முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் அகழ்வாய்வு நடவடிக்கைகள் செப்ரெம்பர் (06) உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.
அகழ்வுப் பணிகளில் மனித உடல்களின் மனித எச்சங்கள் பகுதியளவில் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று( 13.09.2023) புதன்கிழமை முன்னெடுக்கப்பட்ட அகழ்வுப் பணிகளின் போது மேலும் இரண்டு மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன.
மீட்கப் பட்ட மனித எச்சங்களுடன் இரண்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகள் அணியும் இலக்கத் தகடுகளும்,ஒரு சயனைட் குப்பியும் மீட்கப் பட்டுள்ளன என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.
த.வி.பு இ:1333 இலக்கமுடைய அடையாள இலக்கத் தகடு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.
இதன் மூலம் குறித்த புதைகுழியில் புதைக்கப்பட்டிருப்பவை போராளிகளினுடைய உடல்கள் என்பது உறுதியாகியுள்ளது.
நேற்று ஏழாவது நாளாக முன்னெடுக்கப்பட்ட அகழ்வுப் பணிகளிடன் இதுவரை (ஏழு) மனித எச்சங்கள் முழுமையாக மீட்கப்பட்டுள்ளன.
இதேநேரம் நேற்று முன்நாள் (12.09.2023) செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அகழ்வுப் பணிகளின் போது ரஷ்ய தயாரிப்பான தூய நீரைச் சுத்திகரித்து நன் நீராக்கிப் பருகுவதற்குப் பயன்படுத்தும் கருவி ஒன்றும் மீட்கப் பட்டிருந்ததுடன் மனித எச்சத்தின் பகுதி ஒன்றும் மீட்கப் பட்டிருந்தன.
இதே வேளை இவை இறுதிப் போரின்போது பேரினவாத சிறீலங்கா படைகளிடம் உறவுகளால் கையளிக்கப்பட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட போராளிகளின் மனித எச்சங்கள் என உறுதிப் படுத்தப்படுவதாக இந்தப் புதைகுழி அகழ்வுப் பணிகளை நேரில் பார்வையிட்ட பலரும் கருத்துத் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.