2024 ஜனாதிபதித் தேர்தலில் தமிழர் ஒருவரை நிறுத்துவது.!

0
64

1982ல் இடம்பெற்ற முதலாவது ஜனாதிபதித் தேர்தலில் முதலாவது ஜே.ஆர்.ஜெயவர்த்தனை எதிர்த்துப் போட்டியிட்ட குமார் பொன்னம்பலம் யாழ்ப்பாண மாவட்டத்தில் 87,263 வாக்குகளைப் பெற்று முதலிடத்துக்கு வந்து ஜெயவர்த்தனவை மூன்றாம் இடத்துக்குத் தள்ளிவிட்டார். 2005 ஜனாதிபதித் தேர்தலை தாயகத் தமிழர் புறக்கணித்த போதிலும் வடக்கு கிழக்கின் ஐந்து மாவட்டங்களிலும் சுமார் 44,000 வாக்குகளை ரணில் விக்கிரமசிங்க பெற்றார். இத்தேர்தலில் மகிந்த ராஜபக்ச வென்றாராயினும் சுமார் 24,000 வாக்குகளே தமிழர் தாயகத்தில் இவருக்குக் கிடைத்தன. இந்தப் புள்ளிவிபரத்தின் அடிப்படையிலான கணிப்பீடும் மதிப்பீடும் அடுத்த ஜனாதிபதித் தேர்தல் வியூகத்துக்கு முக்கியமானவை. 

அரசியலமைப்பின் பிரகாரம் ஜனநாயக ரீதியாக இலங்கை நான்கு தேர்தல்களை உட்படுத்தியது. உள்ளூராட்சிச் சபைகள், மாகாண சபைகள், நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவு, ஜனாதிபதி தெரிவு என இவை வகைப்படும். 

உள்ளூராட்சிச் சபைகளும் மாகாண சபைகளும் தேர்தலை எதிர்நோக்கி காய்ந்து கொண்டிருக்கின்றன. உள்;ராட்சிச் சபைகளுக்கான தேர்தல்களுக்கு வேட்பு மனுக்கள் கோரப்பட்டு தாக்கல் செய்யப்பட்டதாயினும், தேர்தல் நடைபெறவில்லை. வேட்பாளர்கள் கட்டுப்பணம் இதுவரை மீளளிக்கப்படவுமில்லை. 

உள்ளூராட்சித் தேர்தல்களை முன்னறிவித்தவாறு நடத்துமாறு நீதிபரிபாலனம் தீர்ப்பளித்தும், அதியுத்தம ஜனாதிபதியே நிதியமைச்சர் என்ற ரீதியில் பல காரணங்களை முன்னிறுத்தி காணாமல் செய்துள்ளார் ரணில் விக்கிரமசிங்க. தேர்தலை நடத்த நிதியுமில்லை, நீதியுமில்லை என்று கைவிரித்தாகி விட்டது. 

மாகாண சபைகளுக்கான தேர்தலை உடனடியாக நடத்துமாறு ஆர்வமுள்ள கட்சிகள் கோரி வருகின்றன. தேர்தல் முறைமை மாற்றம், நாடாளுமன்ற அங்கீகாரம், நாடாளுமன்ற உறுப்பினர்களையும் மாகாண சபைகளுக்குள் புகுத்துவது என்று பல மாற்றங்கள் பற்றிக் கூறி வரும் ரணில் விக்கிரமசிங்க தமது றப்பர் ஸ்ராம்புகளாக ஆளுனர்களை நியமித்து மாகாண நிர்வாகத்தை தொடருகின்றார். 

நாடாளுமன்றத்துக்கான தேர்தல் ஐந்தாண்டுகளுக்கு ஒரு தடவை இடம்பெற வேண்டியது. கடைசித் தேர்தல் 2020 ஆகஸ்ட் ஐந்தாம் திகதி நடைபெற்றது. இந்த மாதம் தான் மூன்றாண்டுகள் முடிவுற்றது. 

வழக்கமாக ஜனாதிபதித் தேர்தலை நடத்தி மகாஜனங்களின் நாடி பிடித்துப் பார்த்து அதன் பின்னர் பொதுத்தேர்தல் நடத்துவதே இலங்கையிலுள்ள நடைமுறை. இவ்வாறு செய்வதால் புதிதாக ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுபவரின் கட்சி நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெறும் வாய்ப்பு அதிகமுண்டு. 

இந்தப் பின்னணியில் பார்க்கும்போது ஜனாதிபதித் தேர்தல் விரைவில் நடைபெறும் சாத்தியமுண்டு. 2019 நவம்பரில் இடம்பெற்ற தேர்தலில் சிங்கள பௌத்தர்களின் ஏகோபித்த வாக்குகளால் கோதபாய ராஜபக்ச வெற்றிபெற்றார். முழுமையாக மூன்று ஆண்டுகளைக்கூட பூர்த்தி செய்ய முடியாத நிலையில் அவருக்கு வாக்களித்த மக்களே அவரை விரட்டித் துரத்தி பதவி துறக்க வைத்தனர். 

அவரது எஞ்சிய பதவிக்காலமான 2024 நவம்பர் வரைக்கும் ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக நாடாளுமன்றம் தெரிவு செய்தது. குருட்டு நல்வாய்ப்பினால் ஜனாதிபதியான இவர், அடுத்த ஜனாதிபதியாக மக்களால் தெரிவு செய்யப்படக்கூடிய சூழ்நிலையை உருவாக்கும் இலக்கு நோக்கி காய்களை நகர்த்தி வருகிறார். 

இந்தாண்டு நவம்பர் மாதத்துக்குப் பின்னர் – அநேகமாக அடுத்தாண்டு முற்பகுதியில் ஜனாதிபதித் தேர்தலை நடத்தும் விருப்பத்துடன் தம்மை பலப்படுத்தி வருகிறார் ரணில். இவரது மொழியில் பலப்படுத்துவது என்பது, மற்றைய சகல கட்சிகளையும் பலவீனமாக்கி பிளவுபடுத்துவது என்பதாகும். இதுவரை ஓரளவுக்கு இவர் இவ்விடயத்தில் வெற்றி கண்டுள்ளாரென்று கூறலாம். 

‘நான் எவரையும் பிளபுபடுத்தி ஆள் சேர்க்கவில்லை. நீங்கள் உங்கள் கட்சிகளையும் உறுப்பினர்களையும் கவனமாகப் பார்த்துக் கொள்ளுங்கள். என்னிடம் சேர விரும்பி வருபவர்களை நான் சேர்த்துக் கொள்வதில் என்ன தவறு?” என்று தனக்கேயுரிய பாணியில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் நேரில் தெரிவித்ததனூடாக இவரது பாணி என்னவென்பதை புரிந்து கொள்வது இலகுவானது. 

2024 நவம்பர் மாதத்துக்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தல் நடந்தாக வேண்டும். இதில் ரணில் போட்டியிடுகிறார் என்பது உறுதி. அதற்கு ஏதுவாக தமது மைத்துனரான (தாய்மாமன் மகன்) றூவான் விஜேவர்த்தனவை ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவராக்கி தொகுதிகள் ரீதியாக பணிகளைப் பலப்படுத்தும் பொறுப்பையும் ஒப்படைத்துள்ளார். 

பொதுஜன பெரமுனவில் நாமல் ராஜபக்சவுக்கு சரியான போட்டியாளராக றூவான் விஜேவர்த்தனவை ரணில் வளர்த்து வருவது பகிரங்க விடயம். கடந்த பொதுத்தேர்தலில் தோல்வி கண்ட ரணிலின் பழைய கூட்டாளிகள் பலரும் இப்போது அவரது ஆதரவுக் குழாமில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். மற்றைய சிங்களக் கட்சிகள் சார்பில் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுபவர்கள் பற்றி இதுவரை எதுவும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை. 

தமிழர் தரப்பில் ஒருவர் ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்தப்பட வேண்டுமென்ற குரல் இப்போது அங்குமிங்குமாக கேட்கத் தொடங்கியுள்ளது. முன்னைய காலங்களிலும் இவ்வாறு பேசப்பட்டது. தமிழர் அரசியல் தரப்பில் அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒருவரை கண்டுபிடிக்க வேண்டுமென்றும் கூறப்படுகிறது. (இதற்கும் கொழும்பிலிருந்துதான் புதுமுகம் ஒன்று இறக்கப்பட வேண்டுமோ தெரியாது).

தமிழர்களின் மூத்த அரசியல் கட்சிகளான தமிழ்க் காங்கிரசும், தமிழரசும் பொதுவாக ஐக்கிய தேசிய கட்சியில் நம்பிக்கை கொண்டவர்களாகவே டி.எஸ்.சேனநாயக்க காலத்திலிருந்து நல்லாட்சி ரணில் விக்கிரமசிங்கவரை செயற்பட்டு வந்துள்ளன. ஷஐக்கிய தேசிய| என்ற பெயரில் அக்கட்சி இருப்பதாலோ, அல்லது அவர்கள் ஆட்சியின்போது ஏதாவது பெறலாம் என்ற நம்பிக்கையாலோ இது ஏற்பட்டிருக்கலாம். சொல்லப்போனால் இரண்டு சிங்களக் கட்சிகளும் தமிழரின் தலையைச் சுற்றி ஏமாற்றியதே வரலாறு. 

இந்த நிலைப்பாட்டில், அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழர் ஒருவரை – தமிழரின் பலத்தையும் பேரம் பேசும் சக்தியையும் நிலைநாட்டுவதற்காகவாவது நிறுத்த வேண்டுமென்ற எண்ணப்பாடு இப்போது காணப்படுகிறது.

ராஜபக்சக்களையும் தோற்கடிக்க வேண்டுமென்பதற்காகவே அடுத்தடுத்து வந்த இரண்டு ஜனாதிபதித் தேர்தல்களில் யுத்த கால ராணுவத் தளபதி சரத் பொன்சேகாவையும், சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த மைத்திரிபால சிறிசேனவையும் தமிழர்கள் ஆதரித்தனர் என்பதே நிகழ்கால சரித்திரம். இவர்கள் இருவரும் ரணிலின் ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவத்திலேயே போட்டியிட்டவர்கள். 

ஆனால், இவர்கள் இருவருக்கும் முன்னர் – 2005ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க போட்டியிட்டபோது, தமிழர்கள் தேர்தலை புறக்கணிக்கும் சூழ்நிலை ஏற்பட்டது. ரணில் அத்தேர்தலில் சுமார் 190,000 வாக்குகளால் மகிந்த ராஜபக்சவிடம் தோல்வி கண்டார். வடக்கு கிழக்குத் தமிழர்கள் தேர்தலைப் புறக்கணித்ததால்தான் மகிந்த வெற்றி பெற்றார் என்ற வாதம் இன்றுமுண்டு. தமிழர்கள் தேர்தலைப் புறக்கணிக்காது வாக்களித்திருந்தால் ரணில் வென்றிருப்பாரென்றும் சிலர் கணக்கிட்டிருந்தனர். 

இத்தேர்தலில் தமிழர் தாயகத்தின் யாழ்ப்பாணம், வன்னி, மட்டக்களப்பு, திருமலை, அம்பாறை ஆகிய ஐந்து மாவட்டங்களிலும் மொத்தம் 44,230 வாக்குகள் ரணிலுக்குக் கிடைத்தன. ஆனால், தேர்தலில் வெற்றி பெற்ற மகிந்தவுக்கு இந்த ஐந்து மாவட்டங்களிலும் 23,000 வாக்குகளே கிடைத்தன. யாழ்ப்பாண மாவட்டத்தில் மட்டும் மகிந்தவிலும் பார்க்க ரணில் 4,000 வரையான மேலதிக வாக்குகளையும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 90,000 மேலதிக வாக்குகளையும் பெற்றிருந்தாரென்பது கவனிக்கப்பட வேண்டியது. 

1977ம் ஆண்டின் புதிய அரசியலமைப்பின் கீழான முதலாவது ஜனாதிபதித் தேர்தல் 1982 அக்டோபர் 20ம் திகதி இடம்பெற்றது. இத்தேர்தலில் தமிழ்க் காங்கிரஸ் கட்சி சார்பில் குமார் பொன்னம்பலம் (கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தந்தை) போட்டியிட்டார். ஐக்கிய தேசிய கட்சி சார்பில் ஜே.ஆர்.ஜெயவர்ததனவும், சிறீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் ஹெக்டர் கொபேகடுவவும் போட்டியிட்டனர். ஜே.ஆர்.ஜெயவர்த்தன யாழ்ப்பாண மாவட்டம் தவிர்ந்த மற்றைய அனைத்து மாவட்டங்களிலும் அதிகூடிய வாக்குகளைப் பெற்று முதலிடத்தில் வந்தார். 

ஆனால், யாழ்ப்பாண மாவட்டத்தில் ஜெயவர்த்தன மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டார். இங்கு முதலாவது இடத்துக்கு வந்த குமார் பொன்னம்பலத்துக்கு 87,263 வாக்குகள் கிடைத்தன. 77,300 வாக்குகளை இரண்டாம் இடத்துக்கு வந்த கொபேகடுவ பெற்றார். ஜெயவர்த்தனவுக்கு யாழ்ப்பாண மாவட்டத்தில் 44,780 வாக்குகள் மட்டுமே கிடைத்தன. 

யாழ்ப்பாணத்தார் தம்மை அவமானப்படுத்தி விட்டதாக ஜெயவர்த்தன பல தடவை கூறினாரென்று அவருக்கு நெருக்கமாக இருந்த அப்போதைய அமைச்சரான காமினி திசநாயக்க தமது கட்டுரைகளில் சுட்டிக்காட்டியிருந்தார். யாழ்ப்பாணத் தமிழர் பற்றி தமக்கு அக்கறையில்லை என்று 1983 யூலை 11ம் திகதி (ஜனாதிபதித் தேர்தலின் எட்டு மாதங்களின் பின்னர்) லண்டன் ரெலிகிராப் பத்திரிகைக்கு ஜெயவர்த்தன தெரிவித்தமைக்கு, யாழ்ப்பாணத்தில் கிடைத்த அவமானமே காரணமாக இருந்திருக்கலாம். 

இத்தேர்தல் பற்றிய இன்னொரு முக்கிய அம்சம் என்னவெனில், மட்டக்களப்பு மாவட்டத்தில் ஜெயவர்த்தனவுக்கு 48,094 வாக்குகளும், குமார் பொன்னம்பலத்துக்கு 47,095 வாக்குகளும் கிடைத்தன. இதன்படி ஜெயவர்த்தன 99 மேலதிக வாக்குகளால் மட்டும் குமார் பொன்னம்பலத்தைவிட மேலதிகமாகப் பெற்று முதலிடத்துக்கு வந்தாரென்பதும் வரலாற்றுப் பதிவுக்குரியது. 

2024 முற்பகுதியில் நடைபெறலாமென எதிர்பார்க்கப்படும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழர் ஒருவரை நிறுத்துவது பற்றி ஆலோசிக்கப்படும் வேளையில், முன்னைய தேர்தல்களின் முடிவுகள் பற்றிய கணிப்பீடும் மதிப்பீடும் அவசியமாகிறது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here