26/11/23 அன்று ஞாயிற்றுக்கிழமை கிறித்தல் தமிழ்ச்சோலையில் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் 69வது அகவை நாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வு மாலை 15.30மணியளவில் பள்ளியின் பழைய மாணவியின் வரவேற்பு உரையுடன் இனிதே ஆரம்பமாகியது.அதனைத்தொடர்ந்து
நடனம், பேச்சு,கவிதை பாட்டு என பல்சுவை நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்றன. இவை தாயகச் சிந்தனைகளுடன் தலைவரின் சிறப்புப்பண்புகளை உள்ளடக்கியதாக இருந்ததைக் காணமுடிந்தது. மேலும் பிரான்சில் பிறந்து வளரும் சிறுவர்களின் மொழிவளத்தையும்,அதனூடாக அவர்களின் தேசப்பற்றையும் பார்க்க முடிந்தது. இந்நிகழ்வுகளுடன் சிறப்பாக பிறந்த நாளுக்கான கேக் சிறுவர்கள் சூழ்ந்திருக்க வெட்டி கொண்டாடப்பட்டது. அத்துடன் சென்ற வருடம் மாவீரர் தின ஓவியப் போட்டியில் பங்குபற்றிய மாணவர்களுக்கான சான்றுதழ்களும் வழங்கப்பட்டது.அதனைத் தொடர்ந்து நடனவகுப்பு மாணவர்கள் தேசியத்தலைவரின் பாடலுக்கு நடனமாடி அனைவரையும் கவர்ந்தார்கள்.இறுதியாக நன்றியுரையுடன் மாலை 18.30 மணியளவில் தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற முழக்கத்துடன் இந் நிகழ்வானது இனிதே நிறைவுற்றது.