தமிழர் ஒருங்கிணைப்புக்குழு தமிழர் கலைபண்பாட்டுக்கழகம் பிரான்சு ஆண்டு தோறும் நடாத்தும் தாயக விடுதலைப் பாடற் போட்டி சங்கொலி விருதிற்கானது 15.10.2023 ஞாயிற்றுக்கிழமை பாரிசின் புறநகர்ப்பகுதியில் ஒன்றான ஓன்லோ சூபுவா மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
காலை 10.30 மணிக்கு மாவீரர்கள் நினைவு திருவுருவப்படத்திற்கு முன்பாக ஈகைச்சுடரினை 02.04.2000 ஆம் ஆண்டு இத்தாவில் பகுதியில் சிறீலங்கா இராணுவத்துடன் ஏற்பட்ட நேரடி மோதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட 2 ஆம் லெப் காண்டீபனின் சகோதரி அவர்கள் ஏற்றி வைத்து மலர் வணக்கம் செய்யப்பட்டு அகவணக்கத்துடன் ஆரம்பமாகியது.
இன்றைய சங்கொலி போட்டி நிகழ்வில் கீழ்ப்பிரிவு, பாலர் பிரிவு, மத்திய பிரிவு, மேற்பிரிவு, அதி மேற்பிரிவு, அதிஅதி மேற்பிரிவு, சிறப்புப்பிரிவு என்ற 7 பிரிவுகளுக்கான போட்டிகள் நடைபெற்றிருந்தன.
இப்போட்டி நிகழ்வில் நடுவர்களாக திருவாட்டி ராதா சிறீதரன் அவர்கள் ( யாழ் நுண்கலை பீட பட்டதாரி, அத்துடன் இந்திய சங்கீதா சகாணா என்ற பட்டத்தை பெற்றவர் பல போட்டி நிகழ்வில் நடுவராக கடமையாற்றி வருபவர்)
திரு. தில்லைச்சிவம் அவர்கள் ( இசையமைப்பாளர் கீபோட் வாத்தியக் கலைஞர் ஈழநிலா இசைக்குழு இயக்குனர், சுரத்தட்டு ஆசிரியர்)
செல்வி. அனோஜினி எட்வேட் ( கலைமணி, சங்கொலி 2015, இசைவேள்வி 2017 க்கு உரியவரும், தமிழர் கலைபண்பாட்டுக் கழகப்பாடகர், இசை ஆசிரியர் ஆகியோர் கடமையாற்றியிருந்தனர்.
முதற்போட்டியாக கீழ்பிரிவுக்கான போட்டி இடம் பெற்றது. தொடர்ந்து பாலர் பிரிவுக்கான போட்டிகளோடு தொடர்ந்து போட்டிகள் இடம் பெற்றன. போட்டியாளர் குழந்தைகள் தமது பிஞ்சு மழலை மொழியில் பாடல்களை தத்துரூபமாக வழங்கியிருந்தனர். அதற்கேற்றவாறு கலைபண்பாட்டுக்கழக வாத்தியக்கலைஞர்கள் தமது அற்புதமான இசையை வழங்கியிருந்தனர்.
சிறப்புரையை பரப்புரைப் பொறுப்பாளர் வழங்கியிருந்தார்.
ஆண்டு தோறும் தாயக விடுதலைப்பாடற் போட்டி சங்கொலி நிகழ்வு நடாத்திவருவதையும், இந்த ஆண்டு 14 ஆவது ஆண்டினை தொட்டிருக்கும் இவ்வேளை பிரான்சு நாட்டிலே எமது கலைஞர்களை அவர்களின் பாடல்திறனினை ஊக்குவித்து அவர்களின் அற்புத திறனை மக்கள் முன் இனம்காட்டி பாடகர்களாக்கி தாயக விடுதலையோடும் பலபாடல்களையும், பாடல் வரிகளையும் தந்து மண்ணில் மாவீரர்களாகிப் போனவர்களின் மாண்பை வெளிக்காட்டி வெற்றியடையச் செய்யும் ஒரேயொரு களமாக சங்கொலி பாடற்போட்டி மட்டும்தான் அமைந்திருக்கின்றது என்றும், கலைபண்பாட்டுக்கழகத்தின் ஆக்கமும், ஊக்கமும் இது போன்ற போட்டி முன்னெடுப்புக்களும்தான், பிரான்சில் பலரை பாடகர்களாகவும், கலைஞர்களாகவும், இசையமைப்பாளர்களாகவும் உருவாக்கி விட்டுள்ளது என்றும், எனவே இக்கலைஞர்கள் தாம் எப்படி கலைபண்பாட்டுக்கழகத்தால் ஊக்கிவித்து உருவாக்கப்பட்டார்களோ அதேபோலவே இனிவரும் எம் கலைக்குழந்தைகளுக்கு இவர்கள் நன்றியோடு, தேசவிடுதலைப்பாடற்போட்டிகளுக்கு முன்னுரிமை கொடுத்து ஊக்கிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
இந்நிகவில் பிரான்சின் ஏனைய மாகாணங்களில் தொலைவிலிருந்து வந்து கலந்து கொண்டவர்களுக்கும் பாராட்டுக்களைத் தெரிவித்திருந்தனர்.
இந்நிகழ்வில் சிறப்பாக மதிப்பளித்தல் நிகழ்வும் நடைபெற்றது. சங்கொலி நிகழ்வில் ஆண்டு தோறும் தாயகவிடுதலைப் போராட்டத்திற்கு பிரான்சு மண்ணிலே கலையாலும், மொழியாலும், விளையாட்டு, குமுகாயப் பணியிலும் இன்று வரை பணியாற்றியவர்களை அவர்கள் வாழும் காலத்திலேயே மதிப்பளிக்கப்பட வேண்டும் என்ற தேசியத்தின் விருப்பிற்கமைய பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு ‘ விடுதலையின் வேர்கள் ‘ என்ற பட்டத்தை வழங்கியும் மதிப்பளித்து வருகின்றது. இந்த ஆண்டு அந்த பட்டத்தை எமது தாயக விடுதலைப் போராட்டத்திற்கு பிரான்சில் ஓர் வேராக இருந்த திரு. கந்தையா சச்சிதானந்தன் அவர்கள் கடந்த காலங்களில் தேசம் நோக்கிய செயற்பாடுகளில் ஆற்றிய பணிகள் பற்றி மக்கள் முன்னிலையில் அறிக்கையாக வாசித்தளிக்கப்பட்டது.
பரப்புரைப் பொறுப்பாளர் விடுதலையின் வேர் அறிக்கையை வாசித்தளிக்க தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, நிர்வாகப் பொறுப்பாளர் திரு. நிதர்சன், கலைபண்பாட்டுக்கழகப் பொறுப்பாளர் திரு. மாறன் நிதிப் பொறுப்பாளர் திரு. செவ்வேள் தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்புப் துணைப் பொறுப்பாளர் திரு. அமுதன் மற்றும் சென்ற ஆண்டு விடுதலையின் வேராக மதிப்பளிக்கப்பட்ட முந்நாள் தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகப் பொறுப்பாளர் திரு. க. ஜெயகுமாரன் ஆகியோர் முன்னிலையில் திரு. கந்தையா சச்சிதானந்தன் அவர்கள் மதிப்பளிப்பு செய்யப்பட்டிருந்தார்.
பாராட்டுப் பட்டயமும், அறிக்கையும் வழங்கப்பட்டது. சபையில் இருந்த அனைத்து மக்களும் எழுந்து நின்று கைகளை தட்டி தமது பாராட்டுதல்களை தெரிவித்திருந்தனர். திரு. சச்சிதானந்தன் அவர்களும் தனது உரையில் தன் அன்பையும் தொடர்ந்தும் தாய்மண்ணுக்காகவும் அதன் விடுதலைக்காகவும் அனைத்து வழிகளிலும் தொடர்ந்து உழைப்பேன் என்ற உறுதிமொழியை தெரிவித்திருந்தார்.
நடைபெற்ற இவ் போட்டி நிகழ்வில் ஓன்லே சூபுவா மாநகர துணை முதல்வர் மற்றும் கலைக்கு பொறுப்பானவர்களும் கலந்து கொண்டதோடு உரைகளும் ஆற்றியிருந்தனர். முதல்வர் உரையில் தமிழ்மக்களின் மண், மற்றும் மொழிமீதும் கொண்டுள்ள பற்றுதல்களை தாம் அறிவோம் என்றும் தாய் மொழி கலைபண்பாட்டோடு வளர்ந்து வருவதும் பெருமைமிக்க தென்றும் அனைவருக்கும் தமது வாழ்த்துதல்களையும் தெரிவித் திருந்தார்கள்.
தொடர்ந்து போட்டிகளில் பங்கு பற்றியவர்களுக்கும், வெற்றியீட்டிய போட்டியாளர்களுக்கும், கடமையாற்றிய நடுவர்கள் , மற்றும் கட்டமைப்புப் பொறுப்பாளர், பரிசில்களையும், வெற்றிக் கேடையங்களையும், பதக்கங்களையும் வழங்கி மதிப்பளிப்பு செய்திருந்தனர்.
இசைகளை வழங்கிய வாத்திய இசைக்கலைஞர்களும் மதிப்பளிப்பு செய்யப்பட்டனர்.
2023 ஆம் ஆண்டு சிறந்த பாடகராகவும் ‘ சங்கொலி’ விருதுக்கு உரியவராகவும் செல்வி. சிறீதரன் ஆரபி அவர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தார். ( இவர் இந்த ஆண்டு நடைபெற்ற இசைவேள்விப் போட்டியிலும் ‘ இசைத்துளிர்’ விருதையும் பெற்றுக்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.) கடந்த ஆண்டுகளில் சங்கொலி விருதினை பெற்றவர்கள், இசைக்கலைஞர்கள், நடுவர்கள் , கட்டமைப்புப் பொறுப்பாளர்கள் மத்தியில் மக்களின் கரகோசத்துக்கு மத்தியில் செல்வி. சிறீதரன் ஆரபி அவர்களுக்கு ‘சங்கொலி’ 2023 விருதினை கலைபண்பாட்டுக்கழகப் பொறுப்பாளராலும், துணைப்பொறுப்பாளர் செல்வி. சோதிராசா சோபியா, நிர்வாகப் பொறுப்பாளராலும் வழங்கி மதிப்பளிக்கப்பட்டது. நிகழ்வில் விருதினை பெற்ற செல்வி. சிறீதரன் ஆரபியின் தயார் ( நடன ஆசிரியர் திருவாட்டி சிறீதரன் மஞ்சுளா) அவர்களும், இசை ஆசிரியர் திருமதி சைலஜா அவர்களும் ஆரபி பற்றிய உரைகள் ஆற்றியிருந்தனர். நிகழ்வினை தனது குரல் ஆளுமையுடன் காலை தொடங்கிய நேரத்திலிருந்து இறுதி நிகழ்வு முடியும் வரை சேர்வின்றி உற்சாகமாக அறிவிப்பாளர் திரு. கிருஸ்ணா அவர்கள் வழங்கி நெறிப்படுத்தியிருந்தார். தாயக நிகழ்வுகளை தொடர்ந்து தமது படப்பிடிப்புக்களால் பங்களிப்பு செய்து கொண்டிருக்கும் கே. எம். எஸ் வீடியோ ஸ்தாபனத்தார் தமது ஒளிப்படக்கலையையும், கலவையும் செய்திருந்தனர்.
2023 தாயகவிடுதலைப்பாடற்போட்டியில் அனைத்து பிரிவிலும் வெற்றி பெற்றவர்கள் விபரம் பின் வருமாறு :
பாலர் பரிவு : சிறுமி. கந்தவேள் சுமிகா அவர்கள்
கீழ்ப்பிரிவு : 1 ஆம் இடம்: செல்வன். மாதவன்.அர்ஜின்
2 ஆம் இடம்: செல்வி. இலக்குமி சுதன்
3 ஆம் இடம்: செல்வி லெகோன் டார்வின் டிசா
மத்திய பிரிவு : 1 ஆம் இடம்: செல்வன். ஜீவராசா ப்ரவீன் ராஜா
2 ஆம் இடம்: செல்வி. ரூபகரன் அஸ்றியா
3 ஆம் இடம்: செல்வி. சிறிதரன் அசுரா
மேற்பிரிவு : 1 ஆம் இடம்: செல்வி.சசிதரன் தஸ்மிதா
2 ஆம் இடம்: செல்வி. ரூபாகரன் அஸ்மியா
3 ஆம் இடம்: செல்வி. சுரேஸ்குமார் தமிழினி
அதிமேற்பிரிவு : 1 ஆம் இடம்: செல்வி. பத்மராஜா கோபிகா
2 ஆம் இடம்: செல்வன்.பொன்னுச்சாமி விக்ரம் அமலியா
3. ஆம் இடம்: செல்வி. சத்தியநாதன் அமலியா
அதிஅதி மேற்பிரிவு : 1 ஆம் இடம்: செல்வி.திருவருள் லோயா
2 ஆம் இடம்: செல்வி.பத்மராஜா லோஜிகா
3 ஆம் இடம்: செல்வி. காந்தராசா ஆபேரி
சிறப்புப் பிரிவு : 1 ஆம் இடம்: ரவீந்திரன் மிறோஜன்
2 ஆம் இடம்: அ. செல்வராஜா
3 ஆம் இடம்: அருளேந்தி யோகேஸ்வரி
தாயக விடுதலைப் பாடற்ப் போட்டி சங்கொலி 2023 நிகழ்வு நம்புங்கள் தமிழீழம் பாடலுடனும், தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் தாரக மந்திரத்தோடு இனிதே நிறைவு பெற்றது.