நேற்று வெள்ளிக்கிழமை(13/11/15) பிரான்சில் இடம் பெற்ற பயங்கரவாதிகளின் தாக்குதல்களால் 128 அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டும் 300 க்கும் மேற்பட்ட மக்கள் படுகாயமடைந்தும் 80 பேர்வரையிலானவர்களின் நிலைமை கவலைக்கிடம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. உலகத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ள இத்தாக்குதல்கள் தமிழர்களாகிய எம்மையும் பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.பாதிப்புற்ற மக்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
பயங்கரவாத்த்திற்கு எதிராக பிரான்சு அரசும் மக்களும் எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பிரான்சு வாழ் தமிழ் மக்களும் உலகத் தமிழர்களும் உற்ற துணையாக தோளொடு தோள் நிற்பார்கள் என்பதையும் உறுதியாகத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
சிறிலங்காவில் பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ,எவ்வித விசாரணைகளுமின்றி அநீதியான முறையில் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தம்மை விடுவிக்கக்கோரி உண்ணா மறுப்புப் போராட்டத்தை நடத்தி வருவது நீங்கள் அறிந்தத்தே!
உண்ணா மறுப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் கைதிகளில் 23 பேரின் நிலைமை மிக மோசமடைந்துள்ளதாகவும் அதில் 9 பேர் கவலைக்கிடமாக உள்ளதாகவும் வடமாகாண முதலமைச்சர் அறிவித்திருக்கின்றார்.
அரசியற் கைதிகளின் இப்போராட்டமானது ஆரம்பமானதிலிருந்து இன்று வரை பலதரப்பினராலும் பல்வேறு உறுதிமொழிகள் வழங்கப்பட்ட போதிலும் அவை எவையும் நிறைவேற்றப்படாத நிலையில் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்துவரும் அரசியற் கைதிகள் தமது போராட்டத்திற்கான ஆதரவை சகல அரசியற்கட்சிகள்,சமூக அமைப்புக்கள் மற்றும் புலம் பெயர் சமூகத்தினரிடமும் கோரியுள்ளனர்.
தமிழர் தாயகத்தில் இன்று பூரண ஹர்த்தால் நடைபெறும் இந்நிலையில் அரசியற்கைதிகளின் போராட்டத்தை வலுப்படுத்த புலம் பெயர் தளத்தில் இருக்கக் கூடியஅனைத்து சமூக அமைப்புக்களையும் மற்றும் சர்வ மதத் தலங்களையும் இணைந்துசெயலாற்றுமாறு கோருகின்றோம்.
தமிழ் அரசியல் கைதிகளின் போராட்டத்தையும் அவர்களது மோசமாகி வரும் உடல்நிலை குறித்தும் உடனடியாகவே பிரான்சு அரச தரப்பினரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளோம்.
அதே நேரத்தில் எதிர்வரும் புதன் கிழமை 2 மணிக்கு பிரான்சு நாடாளுமன்றச் சதுக்கத்தின் முன்பாக கவனயீர்ப்புப் போராட்டத்திற்கான முன் ஏற்பாடுகளைச் செய்திருந்தோம். ஆயினும் பிரான்சில் இடம் பெற்ற பயங்கரவாத தாக்குதல்களைத் தொடர்ந்து ஏற்பட்டிருக்கும் பாதுகாப்பு நிலமைகளை கருத்திற்கொண்டு இப்போராட்டத்தினைத் தவிர்க்கமுடியாமல் இன்னொரு திகதி அறிவிக்கும் வரை பின்போடப்பட்டுள்ளது என்பதை அன்போடு அனைவருக்கும் அறியத்தருகின்றோம்.
ஊடகப்பிரிவு
பிரான்சு தமிழீழ மக்கள் பேரவை