பிரான்சில் நடைபெற்ற மூத்த பெண்போராளியின் இறுதி வணக்க நிகழ்வு. தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் மூத்த போராளியும் சேரன் வாணிபங்களின் பணிப்பாளர் பாபு அவர்களின் ( கோல்சர் பாபு) மனைவியும், விடுதலைப் புலிகளின்
மூத்த பெண்போராளியும், உலகத் தமிழர் உரிமைக் குரல் ( Voice) அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தேவன் Rahmania Ar அவர்களின் சகோதரியுமான பாரதி( பதஞ்சலி) நிலமகள்) அவர்கள் 05/12/2023 அன்று பிரான்சில் இயற்கை எய்தினார். இவருக்காக இறுதி வணக்க நிகழ்வு 12.12.2023 செவ்வாய்க் கிழமை 26 Avenue Léon Blum 64000 Pau. (பரிசிலிருந்து 845 கிலோமீற்றர்) என்னும் இடத்தில் நடைபெற்றது. காலை 11.00 மணிக்கு சமயரீதியான சடங்குகள் இடம்பெற்றிருந்தன.
தொடர்ந்து பிரத்தியேக மண்டபத்திற்கு பூதவுடல் எடுத்து வரப்பட்டது. தொடர்ந்து பொதுச்சுடரினை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பட்டியலில் உள்ளவரும், சாவடைந்த நிலமகள் அவர்களின் துணைவரின் சகோதரர் ஏற்றி வைக்க, ஈகைச்சுடரினை நிலமகளின் புதல்வன் ஏற்றி வைக்க நிழற்படத்திற்கான மலர்மாலையை மகள் அணிவித்தார்.
தொடர்ந்து அகவணக்கம் இடம்பெற்றது. அதனைத்தொடர்ந்து வந்திருந்த பொதுமக்கள், போராளிகள் அன்னாரின் பூதவுடலுக்கு மலர் வணக்கம் செலுத்தினர். அனைத்துலக தொடர்பக இறுதி கண்ணீர் வணக்க திருவுருவப்படத்திற்கு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பரப்புரைப் பொறுப்பாளர் திரு. மேத்தா அவர்கள் மலர்மாலை அணிவித்து, கண்ணீர் வணக்க உரையும் ஆற்றினார்.
தொடர்ந்து அவரோடு பணியாற்றியவர்கள் , மூத்த போராளி தீபா, சகோதரி நிலா மற்றும் மலைமகளுடன் பிரான்சில் பணியாற்றிய ஆசிரியர் மற்றும் உறவினர் நினைவுரைகள் ஆற்றியிருந்தனர்.
அதனைத் தொடர்ந்து அங்கு வந்திருந்த மக்களின் அழுகையுடன், கண்ணீருடன் அவரின் பூதவுடல் அக்கினியில் சங்கமமாகியது. பிரான்சில் பலபாகங்களிலுமிருந்தும், பல நாடுகளிலிருந்தும் இறுதி நிகழ்வுக்கு வந்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.