பாரிஸில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கு அஞ்சலி தெரிவிக்கும் நிகழ்வு பாரிஸ் றிப்பப்ளிக் சுதந்திர சதுக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணியளவில் இடம்பெற்றது. பலநூற்றுக்கணக்கானவர்கள் கண்ணீர்மல்க, கொல்லப்பட்டவர்களுக்காக மெழுகுதிரி ஏற்றி மலர்வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
அங்கு திடீரென ஏற்பட்ட பதட்ட நிலைமையை அடுத்து நாலாபுறமும் மக்கள் சிதறி ஓடினர். ஆனால் அங்கு அசம்பாவிதம் ஏதும் நடக்க வில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது. தூரத்தில் கேட்ட ஒரு வெடியோசையை அடுத்தே மக்கள், தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துவதாக எண்ணி ஓடியதாக பின்னர் கிடைத்த தகவல்கள் தெரிவித்தன.
இவ்வாறு சிதறி ஓடியதில் பல பொதுமக்கள் சிறு காயங்களுக்கு உள்ளாகியதாகவும், தமது உடமைகளைத் தவறவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
பின்னர் நிலைமையை உணர்ந்து மீண்டும் பொதுமக்கள் அஞ்சலி நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இதேவேளை, பிரான்சின் பல பகுதிகளிலும் வீடுகள், மற்றும் பொது நிறுவனங்கள் முன்பாக மாலை 18.30 மணிக்கு மெழுகுதிரி ஏற்றப்பட்டு மலர்வணக்கம் செலுத்தப்பட்டு தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
தமிழ் மக்களும் தமது அஞ்சலியை செலுத்தியதைக் காணமுடிந்தது.