ஜெர்மனியின் பெர்லின் நகரில் நடைபெறவுள்ள பெர்லின் உலகளாவிய மாநாட்டில் (Berlin Global Dialogue) கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று அதிகாலை நாட்டிலிருந்து புறப்பட்டுச்சென்றார்.
நாளையும் (28) நாளை மறுதினமும் (29) இந்த மாநாடு நடைபெறவுள்ளது.
நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜெர்மனிக்கு சென்றுள்ள ஜனாதிபதி, பெர்லின் உலகளாவிய மாநாட்டில் உலக நாடுகளின் தலைவர்களுடன் ஒன்றிணைந்து வர்த்தகம் மற்றும் பிரத்தியேகத் திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடவுள்ளார்.
ஜெர்மன் அதிபர் Olaf Scholz-இன் தலைமையில் இந்த மாநாடு நடைபெறவுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் ஜெர்மன் அதிபருக்கிடையிலான சந்திப்பொன்றும் இதன்போது நடைபெறவுள்ளது.
இதனிடையே, ஜனாதிபதியின் கீழ் உள்ள அமைச்சுகளின் பணிகளை கண்காணிப்பதற்காக 5 பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி, பதில் நிதியமைச்சராக ஷெஹான் சேமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி ஜெர்மனுக்கான உத்தியோகபூர்வ விஜயம் நிறைவுபெறும் வரை நிதி, பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் தேசியக் கொள்கை அமைச்சின் கடமைகளை ஆற்றுவதற்காக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் பதில் பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தொழில்நுட்ப பதில் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இராஜாங்க அமைச்சர் அனுபா பாஸ்குவல், பெண்கள், சிறுவர் விவகாரம் மற்றும் சமூக வலுவூட்டல் பதில் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலீட்டு ஊக்குவிப்பு பதில் அமைச்சராக இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய நியமிக்கப்பட்டுள்ளார்.