பிரான்ஸ் நாட்டின் அராஸ் நகரில் உள்ள பள்ளி மீது மர்ம நபர் நடத்திய தாக்குதலுக்கு பிறகு பிரான்ஸ் முழுவதும் சுமார் 7000 ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணிக்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
பிரான்ஸ் பள்ளியில் தாக்குதல்
பிரான்ஸ் நாட்டின் அராஸ் நகரில் உள்ள பள்ளியில் செச்சென் நாட்டு வம்சாவளியைச் சேர்ந்த முகம்மது என்ற 20 வயது இளைஞர் கையில் கத்தியுடன் தாக்குதல் நடத்தினார்.
இந்த தாக்குதலில் டொமினிக் பெர்னார்ட் என்ற பள்ளியின் பிரெஞ்சு ஆசிரியர் ஒருவர் குத்திக் கொல்லப்பட்டார், அத்துடன் மற்றொரு ஆசிரியர், பள்ளியின் பாதுகாவலர் ஒருவர் மற்றும் சுத்தம் செய்யும் பணியாளர் ஒருவர் ஆகியோர் மருத்துவமனையில் உயிருக்கு போராடிக்கொண்டிருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
தாக்குதல் நடத்திய நபர் அல்லாஹு அக்பர் என்று கத்தி முழக்கமிட்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், தாக்குதல் நடத்தியவர் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும், இஸ்ரேல்-ஹமாஸ் பிரச்சினைக்கும், இந்த தாக்குதலுக்கும் தொடர்பு இருப்பதாக பிரான்ஸ் உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டார்மானின் தெரிவித்துள்ளார்.
இளைஞரின் தாக்குதலை தொடர்ந்து நகரில் உள்ள அனைத்து பள்ளிகளும் பாதுகாப்பு காரணங்கள் கருதி மூடப்பட்டது.
7000 ராணுவத்தினர் குவிப்பு
அராஸ் நகரில் உள்ள பள்ளியில் தாக்குதல் நடத்தப்பட்ட பிறகு, சுமார் 7000 ராணுவ வீரர்கள் பிரான்ஸ் சாலைகளில் ரோந்து பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.