தமிழ்ச்சோலைத் தலைமைப்பணியகம் நடத்தும் தமிழியல் பட்டகர்களின் ஏழாவது தியாகதீபம் திலீபன் அறிவாய்தல் ஆய்வரங்கு 17.09.2023 ஞாயிற்றுக்கிழமை புளோமெனில் நகரத்தில் நடைபெற்றது. நண்பகல் 13.01 மணிக்கு தியாகதீபம் திலீபனின் படத்திற்கு ஈகைச்சுடர் ஏற்றிவைத்து நிகழ்வு ஆரம்பமானது. மாவீரர் குடும்பத்தை சேர்ந்த ஒருவரினால் ஈகைச்சுடர் ஏற்றிவைத்து மலர் வணக்கம் செய்யப்பட்டது.
அதைத் தொடர்ந்து அகவணக்கம் இடம் பெற்றது. தொடர்ந்து மக்களால் மலர்வணக்கம் செய்யப்பட்டு, பின் மங்கல விளக்கேற்றல் இடம் பெற்றது. நிகழ்வின் பிரதம விருந்தினராக வந்திருந்த மட்டக்களப்பு அனைத்து சமயங்களின் கூட்டமைப்பின் பொறுப்பாளராகிய வணபிதா. மதிப்புக்குரிய கந்தையா ஜெகதாசு அவர்களும், தமிழர் ஒருங்கிணைப்புக்குழு நிர்வாகப் பொறுப்பாளர் திரு. நிதர்சன், தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் திரு. அ. சுபத்திரா, தமிழீழ மக்கள் பேரவை பொறுப்பாளர் திரு. தி. திருச்சோதி, தமிழ்ச்சோலைத் தலைமைப்பணியகப் பொறுப்பாளர் திரு. நாகயோதீஸ்வரன், செயலாளர் திரு. காணிக்கைநாதன், பிரான்சு ஊடகத்துறை இளையவர் மிராஜ், ஊடகவியலாளர், பட்டகர் திரு. பார்த்தீபன் புளோமினல் தமிழ்ச்சங்கத் தலைவர் திரு. கணேஸ் ஆகியோர் விளக்கினை ஏற்றி வைத்தனர்.
தமிழ்ச்சோலைக் கீதம் இசைக்கப்பட்டதுடன், புளோமெனில் தமிழ்ச்சோலை மாணவியரின் வரவேற்பு நடனமும் நடைபெற்றது.
வரவேற்புரையை பட்டப்படிப்பு மாணவர்களாகிய நாகயோதீஸ்வரன் டினோஜன் பிரெஞ்சு மொழியிலும், ஞானவிக்கினா வினுசா தமிழிலும், யாழிசை சுதாகரன் ஆங்கிலத்திலும் வழங்கியிருந்தனர். பிரதமவிருந்தினர் வணபிதா ஜெகதாசு அவர்கள் உரை ஆற்றியிருந்தார். தொடர்ந்து நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக புளோமெனில் முந்நாள் மாநகரமுதல்வரும், தற்பொழுது பிரான்சு சபாநாயகர்களில் ஒருவரான Thierry Meignen அவர்களும், மற்றும் லாக்கூர்னேவ் மாநகர, மாகாணசபை பிரதேச சபை உறுப்பினர் சிறீகணேஸ் சுகுணா அவர்களும் கலந்து கொண்டதோடு அவர்களால் ஆய்வுநூல் ( தமிழிலும், பிரெஞ்சு மொழியிலுமானது) வெளியிட்டும் வைக்கப்பட்டது.
தொடர்ந்து ஆய்வாளர்களை அறிமுகப்படுத்தி மதிப்பளிப்பும் செய்யப்பட்டன. முதல் ஆய்வாக இளங்கலைமாணி திரு. பிரான்சிஸ் அமலதாஸ் அவர்களால் ( பிரான்சு வாழ் ஈழத்தமிழர்களின் புகலிட வாழ்வில் மீள் இணைந்த குடும்பங்களின் சிக்கல்களும், தீர்வுகளும்) என்ற தலைப்பிலும் இரண்டாவது
ஆய்வாக இளங்கலைமாணி திருமதி. சிவகெங்கா இராசரத்தினம் அவர்களால் ( பாவலர் கி.பி. அரவிந்தனின் கவிதைகள் ஓர் ஆய்வு )என்ற தலைப்பிலும் ஆய்வுகளை கூறியிருந்தார்கள்.அதனைத் தொடர்ந்து
தமிழீழ தேசத்தின் வளம்மிக்க இரணைமடுக்குளம் பற்றி வீடியோ விவரணம் ஒலிப்பரப்பாகியது. தொடர்ந்து மாணவியரின் வீரா மாவீரா பாடல் நடனம் இடம் பெற்றது. அதைத் தொடர்ந்து சிறப்பான உரையை இளம் பிரெஞ்சு ஊடகத்தின் இளைய அறிவிப்பாளர், கிளிச்சி தமிழ்ச்சோலை பழைய மாணவன் செல்வன். விநாயகமூர்த்தி மிராஜ் அவர்கள் ஆற்றியிருந்தார். தொடர்ந்து ‘ காதோடு சொல்லிவிடு’ மேஜர். பாரதி எழுதிய கவிதை புத்தகம் மீள்வெளியீடு செய்து வைத்ததோடு வெளியீட்டு உரையை பரப்புரைப் பொறுப்பாளர் திரு. மேத்தா அவர்கள் வழங்கியிருந்தார். தாயகத்தில் பல சாதனையாளர்கள், மாவீரர்களின் ஆக்கங்கங்கள் பல நூற்றுக்கணக்காக உள்ளது என்றும் அதில் மேஜர் பாரதியின் காதோடு சொல்லிவிடு கவிதைகள் எக்காலத்திற்கும் பொருத்தமானது என்றும் அவற்றை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லவேண்டும் அதற்கு துணையாக இங்கு வாழும் எமது இளையவர்கள் வாசித்து அறிந்து கொள்ளும் வகையில் பிரெஞ்சு மொழியிலும் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளதையும், இப்புத்தகங்கள் ஒவ்வொரு இல்லங்களிலும் ஆவணமாக இருக்க வேண்டும் என்றும், தலைமுறை தலைமுறையாக அவற்றை குழந்தைகள் பிள்ளைகள் வாசிக்க வேண்டும் என்றும் இதற்கு தூரநோக்கத்தோடு செயலாற்றிய பட்டகர்களையும், அதற்கு பங்களித்த அனைவரையும் பாராட்டியிருந்தார். தொடர்ந்து சிறப்புப் பிரதிகளையும் வழங்கி மதிப்பளித்திருந்தார். இப்புத்தகத்தை பட்டகர்களான ஜெயசிங்கம் ஜெதுஷா, இராசலிங்கம் றொசான்,சிவகணேசன் சிந்தூரி,சுகுணசபேசன் சோபிகா ஆகியோர் பிரெஞ்சு மொழியில் மொழிபெயர்த்திருந்தார்கள். அவர்களுக்கான மதிப்பளிப்பு நிகழ்வும் இடம்பெற்றது.
மூன்றாவது ஆய்வாக இளங்கலைமாணி திருமதி தயாபரி கண்ணதாசன் அவர்களால் ( தமிழ் மொழியில் எழுத்து வழக்கின் நிலைபேறு ) என்ற தலைப்பிலும் நான்காவது ஆய்வாக இளங்கலைமாணி திருமதி ஜெகதீஸ்வரி அருளானந்தம் அவர்களால் ( தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் மேஜர். பாரதி, கப்டன் கஸ்தூரியின் படைப்பாற்றல் ஓர் ஆய்வு ) என்ற தலைப்பிலும்
ஐந்தாவது ஆய்வாக இளங்கலைமாணி திருமதி. சாரதாதேவி கோபிராஜ் அவர்களால் ( ஈழத்துப் போர்க்கால வாழ்வியலை வெளிப்படுத்தி நிற்கும் வன்னியாச்சி சிறுகதைத் தொகுப்பு நூல் ஓர் ஆய்வு )என்ற தலைப்பிலும் தமது ஆய்வுகளை ஒப்புவித்தனர். தொடர்ந்து ஒலிவடிவம் எழுத்தாளர் காணொளி ஆய்வை திருமதி. சாரதாதேவி கோபிராஜ் வழங்கியிருந்தார். இறுதியாக தொகுப்புரையை பட்டப்படிப்பு மாணவர்களாகிய பாஸ்கரன் பறொக்ஸணா தமிழிலும், ஞானவிக்கினா வினுசா பிரெஞ்சிலும், யாழிசை சுதாகரன் ஆங்கிலத்திலும் என மூன்று மொழியிலும் வழங்கி சிறப்பித்திருந்தார்கள்.
ஆய்வுக்கட்டுரையின் மதிப்புரையை திருவாட்டி இராசையா ஶ்ரீப்பிரியா வழங்கியிருந்தார்.
இன்றைய ஆய்வரங்கு நிகழ்வுகளை வி.மோகனதாசன் தொகுத்து வழங்கியிருந்தார்.
எமது மொழி, மண்விடுதலை, தேச விடுதலைக்காக தம்முயிர்தந்தவர்களின் ஆக்கத் திறன்கள் ஆளுமைகள், பற்றி புலத்தில் எமது மக்கள் திசைமாறிப்பயணிக்காது வாழும் வாழ்வுக்காகவும் தமிழ் மொழியின் தனிச்சிறப்பின் அடையாளங்களைக் காக்க வாழும்காலத்திலும், எதிர்காலத்திலும் அதன் தேவையை அறிந்து திட்டமிட்டு பெரும் அர்ப்பணிப்புடனும், தூரநோக்கு சிந்தனையுடனும் இவ் அறிவாய்தல் செயற்பாடு ஆண்டு தோறும் நடைபெற்று வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.பட்டப்படிப்பு மாணவி துஷ்யந்தன் இயல்வாணியின் நன்றியுரையுடன் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டு நிகழ்வு நிறைவுக்கு வந்தது.
ஊடகப்பிரிவு – மக்கள் தொடர்பு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – பிரான்சு
ReplyForward |