பிரான்சில் ஆர்ஜெந்தே நகரில் கடந்த 2014 ஆண்டு நாட்டப்பட்ட தியாக தீபம் லெப். கேணல். திலீபனின் நினைவுக்கல்லின் முன்பாக 01.10.2023 ஞாயிற்றுக்கிழமை பி. பகல் 15.00 மணிக்கு எழுச்சி நிகழ்வுகள் நடைபெற்றன.
ஆரம்ப நிகழ்வாக பொதுச்சுடரினை தமிழ்ச்சோலைத் தலைமைப்பணியக பொறுப்பாளர் திரு. நாகயோதீஸ்வரன் அவர்கள் ஏற்றிவைத்தார்.
தொடர்ந்து பிரெஞ்சு நாட்டு தேசியக் கொடியினை ஆர்ஜெந்தே மாநகரமுதல்வர் ஏற்றி வைக்க தமிழீழத்தேசியக் கொடியினை துணை முதல்வர் ஏற்றி வைத்தார்கள்.
நினைவுக்கல்லின் முன்பாக மாவீரர் குடும்பம் லெப். கேணல் திலீபன், கேணல் சங்கர் திருவுருவப்படத்திற்கும் ஈகை சுடர் ஏற்றி வைத்தும், மலர் மாலை அணிவித்தும் அகவணக்கம் செலுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பொதுமக்கள், குழந்தைகள் பெரியவர்கள் மலர் வணக்கத்தையும், சுடர் வணக்கத்தையும் செய்திருந்தனர். தியாகதீபம் திலீபன் லெப். கேணல். நினைவாகவும், கேணல்; சங்கர் அவர்களின் நினைவாகவும் தமிழ்ச்சோலை மாணவர்கள் நடனத்தையும், பாடல்களை, கவிதைகளையும் வழங்கியிருந்தனர்.
நிகழ்வில் மாநகர துணைமுதல்வர் உரையாற்றியிருந்தார். இங்கு வாழும் தமிழ்மக்களின் உணர்வுகளை தாம் புரிந்து கொள்வதாகவும், அவர்கள் பிரான்சு மண்ணிலும், தமது மொழி, கலைபண்பாடு பழக்கங்கள் பற்றிய தாம் நிறையவே அறிந்திருப்பதாகவும், அவர்களின் விடுதலைக்கு தமது இதயபூர்வமான பங்களிப்பை எப்பொழுதும் வழங்குவதாகவும் கூறியிருந்தார்.
தாயகத்திலிருந்து வருகை தந்திருந்த கிழக்கு மாகாண அனைத்து மதத்தின் கூட்டுப் பொறுப்பாளர் வணபிதா கந்தையா ஜெகாதாஸ் அவர்கள் மக்களின் அன்பான அழைப்பை ஏற்று கலந்து கொண்டதோடு தியாக தீபத்தின் தியாகத்தையும், நினைவுகளையும் ஆன்மீகம் அதற்காக எவ்வாறு மதிப்பளிக்கின்றது என்றும் நினைவுரையாற்றியிருந்தார். தமிழகத்திலிருந்து வருகைதந்திருந்த தமிழின உணர்வாளர், முந்நாள் சட்ட மன்ற உறுப்பினர் திரு. கருணாஸ் அவர்கள் தியாக தீபம் திலீபன் பற்றிய கவிதையினை உணர்வு பூர்வமாக வழங்கியிருந்தார்.
சிறப்புரையை தமிழர் ஒருங்கிணைப்புக்குழு தமிழ்ச்சங்கங்களின் கூட்டப்பின் துணைப் பொறுப்பாளர் திரு. அமுதன் அவர்கள் ஆற்றியிருந்தார். அவர் தனது உரையில் அடக்கு முறைக்கு எதிரான தமிழர்களின் ஆயுதப்போராட்டத்தையும், தீர்வையும் சர்வதேசத்தின் துணையுடன் முடக்கிய சிங்கள பௌத்த பேரினவாதம், அந்த மக்களின் அகிம்சை ரீதியான சனநாயக வழியிலான போராட்டத்தையும் தனது அடாவடித்தனத்தால் முடக்கியதன் ஒரு வெளிபாடே தமிழரின் தலைநகராம் திருகோணமலையில் திலீபனின் ஊர்த்திப் பவனியின் போது நடைபெற்ற வன்முறையும், அதற்காக சட்டமும் நீதியும் உண்மையின் பக்கம் நின்ற போது அவர்கள் உயிர் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதும், சட்டமும், நீதியும் இலங்கைத்தீவில் தலைவிரித்து பேயாட்டம் ஆடுகின்றது ஒரு நீதிபதியே தன்உயிர்காக்க நாட்டைவிட்டு வெளியேறியிருப்பது ஓர் எடுத்துக் காட்டு என்பதையும் இதிலிருந்து தமிழ்மக்கள் இன்னும் விழிப்படைய வேண்டும் சிங்களத்துடன் இனியும் அவர்களின் ஆட்சியில் வாழ முடியாது தனித்து வாழ்வதே தமிழர்களுக்கான தீர்வாக அமையும் என்பதையும் அதனை சர்வதேசம் புரிந்து கொண்டு தமிழீழ மக்களுக்கும், அவர்களின் அபிலாசைகளையும் நிறைவேற்ற வேண்டும் அதற்காக தமிழ்மக்கள் தொடர்ந்து தொடர்ந்து சனநாயக வழியில் போராடவேண்டும் எம் தேசியத்தலைவர் 2008 மாவீரர்நாளில் கூறியது போன்று இளையவர்கள் அதில் பெரும் நாட்டம் கொள்ள வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
நவம்பர் 27 ஆம் நாள் நடைபெறப்போகும் தமிழீழ தேசிய மாவீரர்நாளில் தொடர்ந்தும் அதிக அளவில் மக்கள் பங்கு கொண்டு எமது மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தி அவர்களின் திருவுருவப்படத்திற்கு முன்னால் உங்கள் விருப்பத்தை நாம் நிறைவேற்ற தொடர்ந்து உழைப்போம் என்று உறுதியெடுத்துக்கொள்வோம் என்று உரைத்திருந்தார்.
தொடர்ந்து தியாக தீபம் திலீபனுடன் அக்காலத்தில் அரசியல் பணியாற்றிய திரு. சுதன் அவர்கள் திலீபன் பற்றியும், கேணல் சங்கர் அவர்கள் பற்றிய நினைவுகளையும் பகிர்ந்து கொண்டார்.
நம்புங்கள் தமிழீழம் பாடலுடன் தேசியக் கொடிகள் இறக்கி வைக்கப்பட்டு தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் தாரகமந்திரத்துடன் எழுச்சி வணக்க நிகழ்வு நிறைவு பெற்றது. பல நூறு மக்கள் குழந்தைகள், பெரியவர்கள், இளையவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
ஊடகப்பிரிவு – மக்கள் தொடர்பு – தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்சு