இஸ்ரேல் படையினரின் கட்டாய வெளியேற்றலை அடுத்து அல் ஷிபா மருத்துவமனையில் வெளியேற முடியாத நிலையில் நூற்றுக்கணக்கான நோயாளிகள் உயிருக்கு போராடுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
இதனை மருத்துவமனையை ஆய்வு செய்த உலக சுகாதார அமைப்பின் தலைமையிலான ஐ.நா. குழு உறுதி செய்துள்ளது.
இஸ்ரேல் இராணுவத்தின் உத்தரவு
நேற்று (சனிக்கிழமை) இஸ்ரேல் இராணுவம் காசாவின் அல் ஷிபா மருத்துவமனையை விட்டு அனைவரும் வெளிறேவேண்டுமென உத்தரவிட்டது. இதனையடுத்து அந்த மருத்துவமனையில் இருந்து 2500 பேர் வெளியேற்றப்பட்டனர்.
பொதுமக்கள், மருத்துவர்கள், நகரக்கூடிய நோயாளிகள் அப்புறப்படுத்தப்பட்டனர். இதனால் அங்கு இப்போது 32 கைக்குழந்தைகள் உள்பட 291 நோயாளிகள் தவித்து வருகின்றனர். இதனை மருத்துவமனையை ஆய்வு செய்த உலக சுகாதார அமைப்பின் தலைமையிலான ஐ.நா. குழு உறுதி செய்துள்ளது.
291 நோயாளிகளில் 32 பேர் கைக்குழந்தைகள். மற்ற நோயாளிகள் பலரும் கடுமையான காயங்கள், முதுகுத் தண்டுவட பிரச்சினைகள் என பாதிக்கப்பட்டு நகரக்கூட இயலாமல் இருப்பவர்களாவர்.
ஐ.நா அதிகாரிகளை நிலைகுலைய வைத்த தகவல்கள்
அங்கிருந்த நோயாளிகளும் ஐ.நா.வின் சுகாதாரப் பணியாளர்களும் கூறிய விஷயங்கள் தங்களை நிலைகுலைய வைத்ததாக ஐ.நா. குழு தெரிவித்துள்ளது. வரும் நாட்களில் நோயாளிகளை காசாவின் தெற்குப் பகுதிக்குக் கொண்டு செல்ல ஏதுவாக ஐ.நா. சுகாதாரப் பணியாளர்கள் இன்னும் நிறைய பேர் வருவார்கள் என ஐ.நா. குழு தெரிவித்துள்ளது.
இப்போது அல் ஷிபா மருத்துவமனையில் இஸ்ரேலியப் படையினரும் தங்கியுள்ளனர். முன்னதாக, சனிக்கிழமை காலை அல் ஷிபாவில் இருந்து மக்கள் தாமாகவே வெளியேறியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தாலும் வலுக்கட்டாயமாகவே தாங்கள் வெளியேற்றப்பட்டதாக காசாவாசிகள் சிலர் தெரிவித்தனர்.