அன்பான பிரான்சுவாழ் தமிழீழ மக்களே!
கவனயீர்ப்புப் போராட்டம் கலந்து கொண்டு எமது உணர்வுகளை கண்டனமாக பிரெஞ்சு மக்களுக்கும், அரசுக்கும் எடுத்துச் சொல்வோம் வாருங்கள்.
காலம்: 22.09.2023 வெள்ளிக்கிழமை பி. பகல் 3.00 மணிக்கு பிரெஞ்சு பாராளுமன்றம் முன்பாக ( Invalides) உங்கள் உள்உணர்வுகளை வெளிப்படையாக உலகிற்கு காட்டுவோம் வாருங்கள்.
ஆயுதப்போராட்டமும் அதன் ஆளுமையும் சிங்கள கொடுங்கோல் ஆட்சியாளர்களை ஆட்டம் காணவைத்த நேரம் அதனை பொறுக்காத பாரததேசம் சிங்கள ஆட்சியாளர்களுக்கு துணைபோக நின்ற வேளை அகிம்சையை உலகிற்கு போதித்த இந்திய அன்றைய ஆட்சியாளர்களுக்கு தமிழர்கள் நாம் அகிம்சையிலும் போராட முடியும் எனக்காட்டி தன் உயிரை கொடுத்தவர் எங்கள் தியாக தீபம் திலீபன்.
எம் மாவீரச்செல்வங்களும், மக்களும் கொடுத்த உன்னத உயிர் விலைதான் நீறுபூத்த நெருப்பாக தமிழர்கள் வாழும் இடமெல்லாம் நின்று கொண்டேயிருக்கின்றது. ‘ மக்கள் புரட்சி வெடிக்க வேண்டும்’ என்ற திலீபனின் ஆள்மன வெளிப்பாடும், செயற்பாடும் தாயகத்திலும், புலத்திலும் மக்களை பற்றி நிற்கின்றது. இதனை பொறுக்க முடியாத சிங்கள பௌத்த பேரினவாதமும், அதன் அரசும் மீண்டும் கொலைக்கரம் கொண்டு அழிக்க நினைப்பதன் ஓர் செயற்பாடே 17 ஆம் நாள் அமைதிவழியில் போராடி உயிர் நீத்த திலீபனின் 36 ஆவது ஆண்டு நீங்காத நினைவுகளையும், உணர்வுகளையும் நெஞ்சிலே சுமந்து அமைதிவழியிலே சென்ற திலீபனின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்தியையும், அதனை நடாத்திவந்தவர்களான மக்களுக்காக இன விடுதலைக்காக சனநாயவழியில் போராடிக்கொண்டிருக்கும் மக்களின் பிரதிநிதிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டத்தரணிகள் பொதுமக்கள் சிங்கள அரசின் காவல்துறையின் துணையுடன் குண்டர்கள் படையால் கோழைத்தனமாக அடித்து நொருக்கப்பட்டு, வன்முறைகளை நடாத்தினர். புத்தபிரானையே புழுதியில் வீசிவிட்டார்கள் சிங்கள பௌத்தர்கள்.
ஈழத்தமிழர் உரிமைப் பிரச்சனை தீர்க்காது சிங்களதேசத்தில் இயல்புநிலை ஏற்படாது என்பதுதான் தமிழர்களின் நிலைப்பாடு. போர் அமைதியடைந்து 14 ஆண்டுகளை கடந்தும் சிங்கள தேசத்தில் நடந்து கொண்டிருக்கும் அரசின் திட்டமிட்ட செயற்பாடுகளே போதும் இதற்கு சான்றாகும்.
பிரான்சு தேசமும், ஐரோப்பிய நாடுகளும், சர்வதேசநாடுகளும், மனிதவுரிமைகள் அமைப்புகளும் சிங்கள தேசத்தினதும், அதன் ஆட்சியாளர்களின் சர்வதேசத்தை ஏமாற்றும் இரட்டை முகத்தையும், முரண்பாடான செயற்பாட்டை தாயகத் தமிழ்மக்களுடன், உலகத்தமிழர்களும் உலகத்திற்கு சொல்லிவருகின்றார்கள். அவர்களுடன் நாமும் இணைந்து கொள்வோம் கவனயீர்ப்புப் போராட்டத்தில் பங்கெடுப்போம் வாருங்கள்!
சிங்களதேசத்திற்கும், வன்முறை வழிநடாத்தும் கொலைகார அரசுக்கும் துணைபோகமாட்டோம் என்று ஒன்றாய் ஓரணியில் குரல் கொடுப்போம் வாருங்கள்.
தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – தமிழீழ மக்கள் பேரவை – பிரான்சு