சுவிசில் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்ட தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் – 2023!

0
135

விசில் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்ட முதற்பெண் மாவீரர் 2ம். லெப். மாலதி நினைவுநாளும், தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளும், 

தமிழீழ விடுதலையின் தடைஅகற்றிகள் நினைவு சுமந்த வணக்கநிகழ்வும்!

முதற்பெண் மாவீரர் 2ம். லெப். மாலதியின் 36 வது ஆண்டு நினைவுநாளும், தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளும், தமிழீழப் போராட்ட வரலாற்றில் பல புரட்சிகரமான திருப்பங்களை ஏற்படுத்திய தமிழீழ விடுதலையின் தடை அகற்றிகள் நினைவு சுமந்த வணக்க நிகழ்வானது  14.10.2023 சனி, ஜெனீவா மாநிலத்தில் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்டது. 

முதற்பெண் மாவீரர்; 2ம் லெப் மாலதி உட்பட ஐந்து மாவீரர்கள், சிறீலங்கா இந்திய அரசுகளின் கூட்டுச் சதியினை முறியடித்து சயனைட் உட்கொண்டு வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப்; கேணல் குமரப்பா, லெப். கேணல் புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகள், தென்தமிழீழத்தின் மட்டுமண்ணில் வீரச்சாவடைந்த மட்டு. அம்பாறை மாவட்ட தாக்குதல் தளபதி லெப். பரமதேவா, தமிழீழ விடுதலைப் புலிகளின் மத்தியகுழு உறுப்பினரும், திருமலை மாவட்ட சிறப்புத் தளபதியுமான லெப். கேணல் சந்தோசம் மாஸ்ரர், கேணல் கிட்டு பீரங்கிப் படையணியின் சிறப்புத் தளபதி கேணல் ராயூ, பிரான்சு நாட்டில் சிறிலங்கா அரசின் கைக்கூலிகளினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப். கேணல் நாதன், கப்டன் கஜன் ஆகியோரின்; நினைவுகள் சுமந்த இவ்வெழுச்சி நிகழ்வில் பல நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.

சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்வெழுச்சி வணக்க  நிகழ்வில் பொதுச்சுடரேற்றலுடன் தமிழீழத் தேசியக்கொடி ஏற்றி வைக்கப்பட்டதனைத் தொடர்ந்து ஈகச்சுடரேற்றலுடன் மலர்மாலை அணிவிக்கப்பட்டு அகவணக்கம், மலர்;வணக்கம் செலுத்தப்பட்டது. மக்களால் சுடர், மலர்வணக்கம் செலுத்தப்பட வணக்கப் பாடல்கள் பாடப்பட்டன.

மாவீரர் வித்துக்களின் நினைவு சுமந்த வணக்க நிகழ்வில் இளையவர்களின் எழுச்சிப் படைப்புகளாக எழுச்சிப் பாடல்களுடன், வீணை இசையில் எழுச்சிப் பாடல்களும், சூரியத்தேவனின் நேரியக்கதிர்கள் எனும் தலைப்பில் கவி நிகழ்வும், பல எழுச்சி நடனங்களுடன் நினைவுரை, சிறப்புரையும் இடம்பெற்றது.

தாய்நாட்டின் விடுதலையோடு பெண்ணினத்தின் விடுதலையையும் கருத்திற் கொண்டு ஆயுதமேந்தி இந்திய வல்லாதிக்கத்திற்கெதிராக வீரப்பெண்ணாக விடுதலைக்காய் வீறு கொண்டெழுந்து வித்தாகி வீழ்ந்த 2ம் லெப் மாலதி அவர்களின்  நினைவு நாளானது தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளாகவும் நினைவுகூரப்பட்டு வருகின்றது.

நிகழ்வின் இறுதியாக நம்புங்கள் தமிழீழம் பாடலுடன் தமிழீழத் தேசியக்கொடி கையேற்றலினைத் தொடர்ந்து தாரக மந்திரத்துடன் நிகழ்வுகள் உணர்வெழுச்சியுடன் நிறைவுபெற்றன. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here