சிறைகளில் உண்ணாவிரதம் இருக்கும் தமிழ் அரசியல்கைதிகளில் ஒருவர் கூட உயிரிழந்தால், அதற்கான பொறுப்பை தமிழ் தேசிய கூட்டமைப்பினரே ஏற்க வேண்டுமென விடுதலையாகி வெளியில் வந்த தமிழ் அரசியல் கைதியான வீரசிங்கம், சுலக்ஷன் ஞாயிற் றுக்கிழமை தெரிவித்தார்.
யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் பொதே அவர் இவ்வாறு சுட்டிக் காட்டினார். சிறையில் உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி அரசியல் கட்சிகள் செய்யும் அரசியல் தந்திரோபாயங்கள் குறித்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே சிறைகளில் தாம் பட்ட வேதனைகளையும் பகிர்ந்து கொண்டார்.
ஆட்சி பீடமேறும் அனைத்து அரசுகளும் போலி வாக்குறுதிகளின் மூலம் தமிழினத்தை ஏமாற்றும் அரசியல் தந்திரங்களையே கையாள்கின்றனர். ஜனவரி 08 ஆம்திகதி நல்லாட்சி ஏற்படும் என்ற நம்பிகையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் ஆதரவு வழங்கியிருந்தனர்.
அதன் பெரிலேயெ மைத்திரிபால சிறிசேன தமிழ் மக்களின் வாக்குகளால் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டார். விடுதலையை எதிர்பார்த்து, பல வருடங்களின் பின்பு மன விரக்தியில் சாவின் விளிம்பில் தள்ளப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் விடயத்திலேயே இந்த நல்லாட்சி அரசாங்கம் நியாயமான தீர்வினைப் பெற்றுத்தர முன்வரவில்லை.
இவ்வாறான இந்த அரசு தமிழரின் இனப் பிரச்சினையில் கெளரவமான தீர்வை வழங்கும் என்று எதிர்பார்க்க முடியாது. நாட்டில் நடந்தது ஆட்சி மாற்றமில்லை ஆள் மாறாட்டம் மட்டுமே. தமிழ் தேசியக் கூட்மைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் பாராளுமன்ற உறுப்பினர் எம். சுமந்திரன் ஆகியோர் முன்பு உண்ணாவிரதம் இருந்த நேரம் சிறைச்சாலைக்கு வருகை தந்திருந்தனர். அதன்போது, நவம்பர் 07 ஆம் திகதிக்கு முன்னர் கைதிகள் தொடர்பான அனைத்து பிரச்சினைகளும் தீர்த்து வைக்கப்படுமென்று கூறினர்.
ஜனாதிபதியை நாங்கள் முழுமையாக நம்புகின்றோம். நீங்களும் அவரை முழுமையாக நம்புங்கள் என்று கூறினார்கள். எமது உண்ணாவிரதத்தினையும் இருவரும் அணைந்து நிறைவு செய்து வைத்தார்கள். இன்று சிறைச்சாலைகளில் உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளின் சிறு நீரகங்களும் பாதிக்கப்பட்டு சாகும் நிலையில் தமிழ் அரசியல் கைதிகள் உள்ளனர். வாக்குறுதி அளித்து எமது உண்ணாவிதத்தினை நிறைவுசெய்து வைத்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் இருவரையும் காணவில்லை.
அரசுடன் இன்னும் சுமுகமான கூறவினை தமிழ் தேசிய கூட்டமைப்பு வைத்துக் கொள்வதன் நோக்கம் என்ன. பேரம் பேசும் சக்தியினை எமக்கு அளியுங்கள் என்று கூறி தமிழ் மக்களிடம் வாக்குகளைப் பெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு தென்னிலங்கை அரசிடம் பேசிய பேரங்கள் என்ன, தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அறிக்கைகளை விட செயற்பாடுகளையே தமிழ் அரசியல் கைதிகளான நாம் எதிர்பார்க்கின்றோம்.