கொக்குத்தொடுவாய் மனிதக்குழி விவகாரம் போராட்டம் முன்னெடுப்பு!

0
125

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரத்துக்கு நீதி கோரியும் சர்வதேச நிபுணத்துவம் மற்றும், கண்காணிப்பை வலியுறுத்தியும் தண்ணிமுறிப்பு குருந்தூர்மலை விவகாரம் உள்ளிட்ட தமிழர் தாயகத்தில் இடம்பெறும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராகவும் இன்று வெள்ளிக்கிழமை (28) முல்லைத்தீவில் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தினரால் முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டப் பேரணியானது, இறுதிக்கட்ட போரின்போது தமிழ் மக்கள் மக்கள்  இராணுவத்திடம் உறவுகளைக் கையளித்ததாகக் கூறப்படும் பகுதியான, முல்லைத்தீவு நீதிமன்றிற்கு அருகில் ஆரம்பமானது.

இவ்வாறு ஆரம்பமான ஆர்ப்பாட்டப் போரணி தொடர்ந்து நீதிமன்றுக்கு முன்பாகச் சென்று மாங்குளம் முல்லைத்தீவு வீதியூடாக மாவட்ட செயலகத்தை வந்தடைந்து. அங்கு மிகப் பாரிய அளவில் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.

மேலும் இவ்வார்ப்பாட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள்,தனியார் போக்குவரத்து சங்கங்கள்,வர்த்தக சங்கங்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், பெருந்திரளான பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் வெள்ளிக்கிழமை (28) போராட்டம்  மற்றும் கதவடைப்புப் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. 

இதனையடுத்து, யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊழியர் சங்கமும், யாழ்ப்பாண வணிகர் கழகம், தனியார் பேரூந்து நிலைய உரிமையாளர்கள் சங்கம், முச்சக்கரவண்டிகள் சாரதிகள் சங்கம், வியாபார ஸ்தாபனங்கள், அங்காடி கடைத்தொகுதிகள் ஆகியன இணைந்து இன்றையதினம் பூரண கதவடைப்புப் போராட்டத்திற்கு ஆதரவு செலுத்தியுள்ளன.

யாழ்ப்பாண மாநகர பகுதிகளிலும் வியாபார நிலையங்கள், அங்காடி கடைத்தொகுதிகள் என்பன பூட்டப்பட்டு இருந்ததன. கதவடைப்புக்கு ஆதரவு செலுத்தும் வகையில் தனியார் பேருந்துகள், முச்சக்கரவண்டிகள் என்பவற்றின் சேவைகள் முடக்கப்பட்டுள்ளன.

காலா காலமாக தமிழினத்தின் மீது இனவழிப்பை மேற்கொண்டு வரும் சிங்கள பேரினவாதமானது மனித புதைகுழிகளையே தமிழ் மக்களுக்கு பரிசாக கொடுத்துள்ளது. செம்மணியில் ஆரம்பித்த மனித புதைகுழியானது இன்று கொக்குத்தொடுவாய் வரை நீண்டுள்ளது  என வடக்கு கிழக்கு மாகாண வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் தெரிவித்துள்ளது.

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரத்துக்கு நீதி கோரியும், சர்வதேச நிபுணத்துவத்தை, கண்காணிப்பை வலியுறுத்தியும் தண்ணிமுறிப்பு குருந்தூர்மலை விவகாரம் உள்ளிட்ட தமிழர் தாயகத்தில் இடம்பெறும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராகவும் இன்று முல்லைத்தீவில் இடம்பெற்ற  கண்டன ஆர்ப்பாட்டத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

1984   டிசம்பர்   15   ஆம்   திகதி   கொக்குத்தொடுவாய்   மற்றும்   அதனை   அண்டிய முல்லைத்தீவின் தெற்கு எல்லைக்கிராமங்களில் 131 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். அந்தப்படுகொலையுடன் கொக்குத்தொடுவாய் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான தமிழர்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டனர். அதன் பின்னர் சிங்கள இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் அப்பிரதேசம் இருந்தது. போர்  முடிந்த பின்னரே அங்கு மக்கள் குடியேற்றப்பட்டனர். எனவே போர் நடந்த காலப்பகுதிக்குள் தான் இந்தப் புதைகுழி தோன்றியிருக்க  வேண்டும். அதைவிட போர்க்காலத்தில் பயன்படுத்தப்பட்ட உடைகளும் சான்றுப் பொருட்களாக கிடைத்திருக்கின்றன.  இவ்வாறான  நிலையில்  அங்கு காணப்பட்ட இந்தப் புதைகுழி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் புதைகுழிகளாக இருக்கலாம் என்ற அச்சம் இப்போது மேலோங்கி வருகின்றது.

மன்னார்  திருக்கேதீஸ்வரம் மனித  புதைகுழி  தொடர்பான  வழக்கு  நீண்டகாலமாக  உண்மை கண்டறியப்படாமல்   இலங்கைப்   பேரினவாத   அரசின்   நீதித்துறையால்   மூடி   மறைக்கப்பட்டுவருகின்றது.  எனவே  முல்லைத்தீவு  மாவட்டத்தின்  கொக்குத்தொடுவாய்  பகுதியில்  உள்ள மனிதப்புதைகுழி    அகழ்வுப்பணி    சர்வதேச    நியமத்தின்    அடிப்படையிலும், சர்வதேச கண்காணிப்பின்  ஊடாகவும்  மேற்கொள்ளப்பட  வேண்டும்  என  தமிழ்  மக்களாகிய  நாம் வலியுறுத்துகின்றோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here