பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வழங்கிய தேர்தல் வாக்குறுதிக்கு அமைய 1000 ருபா சம்பள உயர்வு எமக்கு வேண்டும். இல்லாவிடின் தோட்ட தொழிலாளர்கள் ஆகிய நாங்கள் மாதம் தோறும் வழங்கி வரும் தொழிற்சங்க சந்தா பணத்தினை நிறுத்தி விடுவோம்.
அத்தோடு எதிர்வரும் தீபாவளி திருநாளை கறுப்பு கொடி ஏந்தி தான் கொண்டாடுவோம் என டிக்கோயா சாஞ்சிமலை டிலரி தோட்ட தொழிற்சாலைக்கு முன்பாக இன்று காலை நடைப்பெற்ற ஆர்பாட்டத்தில் தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
இவ் ஆர்ப்பாட்டத்தில் சுமார் 150ற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
இவ் ஆர்ப்பாட்டம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பாக 7 தடவை நடைபெற்ற பேச்சுவார்தையின் உண்மையான வெளிபாடு என்ன என தொழிலாளர்கள் சந்தேகம் கொள்கின்றனர். எமக்கான சம்பள உயர்வு தொடர்பாக ஆறுமுகன் தொண்டமான், திகாம்பரம், இராதாகிருஸ்ணன் மனோகனேசன் இன்னும் பல தலைவர்கள் பேசுகின்றார்களே தவிர 1000 ருபா சம்பள உயர்வு எந்தவகையில் பெற போகின்றார்கள் என்ற உண்மையை எமக்கு தெளிவுபடுத்த வேண்டும்.
ஆனால் வாக்களியுங்கள் 1000 ருபா சம்பள உயர்வை பெற்று தருகின்றோம் என்ற தேர்தல் வாக்குறுதியை நம்பியே வாக்களித்தோம் ஆகையால் ஜனாதிபதியும், பிரதமரும் இந்த சம்பள விடயத்தில் தலையிடவேண்டுமென வழியுறுத்துகின்றோம். சீரற்ற காலநிலையிலும் அட்டை கடி பொருட்படுத்தாமல் 08 மணிநேரம் கொழுந்து பறிக்கும் தொழிலாளர்களை ஏமாற்றவேண்டாம்.
தொழிலாளர்களை பகடகாய்களாக்கி துரோகம் நினைக்க இனிமேலும் இடம் கொடுக்க போவதில்லை என தெரிவிக்கும் தொழிலாளர்கள் நாங்கள விழித்துகொண்டே இருக்கின்றோம்.எங்களுடைய பண்டிகை காலத்தில் மாத்திரம் ஏன் இந்த நிலை ஏற்படுகின்றது என தொழிலாளர்கள் ஆர்பாட்டத்தில் கோஷங்களை எழுப்பினர்.
அத்தோடு 10000 மற்றும் 15000 ரூபா பெற்றுத்தருகின்றோம் என கூறிய தொழிற்சங்கவாதிகள் தற்போது எங்கே இருக்கின்றார்கள் என கேள்விகளையும் தொழிலாளர்கள் எழுப்பினர்.
எனவே இதற்கு சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உரிய முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.