சுவிற்சர்லாந்தில் மிக சிறப்பாக நடைபெற்ற தமிழ் இளையோர் மாநாடு 2023!

0
125

சுவிற்சர்லாந்தில் தமிழ் இளையோர் மாநாடு 30.09.2023 ஆம் நாள் பேர்ண் மாநிலத்தில் தமிழ்க் கல்விச்சேவையின் ஏற்பாட்டில் சுவிற்சர்லாந்தில் வாழ்ந்துவரும் தமிழ் இளையோரை ஒன்றிணைத்து மூன்றாவது முறையாக நடைபெற்றது. மங்கலவிளக்கேற்றலுடன் தொடங்கிய இம்மாநாட்டில் இளையோரும் பார்வையாளர்களாக தமிழ்ப்பள்ளி முதல்வர்கள், ஆசிரியர்கள், மாநில இணைப்பாளர்கள், செயற்பாட்டாளர்கள், பெற்றோர்கள் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

இம்மாநாட்டில் மலேசியா நாட்டிலிருந்து வருகைதந்திருந்த மலேசியத் தமிழ் நெறிக் கழகத் தலைவரும், நூற்றுக்கணக்கான கலைச் சொற்களை உருவாக்கி மக்கள் பயன்பாட்டுக்குக் கொடுத்தவருமாகிய மதிப்புக்குரிய முத்தமிழ் முரசு திரு இரா. திருமாவளவன் அவர்கள் கலந்துகொண்டு தமிழ் நலன் பேணும் திட்டங்கள் என்ற கருப்பொருளில் தமிழ் வாழவும் வளரவும் ஆற்றவேண்டிய பணிகளைச் சிறப்பாக விளக்கினார். தமிழர் தமிழர்களோடு தமிழில் உரையாட வேண்டும், அதற்கு முதலில் வீட்டில் தமிழ் மட்டுமே பேச்சுமொழியாக இருத்தல் வேண்டும், பிள்ளைகளுக்குத் தமிழ்ப்பெயர்களைச் சூட்ட வேண்டும், தூய தமிழ்ச்சொற்களையும் கலைச்சொற்களையும் அறிமுகப்படுத்துவதோடு அவற்றை அன்றாடம் எமது பேச்சிலும் எழுத்திலும் பயன்படுத்த வேண்டும் எனவும் உலகத் தமிழர்களை ஒன்றிணைக்கும் பாலமாக விளங்கும் தாய்மொழியாகிய தமிழை அழியவிடாது காக்க வேண்டியது ஒவ்வொரு தமிழரதும் கடமை என்பதையும் தெளிவாகவும் தூயதமிழ்ச்சொற்களைப் பயன்படுத்தியும் விளக்கியிருந்தார். 

அடையாள நெருக்கடி மற்றும் மீண்டுவரும் திறன் – உலகப் படிப்பினைகள் என்ற கருப்பொருளோடு யேர்மனி நாட்டிலிருந்து வருகைதந்திருந்த கட்டட வரைகலைஞர் திரு. அலோசியஸ் அகஸ்ரின் அவர்களின் உரை இடம்பெற்றது. அவர் உலகில் பல இனங்கள் தங்கள் வேர்களை இழந்து வேற்றினங்களோடு கலந்துள்ளமையையும் சில இனங்கள் விழிப்புணர்வுடன் தங்கள் இனத்தை நிலைநிறுத்தப் போராடுவதையும் எடுத்துக்காட்டுகளுடன் விளக்கினார். தமிழினம் தனது இனத்தொன்மையை நிறுவி,  தலைமுறைகள் சந்தித்த அழிவுகளையும் வலிகளையும் தனது எல்லாத் தலைமுறைகளுக்கும் தொடர்ச்சியாகக் கடத்தி, அவர்களது நினைவுகளோடு பதியவைக்க வேண்டும் என்று தெரிவித்தார். இதற்கு யூத மக்களது வரலாற்றை ஆய்வடிப்படையில் மிக எளிமையாகவும் இளையவர்கள் விளங்கிக்கொள்ளக்கூடிய வகையிலும் விளக்கியிருந்தார்.

செல்வி சிவப்பிரியா சிவராஜன் அவர்கள் ஈழத்தில் நடைபெற்றுவரும் திட்டமிட்ட தமிழினவழிப்பு என்ற தலைப்பில் ஈழத்தமிழர்கள் மீது சிங்கள அரசுகள் திட்டமிட்டு மேற்கொண்டுவரும் தமிழின அழிப்புகளையும் அதனால் தமிழர்களுக்கு ஏற்பட்ட விளைவுகளையும் விளக்கியதோடு, இதனை வேற்று இனத்தவர்களுக்குக் கொண்டுசெல்வதற்கு இளையோர் ஆற்றக்கூடிய பணிகளையும் விளக்கினார்.

திரு. ஜெயானந்தராசா வினுசன் அவர்கள் தமிழ்க் கல்விச்சேவையின் துணை அமைப்பான (TESS CARE) அமைப்பின் செயற்பாடுகள் பற்றியும் இளையோர்களிடையே சேமிப்பை ஊக்குவிக்கும் முகமாக சேமிப்பது எப்படி? எனும் தலைப்பில் சேமிப்பதற்கான வழிகள் பற்றியும் விளக்கியிருந்தார்.

2022 ஆம் ஆண்டு நடைபெற்ற இளையோர் மாநாட்டில் உருவாக்கப்பெற்ற இளையோர்  செயலணியின் ஓராண்டுகாலச்  செயற்பாடுகளை செல்வன் பாஸ்கரலிங்கம் லோகிதன், செல்வி ஆரபி அருந்தவராஜா ஆகியோர் விளக்கினார்கள்.

சுவிற்சர்லாந்தில் தமிழ் மக்களின் உயர்வுக்கு இளையோர் ஆற்றக்கூடிய பணிகள் எனும் பெருந்தலைப்பில் மருத்துவம், சட்டம், விளையாட்டு, கல்வி, பொருண்மியம் ஆகியவற்றை முதன்மைப்படுத்தியதாகக் குழுநிலைக் கலந்துரையாடல் இடம்பெற்றது.

இக்குழுநிலைக் கலந்துரையாடலில் எடுக்கப்பெற்ற தீர்மானங்கள் 2023 –  24 ஆம் ஆண்டுக்குள் நிறைவேற்றப்படுவதோடு, இன்று வருகை தந்த அனைத்து இளையோர்களும் 2023  – 24 ஆம் ஆண்டுக்கான இளையோர் செயலணியாக இணைந்து செயற்படவுள்ளனர் என்ற முடிவும் ஒரு மனதாக எடுக்கப்பெற்றது.

2022 ஆம் ஆண்டு தெரிவுசெய்யப்பெற்ற இளையோர் செயலணி இன்றைய இளையோர் மாநாட்டை மிகச் சிறப்பாக ஒழுங்கமைத்து நடத்தியிருந்தமை பாராட்டுக்குரியது. இவர்களுக்கு உறுதுணையாக இருந்த பெற்றோர், மாநில இணைப்பாளர்கள், முதல்வர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், செயற்பாட்டாளர்கள் அனைவருக்கும் உளமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

-தமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here