கதவை இழுத்து மூடிய மாணவர்கள்! – அறிக்கையை மீளப் பெற்றது பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம்.

0
114

மாணவர்களின் கதவடைப்பு போராட்டத்தை அடுத்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் சட்டத்தரணி சுவஸ்திகாவிற்கு சார்பாக வெளியிட்ட அறிக்கையை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் சட்டத்தரணி சுவஸ்திகாவிற்கு ஆதரவாக வெளியிட்ட அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் பல்கலைக்கழகத்தின் பிரதான நுழைவாயிலை மூடி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் வெளியிட்ட அறிக்கைக்கு எதிராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களால் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இதன்போது ஆசிரியர் சங்க பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாட மாணவர்களால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

அதற்கு சாதகமான பதில் கிடைக்காத நிலையில் மாணவர்களால் பிரதான நுழைவாயில் மூடப்பட்டு போராட்டம் இடம்பெற்றது.

இன்று காலை முதல் பல்கலைக்கழக விஞ்ஞான பீட வளாகத்தில் ஒன்றுகூடிய பல்கலைக்கழக மாணவர்கள் குறித்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த அக்டோபர் 31ஆம் திகதி அன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சட்டத்துறையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சி ஒன்றிலே கலந்து கொண்டு சட்டத்தரணி சுவாஸ்திகா அருளிங்கம் “நெருக்கடியான காலத்தில் நீதித்துறையின் சுதந்திரம்” என்ற தலையங்கத்திலே உரையாற்ற இருந்தார்.

இந்த உரையாடல் இறுதி நேரத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களின் நெருக்குதலினால் கைவிடப்பட்டது.

இந்நிலையில் சட்டத்தரணி சுவாஸ்திகா அருளிங்கம் மீளவும் அழைக்கப்பட்டு சட்டத்துறையிலே தனது உரையினை வழங்குவதற்குரிய சந்தர்ப்பத்தினை உருவாக்க‌ யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், ஆசிரியர்கள், பல்கலைக்கழக நிருவாகம் ஆகியன இணைந்து உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள‌ வேண்டும் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் நேற்று கோரிக்கை விடுத்திருந்தது.

இந்நிலையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் சட்டத்தரணி சுவஸ்திகாவிற்கு சார்பாக வெளியிட்ட அறிக்கையை திரும்பபெறுவதாக அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here