“மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்” என்ற விடுதலைவாசகத்தை உரக்க சொல்லி , தன் வாழ்வை தமிழரின் விடுதலை வேள்வியில் ஆகுதியாக்கிய தியாக தீபம் திலீபனின் உண்ணா நோன்பிருந்த முதலாவது தினம் இன்றாகும்.
இன்று 15 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டு 26ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வரையான 12 நாட்கள் தொடர்ந்து நடை பெறும். நினைவேந்தல் ஆரம்ப நிகழ்வுகள் காலை 9.30 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பொதுச் சுடரினை மாவீரர்களான வண்ணவில் மற்றும் ஜெகன் ஆகியோரின் சகோதரரும் முன்னாள் போராளியுமான விடுதலை என்பவர் ஏற்றி வைத்தார்.
தமிழ் மக்களின் உரிமைக்காக 15.09.1987 தொடக்கம் 26.09.1987 வரையான 12 நாட்கள் அகிம்சை வழியில் வட தமிழீழம் யாழ் . நல்லூரில் நீராகாரம் அருந்தாமல் உண்ணாவிரதப் போராட்டம் நடாத்தி ஈகச் சாவைத் தழுவிக் கொண்ட தியாக தீபம் திலீபனின் 36 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் வழமை போல் இம்முறையும் தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவிடத்தில் நடைபெறுவதற்குரிய ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தமிழர் தேசமெங்கும் நினைவேந்தல்
இதேவேளை, தமிழர் தேசமெங்கும் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அந்தவகையில், தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலானது நள்ளிரவு 12 மணியளவில், நல்லூருக்கு அருகாமையில் உள்ள தியாக தீபத்தின் நினைவேந்தல் தூபியடியில் நடைபெற்றுள்ளது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இந்த நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் ஊர்திப் பவணியும் இதன்போது ஆரம்பித்துவைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செ. கஜேந்திரன் மற்றும் கட்சியின் அமைப்பாளர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.