யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழையினால் வலி. வடக்கு நலன்புரி நிலையங்களில் வசித்து வந்த மக்கள் அப்பகுதியிலிருந்து வெளியேறியுள்ளதாக வலி. வடக்கு மீள்குடியேற்ற குழு தலைவர் குணபாலசிங்கம் தெரிவித்துள்ளார்.
வலி.வடக்கு மல்லாகம் ஊரணி, கண்ணகி, சுன்னாகம் நீதவான், மருதனார்மடம் சபாபதிப்பிள்ளை ஆகிய நலன்புரி நிலையங்களில் வசித்து வந்த 90 வீதமான மக்கள் வெளியேறியுள்ளதாகவும், இன்றும் மழை தொடரும் பட்சத்தில் அனைத்து நலன்புரி நிலையங்களிலும் இருந்து மக்கள் வெளியேறும் சூழ்நிலை உருவாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் தொடரும் சீரற்றகாலநிலை காரணமாக இன்று 16 ஆம் திகதி திங்கட்கிழமை வடமாகாண பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ஆர் ரவீந்திரன் அறிவித்துள்ளார். வரும் சனிக்கிழமை 21 ஆம் திகதி இதற்குப் பதில் பாடசாலை நடைபெறும் என்றும் அவர் கூறியுள்ளார்.
தொடர்ந்து பெய்யும் அடைமழை, அதனால் ஏற்பட்டுள்ள வெள்ள நிலைமைகளினால் ஏற்பட்டுள்ள போக்குவரத்து கஷ்டங்கள், பல பாடசாலைகளில் மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் தங்கவைக்கப்பட்டிருப்பது போன்ற காரணங்களினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாளைய நிலைமைக்கு அமைய அந்தந்த கல்வி வலயங்களின் கல்விப் பணிப்பாளர்கள் உரிய பணிப்புரைகளை வழங்குவார்கள் என்றும் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் கூறியுள்ளார்