முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜா மீதான அச்சுறுத்தலின் மூலம் நீதித்துறை சுயாதீனமாக செயற்பட முடியாத நிலைமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்படும் பௌத்தமயமாக்கல் செயற்பாடுகளிற்கு கண்டனம் தெரிவித்தும் வடகிழக்கில் முன்னெடுக்கப்படும் ஹர்த்தாலுக்கு முல்லைத்தீவில் முழுமையான ஆதரவு வழங்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் உள்ள வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதுடன், பொதுமக்களின் நடமாட்டம் மிகக்குறைவாக காணப்பட்டது.இதேவேளை அரச பேருந்து சேவைகள் வழமைபோல இடம்பெற்றிருந்ததுடன், தனியார் பேருந்து சேவைகள் ஸ்தம்பிதமடைந்திருந்தது.
இதேவேளை பாடசாலைகளில் பரீட்சை இடம்பெற்று வருகின்றமையால் கல்விச்செயற்பாடுகள் வழமைபோல இடம்பெற்றிருந்தது.வங்கிகள், நிதி நிறுவனங்கள் திறக்கப்பட்டிருந்த நிலையில் பொதுமக்கள் இன்மையால் நகரத்தின் இயல்பான செயற்பாடுகள் ஸ்தம்பிதமடைந்திருந்தது.
இதேவேளை நீதிமன்ற செயற்பாடுகளில் இருந்து சட்டத்தரணிகள் பணிபகிஷ்கரிப்பு செய்திருந்தனர்.மாவட்டத்தின் புறநகர்ப்பகுதிகளான முள்ளியவளை, ஒட்டுசுட்டான், புதுக்குடியிருப்பு, விசுவமடு, மாங்குளம் உட்பட ஏனைய உபநகரங்களின் வழமையான செயற்பாடுகளும் ஸ்தம்பிதமடைந்திருந்ததுடன், வியாபார நிலையங்களும் மூடப்பட்டிருந்தது.