டாடப்பட்டது.
காலை 11.00 மணிக்கு இன்னிய அணி இசையுடன் சிறப்பு, முதன்மை விருந்தினர்கள் விழா மண்டபத்திற்குள் அழைத்து வரப்பட்டனர். மங்கல விளக்கு ஏற்றப்பட்டது. மங்கல விளக்கினை முதன்மை விருந்தினர் முனைவர் இரா குறிஞ்சி வேந்தன், தமிழர் ஒருங்கிணைப்புக் குழுப் பொறுப்பாளர் திருமிகு ராசன். தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்புப் பொறுப்பாளர் திருமிகு பாலகுமாரன். கல்வி மேம்பாட்டுப் பேரவைப் பொறுப்பாளர் திருமிகு ஆனந்தன், சிறப்பு விருந்தினர்களான ஒல்னே நகர பிதா- BESCHIZZA, லு வூர்ஜே நகர பிதா-. Jean-Baptiste BORSALI, முன்னாள் தலைமைப் பணியக பொறுப்பாளர்கள் திருமிகுகள் சுரேந்திரன், றொணி, ஜெயகுமாரன், தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகப் பொறுப்பாளர் திருமிகு நாகஜோதீஸ்வரன், ஆகியோர் ஏற்றினர். தலைமைப் பணியக முன்னாள் செயற்பாட்டாளர் நாட்டுப்பற்றாளர் அகிலன் அவர்களுக்கு சுடர்,மலர் வணங்கங்கள் மேற்கொள்ளப்பட்தைத் தொடர்ந்து அகவணக்கம் இடம்பெற்றது. தமிழ்ச்சோலைக்கீதம் இவ்றி சூ சென் தமிழ்ச்சோலை மாணவர்களால் இசைக்கப்பட்டு வரவேற்புரை தமிழ்ச்சோலை தலைமைப்பணியகத்தின் செயலாளர் திருமிகு காணிக்கைநாதன் அவர்களால் நிகழ்த்தப்பட்டது.
சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட நகர முதல்வர்களும் லாக்கூர்னேவ் துணை முதல்வர், மாநகர ஆலோசகர் திருவாட்டி சுகுணா ஆகியோர் மதிப்பளிக்கப்பட்டு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தின் வெள்ளிவிழா அஞ்சல் முத்திரை நினைவுப்பரிசாக வழங்கப்பட்டதையடுத்து மேடை நிகழ்வுகள் தொடங்கின. நடன நிகழ்வுகளும் நாடகம், வில்லுப்பாட்டு, நாட்டார் பாடல் என பல்வேறுபட்ட மேடை ஆற்றுகைகள் தமிழ்ச்சோலை மாணவர்களால் நிகழ்த்தப்பட்டன.
நிகழ்வின் சிறப்பு நிகழ்வாக தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தின் தோற்றத்திற்கான உழைத்த முன்னையவர்கள் மதிப்பளிக்கப்பட்டனர். திருமிகு றொனி, திருமிகு, சுரேந்திரன், திருமிகு வேலழகன், திருமிகு ஜெயக்குமாரன் ஆகியோர் தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தால் மதிப்பளிக்கப்பட்டு நினைவுப் பரிசில்களும் வழங்கப்பட்டனர்.
தொடர்ந்து வெள்ளிவிழா சிறப்பு மலர் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது. மலர்களை முதன்மை, சிறப்பு விருந்தினர்கள் பெற்றுக்கொண்டதைத் தொடர்ந்து தமிழ்ச்சோலை நிர்வாகிகள் பெற்றுக்கொண்டு குழுப்படமும் எடுக்கப்பட்டது.
கலைநிகழ்வுகளுக்கிடையில் முதன்மை விருந்தினரும் தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக அயலகத் தமிழ்த்துறைப் பொறுப்பாளர் முனைவர் இரா.குறிஞ்சிவேந்தன் சிறப்புரையாற்றினார்.
அவரது சிறப்புரையில் தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்திற்கும் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்திற்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட இருதரப்பு கற்றல் கற்பித்தல்சார் உடன்படிக்கைகளை விளக்கினார். தமிழ் மொழியில் ‘சும்மா’ எனும் ஒரு சொல் காட்டும் பல்வேறு பொருளை உதாரணங்கள் கொண்டு விளக்கித் தமிழ்மொழியின் சொல் வளப்பெருக்கத் திறனை குறித்த உரையை நயம்பட வழங்கினார்.
தொடர்ந்து திருக்குறள் திறன் இறுதிப் போட்டியில் பங்குகொண்ட மாணவர்களுக்கான சான்றிதழ்களும் பதக்கமும் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான சான்றிதழ்களும் விருதும் வழங்கப்பட்டன.
நிகழ்வில் 10,20,25,30 ஆண்டுகள் ஆசிரியப்பணியை நிறைவு செய்தவர்களுக்கான மதிப்பளிப்பு நிகழ்த்தப்பட்டது. 10 ஆண்டு நிறைவு செய்த 14 ஆசிரியர்களும் 20 ஆண்டை நிறைவு செய்த 15 ஆசிரியர்களும் 25 ஆண்டை நிறைவு செய்த 9 ஆசிரியர்களும் 30 ஆண்டை நிறைவு செய்த 2 ஆசிரியர்களும் அவையோரின் பெருத்த கரவெலியினிடையே உணர்வயமான நிலையில் மதிப்பளிக்கப்பட்டனர்.
தொடர்ந்து வளர்தமிழ் 12 ஐ நிறைவு செய்த மாணவர்கள் மதிப்பளிக்கப்பட்டனர். 2023 தமிழ் மொழிப் பொதுத் தேர்வில் தோற்றிச் சித்தியெய்திய 159 மாணவர்கள் அவையோரின் பெரும் ஆரவாரத்தோடு சான்றிதழ்கள் வழங்கப்பட்டு மதிப்பளிப்பு செய்யப்பட்டனர். வளர்தமிழ் 12 நிறைவு செய்த மாணவர்களுக்கான வாழ்த்துரையை கல்வி மேம்பாட்டுப் பேரவை மேலாளர் நகுலா அவர்கள் வழங்கியிருந்தார்.
அதனைத் தொடர்ந்து தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தின் 2022- 2023 கல்வியற் செயற்பாடுகளில் அரும்பணியாற்றிய தமிழியல் பட்டப்படிப்பு மாணவர்கள் சான்றிதழ் வழங்கப்பட்டு மதிப்பளிக்கப்பட்டனர். மேடை நிகழ்ச்சிக்கான ஒருங்கமைப்பையும் வழிப்படுத்தல்களையும் தமிழியல் பட்டக மாணவர்கள் மேற்கொண்டிருந்தனர். மேடை நிகழ்ச்சி ஒருங்கமைப்பதில் நுண்ணிய திட்டமிடலும் ஒழுங்குபடுத்தலும் இருந்ததைக் காணக்கூடியதாக இருந்தது.
விழாவின் இறுதி நிகழ்வாக நல்வாய்ப்புச் சீட்டிழுப்பு நடைபெற்று நன்றியுரை, ‘’நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்’’ பாடலுடன் தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தின் வெள்ளி விழா மனநிறைவுடனும் மறக்கமுடியாத இன்பத் துய்ப்பாகவும் நிறைவுற்றது.