2024ல் ஜனாதிபதி தேர்தலை நடத்தினால் நாட்டு மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்ய முடியாது போகுமென்ற ஐக்கிய தேசிய கட்சி அக்கிராசனர் வஜிர அபேவர்த்தனவின் அறிவிப்பை அபாய எச்சரிக்கையாகவே பார்க்க வேண்டியுள்ளது. நாடாளுமன்ற ஆட்சியும் நீட்சி பெறும் சாத்தியமுண்டு. உள்;ராட்சித் தேர்தலுக்கு என்ன நடந்தது என்பது நல்லதொரு பாடம்.
இந்த மாத ஆரம்பத்தில் எழுதிய பத்தியில் ஜே.ஆர்.ஜெயவர்த்தன முதலாவது ஜனாதிபதியாக தேர்தல் மூலம் தெரிவாகவில்லையென்பதையும், அரசியலமைப்பில் திருத்தத்தை மேற்கொண்டு தம்மைத்தாமே ஜனாதிபதியாக்கிக் கொண்டாரென்பதையும் குறிப்பிட்டிருந்தேன்.
1977க்குப் பின்னர் 1983ல் இடம்பெற வேண்டிய பொதுத்தேர்தலை சர்வஜன வாக்கெடுப்பின் வழியாக 1989 வரை பின்தள்ளி, நாடாளுமன்றத்தின் பதவிக் காலத்தை பன்னிரண்டு ஆண்டுகளுக்கு நீட்டினார் என்பதையும் அப்பத்தியில் சுட்டியிருந்தேன்.
ஜே.ஆரின் அரசியல் வாரிசான ரணில் விக்கிரமசிங்க மேற்குறிப்பிட்டவைகளில் எவைகளை கடைப்பிடிக்கும் எண்ணவோட்டத்தில் இருக்கிறாரோ தெரியாது என்றும் அடிக்குறிப்பிட்டிருந்தேன். என்ன காலமோ என்ன நேரமோ ரணில் விக்கிரமசிங்க இதில் ஏதோ ஒன்றை அல்லது இரண்டையும் பின்பற்றப் போகிறாரோ என்ற அச்சம் இன்று தென்னிலங்கையில் தோன்றியுள்ளது.
ரணிலின் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியின் அக்கிராசனர் வஜிர அபேவர்த்தன இது தொடர்பாக வெளியிட்ட ஒரு கருத்தும், இதற்குப் பதிலடியாக முன்னாள் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்த கருத்தும் இப்போது பெருமளவில் விமர்சிக்கப்படுகின்றன.
கடந்த பொதுத்தேர்தலில் முழுமையாகத் தோல்வியடைந்த ஐக்கிய தேசிய கட்சிக்கு தேசியப் பட்டியல் மூலம் கிடைத்த ஆசனத்தால் ரணில் நாடாளுமன்ற உறுப்பினரானார். கடந்த வருட அறகலய போராட்டத்தால் பதவி இழந்த கோதபாயவின் ஜனாதிபதி ஆசனத்துக்கு ரணில் நாடாளுமன்றத்தால் தெரிவானதையடுத்து, அவரது தேசியப்பட்டியல் இடத்துக்கு வஜிர அபேவர்த்தன நியமனமானார். 1982ம் ஆண்டிலிருந்து ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்களுள் ஒருவராக விளங்கும் இவர் ரணிலின் அதிமிகு நம்பிக்கைக்குரியவர்.
2024ம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் எதிர்வரும் நவம்பர் மாதத்தில் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட வேண்டும். அடுத்த ஆண்டில்தான் ஜனாதிபதித் தேர்தலும் நடத்தப்பட வேண்டும். எனவே இதற்கான நிதியை நவம்பர் மாத வரவுசெலவுத் திட்டத்தில் ஒதுக்க வேண்டும்.
‘2024ம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கு நிதி ஒதுக்கப்படுமானால், நாட்டு மக்களின் அடிப்படைத் தேவைகளுக்கு நிதிப்பற்றாக்குறை ஏற்படும்” என்று வஜிர அபேவர்த்தன தெரிவித்த கருத்தே, ஜனாதிபதி தேர்தல் பற்றிய சந்தேகங்களையும் கேள்விகளையும் எழுப்பியுள்ளது. தேர்தல்களைக் கேட்பவர்கள் நாட்டின் பொருளாதாரத்தைச் சீர்குலைத்து அதலபாதாளத்துக்கு தள்ள விரும்புகிறார்கள் என்றும் ஒரு குண்டை இவர் தூக்கி வீசியுள்ளார்.
நாடு முழுவதும் உள்ள 340 உள்;ராட்சிச் சபைகளுக்கு தேர்தல்களை நடத்துவதற்கு வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு பிரசாரமும் ஆரம்பிக்கப்பட்ட வேளையில் தேர்தலை ரணில் அரசு பின்போட்டது. 8,325 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான போட்டியில் 87,000 பேர் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர்.
இந்தத் தேர்தலை நடத்த வேண்டுமென நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய போதிலும் நிதியின்மையை காரணம் காட்டி நாடாளுமன்றம் ஒத்தி வைத்தது. கடந்த பெப்ரவரி மாதம் இடம்பெற வேண்டிய தேர்தல் இதுவரை இடம்பெறவில்லை. ஆறு மாதங்கள் முடிவடைந்த நிலையில் இத்தேர்தல்களை ரத்துச் செய்யும் முடிவு சில நாட்களுக்கு முன்னர் எட்டப்பட்டது.
தேர்தல் பின்போடப்பட்டதால் வேட்புமனுக்களை தாக்குதல் செய்தவர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கினர் என்பதால், தேர்தலை ரத்துச் செய்ய சம்பந்தப்பட்ட அமைச்சின் ஆலோசனைக் குழு ஏகமனதான இணக்கம் தெரிவித்துள்ளதாக பிரதமர் தினேஸ் குணவர்த்தனவின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
வஜிர குணவர்த்தன தெரிவித்துள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு நிதியின்மையையும், உள்;ராட்சித் தேர்தலை நிதியின்மை காரணமாக ரத்துச் செய்ய அரசாங்கம் எடுத்துள்ள முடிவையும் ஒரே மேசையில் வைத்து அணுக வேண்டிய நேரம் வந்துள்ளது.
ஜனாதிபதித் தேர்தலுக்கு நிதி இல்லையென்ற அறிவிப்பு ரணில் வெளிநாட்டில் நிற்கும் வேளையில் வந்துள்ளதாயினும், அவரது அனுமதியின்றி இதனை வஜிர அபேவர்த்தன தெரிவித்திருக்க மாட்டார் என்பது நிச்சயம். அதேசமயம் ஐக்கிய தேசிய கட்சியின் உயர்மட்ட முடிவாகவும் இது இருக்கலாம்.
இந்த அறிவிப்புத் தொடர்பாக ரணிலை தொடர்ந்து ஆதரித்து வரும் ராஜபக்சக்களின் பொதுஜன பெரமுன எந்தக் கருத்தையும் இதுவரை வெளியிடவில்லை. ஆனால், பெரமுனவிலிருந்து பிரிந்து தனிக்குழுவாக இயங்கும் முன்னாள் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தமது கருத்தை சுடச்சுட பகிரங்கமாக வெளியிட்டுள்ளார்.
நிதியின்மையை காரணமாக்கி ஜனாதிபதி தேர்தலை பின்போட ரணில் திட்டமிடுகின்றாரா என்ற கேள்வியுடன் தமது அறிவிப்பை வெளியிட்டுள்ள இவர்இ முன்னர் பல அரசாங்கங்களில் பல அமைச்சுப் பதவிகளை வகித்தவர். சுயமான அரசியல் கொள்கைககள் இல்லாதவர். பதவிகளுக்காக கட்சிகள் மாறியவர். தேசியப் பட்டியல் வாயிலாகவே நாடாளுமன்ற உறுப்பினராகி அமைச்சர் பதவிகளைப் பெற்றவர் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
2019 நவம்பர் மாதத்தில் இடம்பெற்ற தேர்தலில் ஜனாதிபதியாக தெரிவான கோதபாயவின் எஞ்சிய பதவிக் காலத்துக்கே ஜனாதிபதியாக பதவி வகிக்க நாடாளுமன்றத்தால் தெரிவான ரணில் தமது பதவிக்காலத்தை நீடிக்க அதிகாரமற்றவர் என்பது பீரிஸின் வாதம்.
எந்தக் காரணம் கூறியும் கோதபாயவுக்கு மக்கள் வழங்கிய ஐந்து ஆண்டுகள் ஆணையை ரணில் நீடிக்க முடியாது, தேர்தலை பின்போடவும் முடியாதென அடித்துக் கூறியுள்ளார் ஜி.எல்.பீரிஸ். சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து இரண்டாம் கட்டக் கடனாக 2.9 பில்லியன் அமெரிக்க டாலர்களை பெறுவதை எதிர்வரும் மார்ச் மாதத்தில் நிறைவேற்ற வேண்டிய வேளையில், ஜனாதிபதி தேர்தலை பின்போட எடுக்கப்படும் முயற்சிக்கு சர்வதேச நிதி நிறுவனங்கள் ஆதரவளிக்க மாட்டா எனவும் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியின் முடிவையே அதன் அக்கிராசனர் வஜிர அபேவர்த்தன வெளிப்படுத்தியுள்ளாரென தாம் கருதுவதாக தெரிவித்துள்ள பீரிஸ், ஜனாதிபதி தேர்தலை பின்தள்ளுவதற்கு எடுக்கப்படும் நடவடிக்கை தொடர்பான தங்கள் நிலைப்பாட்டை பொதுஜன பெரமுன தாமதமின்றி வெளிப்படுத்த வேண்டுமெனவும் கேட்டுள்ளார்.
‘நீ காற்று, நான் மரம் – என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்” என்ற நிலைமையில் ரணிலுடன் இறங்கிச் செல்லும் பெரமுன இதுபற்றிச் சொல்ல என்ன இருக்கிறது. இப்போதுள்ள அவர்களின் அரசியல் நிலைமை அவ்வாறுள்ளது.
பெரமுனவுக்குள் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை தீர்மானிக்க முடியாதுள்ளது. பசிலா நாமலா என்ற போட்டி ஒருபுறம். இருவரையும் கோதபாய விரும்பவில்லை என்பது இன்னொருபுறம். பெரமுனவிலிருந்து பிரிந்து தனித்தனிக் கூட்டாக இயங்கும் விமல் வீரவன்ச, உதய கம்பன்பில மற்றும் ஜி.எல்.பீரிஸ், டலஸ் அழகப்பெரும ஆகியோர் நிலைப்பாடு மறுபுறம்.
பெரமுனவிலிருந்து ஒரு தொகையினரை தனித்துப் பிரித்தெடுக்க ரணில் விரித்திருக்கும் வலை, சஜித் பிரேமதாச அணியிலிருந்த பலரை இழுத்துவரும் முயற்சிக்கான இன்னொரு வலையென தெற்கின் தலைமைக் கட்சிகள் இழுபாட்டில் நிற்கின்றன.
அமைச்சர் பதவி கேட்டு போராடி வரும் பெரமுனவைச் சேர்ந்த ஊழல்வாதிகளான மஹிந்தானந்த அளுத்கம, றோகித அபேகுணவர்த்தன ஆகியோரை தமது வெளிநாட்டுப் பயணத்தில் கூட்டிச் சென்றிருக்கும் ரணிலின் யுக்தி தனிரகம்.
எல்லாவற்றையும் எண்கணிதத்தில் போட்டுப் பார்த்தால் ஜனாதிபதி தேர்தலை பின்போடக்கூடிய சாத்தியமே அதிகமாகக் காணப்படுகிறது. அப்படியென்றால் பொதுத்தேர்தலும் அதே வழிதான். ஜே.ஆரின் ஆட்சி மீள வருகிறதா?