தமிழர் நெஞ்சங்களில் நீக்கமற வாழ்பவர்கள் தமிழீழ தேசிய மாவீரர்களாகும். ஆண்டு தோறும் நவம்பர் மாதம் எழுச்சிக்கோலம் கொண்டு 27 ஆம் நாள் மாவீரர்நினைவு நாள் எழுச்சி பூர்வமாக தாயகத்திலும், தமிழர்கள் வாழும் புலம்பெயர் தேசங்களிலும் எழுச்சி பூர்வமாக நினைவு கூரப்படுகின்றது.
பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு தமது அனைத்துக்கட்டமைப்புகளுடன், மாவீரர் பெற்றோர், சகோதர உடன்பிறப்புகளுடன் தமிழீழ மக்கள் மற்றும் அரசு அரசுசார்பற்ற பிரமுகர்கள், பல்லின மக்களுடன் நவம்பர் 27 ஆம் நாளில் எழுச்சியுடன் மாவீரர்நாளினை ஆண்டு தோறும் நினைவுகூர்ந்து வருகின்றனர். இவ் எழுச்சி நாளினை நடாத்தவதற்கு தமிழ்மக்களின் மனமுவந்த பொருளாதாரப்பங்களிப்பு பெரும் பலமாக இருந்து வருகின்றது. இப்பங்களிப்பானது மாவீரர்நாள் நிதிப்பங்களிப்பு அட்டையின் ஊடாக மக்கள் வழங்கிவருகின்றனர்.
தமிழீழ தேசிய மாவீரர்நாள் எழுச்சி நிகழ்வுக்கான பொருளாதார பங்களிப்பு அட்டைகள் 06.09.2023 புதன்கிழமை தமிழர் ஒருங்கிணைப்புக்குழுக்காரியாலையத்தில் மாவீரர் குடும்பத்தினர், கட்டமைப்புப் பொறுப்பாளர்கள், தாயகச்செயற்பாட்டாளர்கள், ஆதரவாளர்களுக்கு வழங்கிவைக்கப்பட்டது. பிற்பகல் 4:30 மணிக்கு நடைபெற்ற நிகழ்வில் ஈகைச்சுடர் ஏற்றிவைக்கப்பட்டு, அகவணக்கம் செலுத்தப்பட்டதுடன் பிரான்சில் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவால் எதிர்வரும் நவம்பர் 19 ஆம் நாள் மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு நிகழ்வும், வரும் நவம்பர் 27 ஆம் நாள் தேசிய மாவீரர்நாள் நிகழ்வும் Le Grand Dome 91140 VILLEBON-SUR- YVETTE மண்டபத்தில் ( கடந்த ஆண்டு நடைபெற்ற மண்டபம்) நடைபெற ஏற்பாடாகியுள்ளதும் தெரிவிக்கப்பட்டது.
நன்றி ஊடகச் செய்தி மக்கள் தொடர்பு – பிரான்சு