பிரான்ஸ் தலைநகரான பாரீஸில் நிகழ்ந்த தீவிரவாத தாக்குதலில் 158 பேர் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவத்திற்கு ஐ.எஸ் தீவிரவாதிகள் பொறுப்பேற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாரீஸில் உள்ள 6 முக்கிய இடங்களில் 8 தீவிரவாதிகள் நடத்திய மனித வெடிகுண்டு மற்றும் துப்பாக்கி சூடு தாக்குதலில், இதுவரை 158 பேர் பலியாகியுள்ளதாகவும், 200க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், பொதுமக்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது ‘ஐ.எஸ் தீவிரவாதிகளின் பாணியில் நிகழ்ந்துள்ளதாக’ அவுஸ்திரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார்.
இந்த தகவலை மேலும் உறுதிப்படுத்தும் வகையில், துப்பாக்கி சூடு நடத்திய இடத்தில், கொடூர காட்சியை கண்ட குவைத் நாட்டை சேர்ந்த நபர் ஒருவர் புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், ‘தாக்குதலை நடத்திய 8 தீவிரவாதிகளில் ஒருவன் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பிற்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பியதாக’ குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பொதுமக்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு ‘இது பிரான்ஸ் அதிபர் பிராங்கோயிஸ் ஹாலண்டேவின் தவறால் நடத்திய தாக்குதல். சிரியா விவகாரத்தில் பிரான்ஸ் அதிபர் நுழைந்தது மிகப்பெரிய தவறு’ என முழங்கியதாக அவர் சுட்டுக்காட்டியுள்ளார்.
இந்த தகவலை பிரான்ஸின் AFP என்ற செய்தி நிறுவனமான, இங்கிலாந்தில் வெளியாகும் கார்டியன் செய்தி நிறுவனமும் உறுதிப்படுத்தியுள்ளது.
ஐ.எஸ் தீவிரவாதியான ‘ஜிகாதி ஜான்’ அமெரிக்க ராணுவ தாக்குதலால் கொல்லப்பட்டதாக வெளியான சில மணி நேரங்களுக்கு பிறகு பாரீஸில் இந்த கொடூர தாக்குதல் நிகழ்ந்துள்ளது.
ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு ஆதரவான நூற்றுக்கணக்கான நபர்கள் டுவிட்டரில் ‘ParisIsBurning’ என்ற ஹேஸ்டேக்கை உருவாக்கி கொண்டாடி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.