திருகோணமலை மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் பிக்குகளுடன் இணைந்த இனவாதிகள் சிலர் உள்நுழைந்ததால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
மாவட்ட அரசாங்க அதிபர் காரியாலயத்தில் நடைபெறவிருந்த மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டமும் இந்த போராட்டங்களுக்கு மத்தியிலேயே இடம்பெற்றதுடன் அபிவிருத்தி குழுவின் இணைத் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கபில நுவன் அத்துகோரள போராட்டம் காரணமாக அரசாங்க அதிபர் காரியாலயத்துக்குள் உள்நுழைய முடியாது வேறு வழியிலேயே சென்றுள்ளார்.
அபிவிருத்தி குழுவின் மற்றைய இணைத் தலைவரான ஆளுநர் செந்தில் தொண்டமான் இந்தக் கூட்டத்தில் பிரசன்னமாகியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பெரியகுளம் பகுதியில் விகாரையை அமைக்கும் பணியை முன்னெடுக்க அமைச்சரவை அனுமதியை பெற்றுத்தருமாறு மாவட்ட செயலகத்திற்குள் புகுந்த தேரர்கள் அழுத்தம் கொடுத்துள்ளனர்.
பதற்றம் காரணமாக அபிவிருத்திக்குழு கூட்டம் இடைநடுவில் நிறுத்தப்பட்டுள்ளதுடன், ஆர்ப்பாட்டக்காரர்கள் தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நிர்மாணப் பணிகள்
கிழக்கு மாகாண ஆளுநருக்கு எதிராக போராட்டம்
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மற்றும் திருகோணமலை பிரதேச செயலாளருக்கு எதிராக போராட்டம் ஒன்று இடம்பெற்று வருகின்றது.
குறித்த போராட்டத்தை பிக்குகள் மற்றும் மக்கள் ஒன்றிணைந்து முன்னெடுத்து வருகின்றனர்.
திருகோணமலை மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இன்று காலை 9 மணிக்கு முதல் குறித்த போராட்டம் இடம்பெற்று வருகிறன்றது.
திருகோணமலை- நிலாவெளி, பெரியகுளம் பகுதியில் நிர்மாணிக்கப்படவிருந்த விகாரையின் நிர்மாணப் பணிகள் இடைநிறுத்தப்பட்டன.
குறித்த விகாரை நிர்மாணிக்கப்படும் பட்சத்தில் இன முறுகல்கள் ஏற்படும் என திருகோணமலை மாவட்டத்தை பிரதிநிதித்துவம்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் மற்றும் சமூக ஆர்வலர்கள் மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுடைய கவனத்திற்கு கொண்டுவந்தனர்.
இதனையடுத்து, இனங்களுக்கிடையில் இனமுறுகல் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்யும் முகமாக ஆரம்பிக்கவிருக்கும் குறித்த விகாரையின் நிர்மாணப்பணிகளை உடனடியாக நிறுத்துமாறு ஆளுநர் உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்ததிற்கமைய விகாரையின் நிர்மாணப் பணிகள் இடைநிறுத்தப்பட்டன.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும விதமாய் கடந்த 12 ஆம் திகதியன்று இலுப்பைக்குளம் பகுதியில் வீதி மறியல் போராட்டத்தில் தேரர்கள் சிலர் ஈடுப்பட்டிருந்தனர்.