இலங்கையில் எதிர்வரும் ஜனவரி மாதம் 8 ஆம் தேதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் எதிரணியின் பொது வேட்பாளர் மைத்ரிபால சிறிசேனவை ஆதரிப்பது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவெடுத்து அறிவித்துள்ளது.
எனினும் இதுதொடர்பில் அவருடன் எழுத்துபூர்வமான உடன்பாடு ஏதும் இல்லை என்றாலும் அவர் மீது தங்களுக்கு நம்பிக்கை உள்ளது என பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தர்.
மைத்ரிபாலவை ஆதரிக்கும் எதிரணியில் பௌத்த கடும்போக்கு கொள்கைகளை உடைய கட்சிகள் இருக்கின்றன என்பதை தாங்கள் உணர்ந்துள்ளதகவும் சம்பந்தர் கூறுகிறார்.
நீடித்திருக்கும் இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் தாங்கள் விவாதித்துள்ள விஷயங்கள் மைத்ரிபால சிறிசேனவுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளன எனவும் அவர் தெரிவித்தார்.
நாட்டில் யுத்தம் முடிவடைந்த பிறகு இனப்பிரச்சினைக்கான தீர்வு காண்பதற்கு மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் இருந்தன, ஆனால் அதை பயன்படுத்திக் கொள்ளாமால் அவர் வீணடித்துவிட்டார் எனவும் சம்பந்தர் கூறினார்.