மூத்த ஒலிபரப்பாளர் விமல் சொக்கநாதன் தனது 75ஆவது வயதில் காலமானார். இலண்டனில் நேற்று செவ்வாய்க்கிழமை (01-08-2023) அன்று மாலை நடை பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோதுவிபத்தொன்றில் விமல் சொக்கநாதன் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
விமல் சொக்கநாதன் ஒரு வானொலிக் கலைஞரும், ஒலிபரப்பாளரும் ஆவார். ஒரு கலைக்குடும்பத்தின் ஊடாக இளம் வயதிலேயே கலைத்துறைக்கு வந்தவர். சிறுவர் மலர் நாடகங்களில் ஆரம்பித்து, மேடை நாடகங்களில் நிறைய நடித்தவர். இலங்கை வானொலியில் நீண்ட காலம் அறிவிப்பாளராக பணியாற்றியவர். இங்கிலாந்துக்கு குடிபெயர்ந்த பின்னர் பிபிசி தமிழோசையில் அறிவிப்பாளராகப் பணியாற்றியவர் இதேநேரம் இவரது குரல் உலகத் தமிழ் வானொலிகளில் ஒலித்தது. இவர் சட்டம் படித்து லண்டனில் வழக்கறிஞர் நிறுவனம் நடத்திவந்தார். ஜி.ரிவி, ஐ.பிசி வானொலி, ஐ.பி.தொலைக்காட்சி, மெய்வெளி நியூஸ், வீரகேசரி பத்திரிகையிலும் ஆக்கங்களை எழுதிவந்தவர்.
1978 ஆம் ஆண்டு வெளிவந்த ஈழத்து தமிழ்த் திரைப்படமான நான் உங்கள் தோழன் என்ற திரைப்படத்திலும் நடித்தவர்.வானொலிக் கலை, விமலின் பக்கங்கள், இலண்டனில் இருந்து விமல் போன்று புத்தகங்களை எழுதியிருந்தார்.
இலங்கை வானொலியில் இவர் படைத்த இசையும் கதையும், வாலிப வட்டம் போன்ற நிகழ்ச்சிகள் புகழ் பெற்றவை. நகைச்சுவை கலந்து இவர் வழங்கிய களம் பல காண்போம் என்ற உலக அரசியல் ஆய்வு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர்.
அதன் பின்னர், உலக அறிவிப்பாளர் பி.எச். அப்துல் ஹமீதின் ‘வானலைகளில் ஒரு வழிப்போக்கன்’ நூலின் அறிமுக விழா கொழும்பில் நடைபெற்றபோது, அந்நிகழ்வினை விமல் சொக்கநாதன் தலைமையேற்று நடத்தியதோடு, நூல் வெளியீட்டிலும் கலந்துகொண்டு உரையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.