நானாட்டான் – முசலி கால்நடை வளர்ப்போர் கூட்டுறவுச் சங்கத்தினால் மேய்ச்சல் நில காணியை விடுவிக்கக்கோரி கவனயீர்ப்புப் போராட்டமொன்று மன்னார் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இன்று முன்னெடுக்கப்பட்டது.
கட்டுக்கரைக் குளத்திற்குட்பட்ட புல்லறுத்தான் கண்டல் மேச்சல் நில காணியை விடுவிக்குமாறு தெரிவித்தே குறித்த போராட்டம் இடம்பெற்றது.
“ஒவ்வொரு வருடமும் மாந்தை மேற்கு, இலுப்பை கடவை பகுதிக்கு தமது கால்நடைகளை மேய்தலுக்காக கொண்டு செல்கின்றோம். இதன்போது பல்வேறு சொல்லண்ணா துயரங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றோம்.
அத்துடன் கால்நடை இழப்புக்களும், மனித இழப்புக்களும் அடிக்கடி இடம்பெறுகின்றன.
கட்டுக்கரைக் குளத்திற்குட்பட்ட புல்லறுத்தான் கண்டல் பகுதியை மேச்சல் நிலமாக பிரகடனப்படுத்த வேண்டும் என பல வருடங்களாக கோரிக்கை விடுத்து வந்தோம்.
கடந்த 12 ஆம் திகதி வட மாகாண ஆளுநர் தலைமையில் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானமும் இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பது வேதனையளிக்கிறது.
இவ்விடயத்தில் அதிகாரிகள் அலட்சியமாகவே நடந்துக்கொள்கின்றமை வெளிப்படையாக புலப்படுகிறது. எமக்கான மேய்ச்சல் நிலங்களை உடனடியாக விடுவித்து தருமாறு கோருகின்றோம்” எனப் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
இந்த போராட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சாள்ஸ் நிர்மலநாதன், நானாட்டான் – முசலி கால்நடை வளர்ப்போர் கூட்டுறவுச் சங்க அங்கத்தவர்கள், சிவில் சமூக அமைப்புக்கள், மதத் தலைவர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
இதன்போது, ஆர்ப்பாட்டக்காரர்களால் மகஜர் ஒன்றும் மாவட்ட செயலகத்தின் பிரதம கணக்காளரிடம் கையளிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.