இஸ்ரேல் மீது திடீரென்று ராக்கெட் வீச்சில் ஈடுபட்ட ஹமாஸ் படைகளால் ஸ்தம்பித்துப் போன இஸ்ரேல், போர் பிரகடனம் செய்துகொண்டு கடுமையான பதிலடி அளித்துள்ளது.
உக்கிரமான தாக்குதல்
அக்டோபர் 7ம் திகதி இஸ்ரேல் மீது ஹமாஸ் படைகள் தொடுத்த திடீர் தாக்குதலானது கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத உக்கிரமான தாக்குதல் என கூறப்படுகிறது. நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதுடன், இஸ்ரேல் நிர்வாகம் உடனடியாக போர் பிரகடமும் முன்னெடுத்தது. அக்டோபர் 8ம் திகதி இரண்டாவது நாளில். இஸ்ரேல் தரப்பில் பலி எண்ணிக்கை 250 தொட்டுள்ளதாகவும், இஸ்ரேல் அளித்த பதிலடியில் பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் 230 பேர்கள் கொல்லப்பட்டதாகவும் 1,610 பேர்கள் காயங்களுடன் தப்பியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனிடையே நாடு மிக சிக்கலான நீண்ட கால போருக்கு துணிந்துள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். அத்துடன் காஸா பகுதியில் ஒளிந்திருக்கும் ஹமாஸ் படையினரின் குடியிருப்புகளை தரைமட்டமாக்கப்படும் எனவும் சூளுரைத்துள்ளார். சனிக்கிழமை இரவு நெதன்யாகு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையின் அடிப்படையில், காஸா பகுதிக்கான மின்சாரம், எரிபொருள் மற்றும் பொருட்கள் விநியோகத்தை இஸ்ரேல் நிறுத்தும் என்றே கூறப்படுகிறது.
சண்டை நீடித்து வருகிறது
ஹமாஸ் படைகள் முன்னெடுத்துள்ள அதிரடி தாக்குதலை கடுமையாக விமர்சித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், இஸ்ரேலுக்கு ஆதரவளிப்பதாக குறிப்பிட்டுள்ளார். ஹமாஸ் படைகள் சனிக்கிழமை அதிகாலை இஸ்ரேல் எல்லைக்குள் நுழைந்தது. பல்வேறு பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தனர். தற்போது அந்த பகுதிகளில் சண்டை நீடித்து வருகிறது.
இந்த நிலையில், அமெரிக்க வெளிவிவகார செயலர் ஆண்டனி பிளிங்கனிடம் பாலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் தெரிவிக்கையில், பாலஸ்தீனிய மக்களுக்கு எதிரான அநீதி இஸ்ரேலுடனான மோதலை மோசமான நிலைக்குத் தள்ளியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளதாக கூறும் பாலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ், அரசியல் முட்டுக்கட்டைகளே பிராந்தியத்தில் தற்போதைய கடும்போக்கு நிலை காரணம் என குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவுடன் ஆலோசனை
இந்த நிலையில், அமெரிக்கா ராணுவ உதவி அளிப்பது தொடர்பில் இஸ்ரேலிய அதிகாரிகளுடன் ஆலோசனை முன்னெடுக்க இருப்பதாகவும், ஞாயிறன்று அறிவிப்பு வெளியாகலாம் எனவும் கூறப்படுகிறது. பாலஸ்தீன-இஸ்ரேல் வன்முறையைத் தணிக்கும் முயற்சியில் சவுதி அரேபியா மற்றும் ஜோர்டானுடன் எகிப்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக எகிப்திய வெளிவிவகார அமைச்சகம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது.
அத்துடன், சவுதி அரேபியா இந்த விவகாரம் தொடர்பில் அமெரிக்காவுடன் ஆலோசனை முன்னெடுத்துள்ளதாகவும், இரு தரப்பும் இறுக்கத்தை கைவிட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே, ஹமாஸ் படையினரின் தாக்குதலை கடுமையாக விமர்சித்துள்ள பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக், இஸ்ரேலுக்கு ஆதரவளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.