ஜனாதிபதித் தேர்தலுக்கான இரு பிரதான வேட்பாளர்களினதும் விஞ்ஞாபனங்கள் வெளியிடப்பட்டுள்ளன. பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன 100 நாள் வேலைத் திட்டம் என்ற பெயரில் தன்னுடைய விஞ்ஞாபனத்தை வெளியிட்டுள்ளார்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, மகிந்த சிந்தனை: உலகை வெல்லும் பாதை என்ற தலைப்பில் தன்னுடைய விஞ்ஞாபனத்தை வெளியிட்டுள்ளார். இரு தரப்பினருமே தமது விஞ்ஞாபனங்களில் வாழ்க்கைச் செலவுப் பிரச்சினையிலிருந்து அரசியலமைப்பு வரை பல்வேறு விடயங்களையும் தாம் எவ்வாறு கையாளப் போகின்றார்கள் என்பதை வெளிப்படுத்தியிருக்கின்றார்கள்.
ஆனால், இலங்கையின் பிரதான பிரச்சினையாகவுள்ள இனநெருக்கடிக்கான தீர்வு குறித்து இரு தரப்பினரும் மௌனமாகவே உள்ளார்கள். அனைத்துப் பிரச்சினைகளுக்கும் அடிப்படையாக இருப்பது இனப்பிரச்சினைதான்.
ஆனால், இது தொடர்பில் காட்டப்படும் மௌனம் முக்கியமான உண்மை ஒன்றை வெளிப்படுத்துகின்றது. ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியதாக சிறுபான்மையினரின் வாக்குகள்தான் இருக்கின்றன.
இருந்தபோதிலும், அவர்களுடைய வாக்குகளைக் கவரக்கூடிய திட்டங்கள் எதனையுமே இரு தரப்பினருமே முன்வைக்கவில்லை. இது கவனிக்கப்பட வேண்டிய ஒரு முக்கிய விடயம்.
இனநெருக்கடிக்கு தம்மிடமுள்ள தீர்வு என்ன என்பதைச் சொல்லப்போனால், அது இனவாத அடிப்படையில் மறு தரப்பினரால் கையாளப்படும் என்ற அச்சம் பொது எதிரணியிடம் காணப்படுகின்றது. அரச தரப்பைப் பொறுத்தவரையில், இனநெருக்கடிக்காக அவர்களிடம் உள்ள தீர்வு என்ன என்பதை கடந்த காலங்களில் அவர்கள் வெளிப்படுத்தியுள்ளார்கள்.
பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு வாருங்கள் பேசுவோம் என்பதைவிட அவர்களிடம் சொல்வதற்கு வேறு ஒன்றும் இல்லை. போர் வெற்றிக்கு நாமே பொறுப்பு என அரச தரப்பு இன்றும் மார்தட்டுகின்றது. தேர்தல் விஞ்ஞாபனத்தில் மகிந்த தரப்பு அதனைச் சொல்லாமலிருந்தாலும், அவரது பிரசாரத்தின் அடி நாதமாக இருப்பது போர் வெற்றி என்ற கோஷம்தான்.
இனநெருக்கடிக்கான தீர்வு ஒன்றை எதிரணி முன்வைக்குமாக இருந்தால், அது போரில் பெற்றுக்கொண்ட வெற்றியைக் காட்டிக்கொடுக்கும் முயற்சி எனக்கூறிக்கொள்வதற்கு அரச தரப்பு தயாராகவே இருக்கின்றது. தேசியப் பிரச்சினைக்கான தீர்வை எதிரணி முன்வைக்காமைக்கு அது மட்டும் காரணமல்ல. எதிரணியின் பொது முன்னணியில் கூட இனவாத அமைப்புக்கள் இணைந்திருக்கின்றன. குறிப்பாக சிங்கள பேரினவாதத்தை அடிப்படைக் கோட்பாடாகக் கொண்டுள்ள ஜாதிக ஹெல உறுமய பொது எதிரணியின் முக்கிய பங்காளிகளில் ஒன்று.
இது போன்ற அமைப்புக்களையும் அரவணைத்துக் கொண்டு தேசியப் பிரச்சினைக்கான ஒரு தீர்வை தமது விஞ்ஞாபனத்தில் கூறும் நிலையில் பொது எதிரணி இருக்கும் என்பது எதிர்பார்க்கக் கூடியதல்ல. கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது வெற்றிக்கு சிறுபான்மையினரின் வாக்குகள் அவசியமில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. சிங்கள மக்களின் வாக்குகளை மட்டுமே நம்பி களமிறங்கி தேர்தல் வெற்றியையும் மகிந்த ராஜபக்ஷ அப்போது தனதாக்கிக்கொண்டார்.
இந்தத் தேர்தலிலும் சிங்கள வாக்குகளை நம்பித்தான் மகிந்த ராஜபக்ஷ களத்தில் இறங்கியிருக்கிறார். ஆனால், சிறுபான்மையினரிடமிருந்தும் ஒரு குறிப்பிட்ட சதவீத வாக்குகள் தனக்குக் கிடைக்கும் என்ற நம்பிக்கை அவருக்குள்ளது. அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள், வழங்கப்பட்ட வேலை வாய்ப்புக்கள் மூலமாக மட்டுமன்றி, அரசுடன் இணைந்து செயற்படும் சிறுபான்மையினரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் மூலமாக வாக்குகள் தமக்கு கிடைக்கும் என ஜனாதிபதி நம்புகிறார்.
இதனைவிட தமிழர்களுக்கு புதிய வாக்குறுதிகள் எதனையும் வழங்கும் நிலையில் அவர் இல்லை. மறுபுறத்தில் பொது எதிரணியைப் பொறுத்தவரையில் அதன் வெற்றிக்கு சிறுபான்மையினரின் வாக்குகள் மிகவும் அவசியம். சிங்களவர்களின் வாக்குகளில் அரைப் பகுதியைக்கூட தம்மால் பெற்றுக்கொள்ள முடியாது என்பது மைத்திரிபால சிறிசேனவுக்குத் தெரியும். அதனால், சிறுபான்மையினரின் வாக்குகளை நம்பித்தான் அவர் களம் இறங்கியிருக்கின்றார். சிறுபான்மையினருடைய பிரச்சினைகளுக்கான தீர்வு எதனையும் அவர் முன்வைக்காவிட்டாலும், அவர்களுடைய வாக்குகளில் கணிசமான பகுதி தனக்குத்தான் விழும் என்ற நம்பிக்கை மைத்திரிக்கு உள்ளது. மகிந்த ராஜபக்ஷ அரசின் கடந்த ஒரு தசாப்த காலச் செயற்பாடுகளால் சிறுபான்மையினர் கடும் விரக்தியிலிருக்கின்றார்கள் அதிருப்தியடைந்திருக்கின்றார்கள் என்பது பொது எதிரணியினருக்குத் தெரியும்.
அவர்களுடைய வாக்குகள் தமக்குத்தான் என இதன் மூலம் பொது எதிரணி கணக்குப் போடுகின்றது. எது எப்படியிருந்தாலும், இந்த நாட்டின் பிரதான பிரச்சினையாகவுள்ள இனநெருக்கடி குறித்து இரு பிரதான கட்சிகளுமே தமது விஞ்ஞாபனங்களில் மௌனம் சாதிக்கும் வகையில் இந்த நாட்டில் இனவாதம் மேலோங்கியிருக்கின்றது.
இரு பிரதான வேட்பாளர்களினதும் செயற்பாடுகள் அதனைத்தான் புலப்படுத்துகின்றன உறுதிப்படுத்துகின்றன. தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வு ஒன்றை முன்வைப்பது போரில் பெற்றுக்கொண்ட வெற்றியை விட்டுக்கொடுப்பதற்கு அல்லது காட்டிக்கொடுப்பதற்குச் சமமானது என நம்பும் நிலையில்தான் சிங்கள மக்கள் உள்ளனரா? அப்படியானால், இந்த நாட்டில் சமாதானம், சக வாழ்வு என்பன என்றாவது சாத்தியமாகுமா?
– thinakkural.