திருகோணமலையில் தியாக தீபம் திலீபனின் நினைவு ஊர்தி மீதும் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமையை கண்டித்து முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு , தேவிபுரம் பகுதியில் இன்று காலை 11 மணியளவில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
தாயக மற்றும் புலம்பெயர் நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டில் தேவிபுரம், வள்ளிபுனம் கிராம மக்கள் முதன்மை வீதியில் ஒன்று கூடி கையில் பதாகைகளை தாங்கியவாறு, மக்கள் எதிர்ப்பு கோஷங்களை வெளிப்படுத்தி வள்ளிபுனம் சந்தி வரை சென்று அங்கு கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தார்கள்.
தியாக தீபம் திலீபனின் நினைவு ஊர்தி மீது தாக்குதல் நடத்தியது மாத்திரமல்ல பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர்கள் மீதும் தாக்குதல் நடத்தியமை கண்டனத்துக்குரியது என்றும் சர்வதேச விசாரணை வேண்டுமென வலியுறுத்தியும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்கள்.
திருகோணமலை தமிழரின் தலைநகர் தியாகி திலீபன் அகிம்சையின் அடையாளம், தமிழ் மக்கள் தமது தாயக மண்ணில் இறந்தவர்களை வழிபடத் தடைதானா? , போராடுவோம் போராடுவோம்!! தமிழ் மக்களின் உரிமைக்காக போராடுவோம், ஐ.நா சபையே? தமிழ் மக்கள் மீதான . அடக்கு முறைகள் உங்கள் கண்களுக்கு தெரியவில்லையா? வடக்கு கிழக்கு தமிழரின் தாயக பூமி நிறுத்து நிறுத்து! அடாவடியை நிறுத்து போன்ற பல்வேறு வாசகங்களையுடைய பதாகைகளை தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.