தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தால் ஆண்டுதோறும் இரு பிரிவாக நடாத்தப்படும் ஆசிரியர் செயலமர்வின் இரண்டாம் பிரிவாகிய பாலர் வகுப்பு முதல் வளர் தமிழ் 5 வரையான தமிழ்மொழி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான செயலமர்வு 29.10.2023 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பாரிசு 17 தமிழ்ச்சோலை மண்டபத்தில் காலை 9.30 அகவணக்கத்துடன் தமிழ்ச்சோலை கீதத்துடன் குறித்த செயலமர்வு தொடங்கியது.
தமிழை இரண்டாவது மொழியாக் கற்கும் மாணவர்களுக்கான சிறப்புக் கற்பித்தல் முறைமையை வெளிப்படுத்தும் விதமாகக் குழுக்காளாகப் பிரிக்கப்பட்ட ஆசிரியர்கள், மாணவர்களாகத் தம்மை உருவகப்படுத்தி கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளில் ஈடுபடுத்திக்கொண்டனர். ஏற்கனவே வழங்கப்பட்ட பாடத்தலைப்புகளுக்கு பாடக்குறிப்பு மற்றும் கற்பித்தல் துணைக்கருவிகளைக் கொண்டுவந்திருந்த ஆசிரியர்கள் சிறார் மொழிக்கல்விக்கேற்றபடி கற்பித்தலை மேற்கொண்டும் காட்டினர்.
பலவேற்று மொழிச் சொற்களின் வேர்ச்சொல் தமிழுக்கு உரித்தானது என்பதும் பலமொழிகளின் தாய்மொழி தமிழ்மொழி என்பதும் சான்றுகளுடன் பேராசிரியர்களால் நிறுவப்பட்டது. தாயகவிடுதலை நோக்கிய தமிழ்மொழிக் கற்பித்தலுக்கான உத்திகளும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டன. பல இளந்தலைமுறை ஆசிரியர்கள் ஈடுபாட்டுடன் இச்செயலர்வில் கலந்துகொண்டிருந்தனர்.
குறிப்பாக பிரான்சில் வைத்தியத்துறையிலும், விமான ஓட்டியாகவும், தொழில் நுட்பவியலாளர்களாகவும் கற்றுவரும் இரண்டாந்தலைமுறை வளவாளர்கள் தாய்மொழி பற்றுக் கொண்டு இச்செயலமர்விற்கு தங்கள் ஒத்துழைப்பை வழங்கியதைக் காணக்கூடியதாக இருந்து. திட்டமிட்டபடி மாலை 4.00க்கு தமிழ்மொழி வாழ்த்துடன் தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தின், ஆசிரியர் பயிற்சிப் பட்டறை நிறைவு பெற்றது.
ஊடகப்பிரிவு – மக்கள் தொடர்பு