மேதகு பிரபாகரன்
பல்லாயிரமாண்டு பெருமைகொண்ட தமிழின வரலாற்றில் வே. பிரபாகரன் ஒரு மைகல்!
பெளத்த சிங்களப் பேரினவாதம், அன்றொரு நாள் கொதிக்கும் தாரில் தமிழ் குழந்தையை தூக்கியெறிந்து சிதைத்ததைக் கண்ணுற்று, கண்கலங்கி ”நாம் ஏன் திரும்பி அடிக்கவில்லை” என்று தம் தந்தை கேட்ட சிறுவன் தான் அழிக்கப்படும் தமிழ் இனத்திற்காக அன்று எழுந்து விழித்தான் அவன் தான் எம் தலைவர் பிரபாகரன்!
”நிலத்தில் புதையுண்டிருக்கும் ஆயிரமாயிரம் சமாதிக் கற்களும் விடுதலையையே குறியீடு செய்து நிற்கின்றன. வீதிகளில், சந்துகளில், சுவர்களில் நாம் சந்திக்கும் மாவீரர்களது திருவுருவங்களும் விடுதலையின் சாட்சியங்களாகவே எமக்கு காட்சி தருகின்றன” என்று தீரா தமிழீழத்தாகம் கொண்டு சமராடியவர் தலைவர்.
அதுமட்டுமன்று “ நாம் யாரையும் ஏமாற்றவும் இல்லை, துரோகம் இழைக்கவும் இல்லை. ஆனால் எம்மை யாரும் ஏமாற்றினால் அல்லது துரோகம் இழைத்தால் நாம் பதிலடி கொடுக்கத் தயங்கமாட்டோம்’” என்று வீறு கொண்டு நின்றவர் தலைவர்.
சத்தியத்திற்காய் சாகத் துணிந்து விட்டால் ஒரு சாதாரண மனிதப் பிறவியும் சரித்திரத்தைப் படைக்க முடியும். சுதந்திரம் இல்லாமல் மனித வாழ்வில் அர்த்தமே இல்லை என்று நமக்கான கனவை கண்டெடுத்த காலத்தலைவன் தலைவர் பிரபாகரன் அவர்கள்.
கடந்த 2009 முள்ளிவாய்க்கால் போரோடு எல்லாம் முடிந்துவிட்டது என்று சிங்களப் பேரினவாதம் இன்றளவும் கொக்கரித்துக் கொண்டிருக்கிறது. வல்லாதிக்க நாடுகள் பல இணைந்து எமது இனத்தைக் கொத்துக் கொத்தாக கொன்றொழித்தாது, எவ்வளவோ சாட்சியங்கள், ஆதாரங்கள் இருந்தும் விசாரணை நீதி என்னும் முகமூடி மாட்டிக்கொண்டு பன்னாட்டு நீதிமன்றத்தில் நீதி நிலுவையில் இருப்பதுதான் வேதனை!
அரை நூற்றாண்டு காலங்கள் கடந்து சிங்களப் பேரினவாதத்தின் கொடுஞ்செயல்களை தமது வீரப்போராட்டச் சமரால் உலகம் வியக்க முறியடித்தவன் முடிந்துவிட்டான் என இன்னும் உலகம் எண்ணிக் கொண்டிருக்கிறது. பொய் ஒருநாள் புதைந்துபோகும். தமிழ்தேசிய இனத்தில் பிறக்கும்; பிறக்கப்போகும் ஒவ்வொரு பிள்ளையும் பிரபாகரன் இனத்தின் வழிவந்தவை மறந்துவிடாதீர்!
முள்ளிவாய்க்கால் முற்றுப் புள்ளி இல்லை, அது விடுதலைக்கான தொடக்கம், காலத்தலைவன் வருகையைக் கணக்கிட்டு கொண்டிருப்பது விடுதலை செயல்பாட்டை முடக்கும். ஆகவே நாம் அவர் உந்துதலோடு உணர்ச்சிகொண்டு தொடர்ந்து செயலாற்றுவோம். தூரோகிகளை தோலுரித்துக் காட்டுவோம். நல்லவை எப்போதும் நம்மிடையே தங்கும், தீயவை நம்மை விட்டு விலகும். பரந்து வாழும் தமிழீழத் தேசிய இன மக்கள் ஒற்றுமையோடு இணைந்து அடுத்துக் கட்ட அரசியல் நகர்வுகளை முன்னெடுக்க தலைவர் பிறந்த நாள் வழியாக சூளுரைத்து உறுதியேற்போம்.
எங்கள் ஒப்பற்ற தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களுக்கு இனிய அறுபத்தொன்பதாவது பிறந்த நாள் வாழ்த்துகள்!
இங்ஙனம்
சேது. கருணாஸ் Ex. M.L.A.,