கடந்த 08.11.2012 அன்று பிரான்ஸ் தலைநகர் பாரிசில் வைத்து சிறிலங்கா அரச கைக்கூலிகளின் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கேணல் பரிதி அவர்களின் 3 ஆம் ஆண்டு கல்லறை வணக்க நிகழ்வு நேற்று 08.11.2015 ஞாயிற்றுக்கிழமை பாரிசில் பந்தன் பகுதியில் கேணல் பரிதி அவர்களின் நினைவுக் கல்லறை முன்பாக மிகவும் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.
முன்னதாக பருதி அவர்கள் படுகொலை செய்யப்பட்ட இடமான பாரிசு ஜோர்தான் பகுதியில் காலை 9.00 மணிக்கு கண்ணீர் மல்க சுடர் ஏற்றப்பட்டு மலர்வணக்கம் செலுத்தப்பட்டது.
தொடர்ந்து 10 மணியளவில் இடம்பெற்ற கல்லறை வணக்க நிகழ்வில் பொதுச்சுடரினை, சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பொறுப்பாளர் ரகுபதி அவர்கள் ஏற்றிவைத்தார். ஈகைச்சுடரினை கேணல் பரிதி அவர்களின் பெற்றோர் ஏற்றிவைத்து மலர் வணக்கம் செலுத்தினர். கேணல் பரிதி அவர்களின் குடும்பத்தினர் அவரது நினைவுக் கல்லறைக்கு மலர் மாலை அணிவித்து மலர்வணக்கம் செலுத்தினர். துயிலும் இல்ல பாடல் ஒலித்ததைத் தொடர்ந்து அகவணக்கம் இடம்பெற்றது.
கேணல் பரிதி அவர்களின் புனித கல்லறைமீது தமிழீழ தேசியக்கொடி போர்த்தப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து அனைவரும் சுடர் ஏற்றி மலர் வணக்கம் செலுத்தினர்.
தொடர்ந்து தமிழகத்தில் இருந்து வருகைதந்த தமிழின உணர்வாளரும் பேராசிரியருமான அறிவரசன் ஐயா அவர்கள் கேணல் பரிதி தொடர்பான கவிதையை வாசித்தளித்தார். தமிழர் ஒருங்கிணைப்புக்குழு முக்கிய உறுப்பினர் ஆசிரியர் சத்தியதாசன் அவர்கள் கேணல் பரிதி தொடர்பாக நினைவுரை ஆற்றினார். லாக்கூர்நேவ் மாநகரசபை உறுப்பினர் அந்தோனி குறூஸ் அவர்களும் கலந்துகொண்டு தமது வணக்கத்தைத் தெரிவித்தார்.
கேணல் பரிதி அவர்களின் நினைவு சுமந்த 2016 நாட்காட்டியும் அங்கு வெளியிட்டுவைக்கப்பட்டது.
தொடர்ந்து கேணல் பருதி அவர்களின் நினைவுக் கல்லறை முன்பாக அனைவரும் கைகளை நீட்டி உறுதிப்பிரமாணம் எடுத்துக்கொண்டனர்.
நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடலுடன் கல்லறை நிகழ்வுகள் நிறைவு கண்டன.
பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு ஊடகப்பிரிவு