1987-ஆம் ஆண்டு ஒக்ரோபர் 21-ஆம் 22-ஆம் திகதிகளில் இந்தியப்படைகள் யாழ் வைத்தியசாலையில் படுகொலை நடத்தினர். கேணல் பிரார் என்ற இந்திய அதிகாரியின் மேற்பார்வையில் இப்படுகொலை நடந்தது. இதில் ஊழியர்கள் , நோயாளிகள் என்று 68 பேர் கொல்லப்பட்டிருந்தனர்.
யாழ் நகரத்தின் கிழக்குப் புறமாக நகரில்; அமைந்துள்ள யாழ். போதனா வைத்தியசாலை யாழ் குடாநாட்டில் வாழ்கின்ற எட்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்களிற்கு மட்டுமன்றி அயல் மாவட்டங்களான கிளிநொச்சி, முல்லைத்தீவு போன்ற இடங்களிற்கும் பிரதான வைத்தியசாலையாக உள்ளது. தினசரி ஆயிரம் பேர் வரையில் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெறுவதோடு, பல கட்டட வசதிகளுடன், சத்திரசிகிச்சைப் பிரிவு, அவசர சத்திரசிகிச்சைப் பிரிவு எனப் பல பிரிவுகளுடனும் 1970களிலிருந்து இயங்கி வருகிறது.
1987ஆம் ஆண்டு ஒக்ரோபர்; பத்தாம் நாள் இந்தியப் படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான யுத்தம் தொடங்கியதிலிருந்து தொடர்ச்சியாக நடைபெற்ற போரின்மூலம் யாழ்நகரைக் கைப்பற்றும் முயற்சியில் இந்திய இராணுவத்தினர் ஈடுபட்டார்கள். யாழ்ப்பாணக் கோட்டையில் நிலை கொண்டிருந்த இந்திய இராணுவத்தினர் யாழ் நகரப்பகுதி மீது பெருமளவு எறிகணைத் தாக்குதல், விமானத் தாக்குதலை மேற்கொண்டிருந்தபோதும் யாழ். வைத்தியசாலையில் வைத்தியர்கள், ஊழியர்கள், தாதிமார் தமது உயிரையும் பொருட்படுத்தாமல் மக்களுக்கான வைத்திய சேவையை வழங்கிப் பல உயிர்களைக் காப்பாற்றிக் கொண்டிருந்தார்கள்;. 1987 ஒக்டோபர் இருபத்தோராம்; திகதி இந்தியப்படையினர் எறிகணை வீச்சு, விமானத் தாக்குதல்களை நடத்தியவாறு யாழ். நகரைநோக்கி முன்னேறினார்கள். யாழ். வைத்தியசாலையில் பணிகளில் ஈடுபட்ட வைத்தியர்கள், ஊழியர்கள், சிகிச்சை பெற வந்த நோயாளர்கள் போன்றோர் பாதுகாப்பிற்காக,வைத்தியசாலை எக்ஸ்றே பிரிவு அலுவலகம் அமைந்துள்ள இடத்தில் பாதுகாப்பு தேடினார்கள்.
பிற்பகல் 3.00 மணியளவில் யாழ் நகரப் பகுதிக்குள் இந்திய இராணுவம் உள்நுழைந்தது. பின்னர் 4.30 மணியளவில் யாழ். போதனா வைத்தியசாலைக்குள் நுழைந்த இந்திய இராணுவம் அலுவலகப் பகுதியில் வைத்தியசாலைச் சீருடையுடன் இருந்த ஊழியர்கள், நோயாளர் வண்டில், கட்டில், பாய், வாங்குகளிற் படுத்திருந்த நோயாளர்கள் என எல்லோரையும் சுட்டுப்படுகொலை செய்தது
இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர் கூறுகையில் :-
1987 ஒக்ரோபர் இருபத்தோராம் திகதி மாலை 4.30 மணியளவில் வைத்தியசாலையினுள் வந்த இந்திய இராணுவத்தினர் மறுநாள் காலை 10.00 மணி வரை வைத்தியசாலையில் மக்கள் மீது தாக்குதலை நடத்தினார்கள். தாக்குதலிற் காயப்பட்டவர்கள் சத்தமிடும் போது அவர்கள் மீது கைக்குண்டினை எறிந்ததுடன், துப்பாகியாலும் சுட்டார்கள். மறுநாள் காலை 6.00 – 7.00 மணிக்கிடையில் வைத்தியசாலையின் இருபத்தாறாவது நோயாளர் விடுதிப் பக்கமிருந்து சம்பவ இடத்திற்கு வந்த வைத்தியர் சிவபாதசுந்தரம் அவர்களும், இரண்டு தாதியினரும் இந்தியச் இராணுவத்தினருடன் கதைத்து எஞ்சியிருக்கும் பொதுமக்களைக் காப்பாற்ற முயற்சித்தார்கள். ஆனால் இராணுவத்தினர் ஓடிச் சென்று துப்பாக்கியினை எடுத்து வைத்தியரையும் கூடச்சென்றவர்களையும் சுட்டதில் அவர்கள் அனைவரும் உயிரிழந்தார்கள். காலை 10.00 மணியளவில் ஏனைய வைத்தியர்கள் எடுத்த முயற்சியினால் சம்பவத்தில் காயமடைந்து உயிருடனிருந்தவர்கள் காப்பாற்றப்பட்டார்கள். சம்பவத்தில் உயிரிழந்த மூன்று வைத்தியர்கள், இரண்டு தாதிமார்கள், மேற்பார்வையாளர், ஊழியர்கள் உட்பட இருபத்தொரு மருத்துவமனை பணியாளர்களும், நோயளார் விடுதிகளிற் சிகிச்சை பெற்றுவந்த நாற்பத்தேழு நோயாளர்களுமாக மொத்தம் அறுபத்தெட்டுப் பேர் உயிரிழந்தார்கள். உயிரிழந்த அனைவரது உடல்களையும் வைத்தியசாலை பின்வாசற் பக்கமுள்ள பிண அறைக்கு அருகிற் போட்டு இந்தியப்படையினர் எரியூட்டினர் எனத் தெரிவித்தார்.
1987ஆம் ஆண்டு ஒக்ரோபர் இருபத்தோராம், இருபத்திரண்டாம் திகதியில் கடமையின்பால் உயிர்நீத்த வைத்தியர்கள் உட்பட இருபத்தொரு ஊழியர்களையும் அவர்களுடன் உயிரிழந்த நோயாளர்கள் நாற்பத்தேழு பேரையும் யாழ்.மருத்துவமனை ஒவ்வொரு வருடமும் நினைவுகூர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது